நஞ்சன்கூடு அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வரலாறு

Nanjundeswarar3

நஞ்சுண்டேஸ்வரர்:
இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இங்கு மூலவராக இருக்கும் சிவலிங்கத்தின் மீது பரசுராமரால் வெட்டப்பட்ட கோடு இருக்கின்றது.  அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட அசுரன் ஒருவனை விழுங்கிய காரணத்தால் சிவன் இங்கு உக்கிரமான நிலையில் இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை  தணிக்க தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இத்திருத்தலத்தில் சுக்கு, வெண்ணெய், சர்க்கரை இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து ‘சுகண்டித சர்க்கரை’ என்ற பெயரில் பிரசாதமாக அந்த சிவனுக்கு நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மகரிஷி முனிவர் உச்சிக்கால பூஜையை செய்ய வருவதாக ஐதீகம் ஒன்று உண்டு. நோய்களை குணப்படுத்தும் சக்தியானது இந்த சுகண்டித சர்க்கரைக்கு உள்ளதால் இந்த சிவபெருமானை ‘ராஜ வைத்தியர்’ என்ற மற்றொரு பெயர் கொண்டும் அழைக்கிறார்கள்.

Nanjundeswarar

இந்தக் கோவிலில் இருக்கும் வீரபத்திரர் சுவாமி மிகவும் புகழ்பெற்ற மூர்த்தியாக திகழ்கின்றார். இவரின் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு இவைகளை ஏந்தி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். இந்த வீரபத்திரர் சுவாமியுடன் பத்திரகாளி அம்மன் தான் இருக்கவேண்டும். ஆனால் மாறாக தாட்சாயினி இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வீரபத்திரரின் வலது பக்கத்தில் தட்சன் இருக்கின்றார். அதாவது வீரபத்திரர், தாட்சாயணி, தட்சன் இவர்கள் மூவரும் தாமரை பீடத்தின் மீது நின்றவாறு காட்சி தருகின்றனர். இத்தளத்தில் திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகதம் லிங்கம் இருப்பது மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

வீரபத்திரர் உடன் தாட்சாயிணி இருப்பதற்கு என்ன காரணம்? தாட்சாயினியின்(பார்வதி) தந்தைதான் தட்சன். தட்சன் ஒருமுறை தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினார். தன் தந்தையிடம், ‘தன் கணவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்துவது தவறு’ என்று கூறி யாகத்தை நிறுத்தும்படி சொன்னாள் தாட்சாயிணி. இதனால் கோபமடைந்த தட்சன் தாட்சாயணியை அந்த இடத்திலேயே அவமானப்படுத்தி விட்டார். அவமானத்தை தாங்க முடியாத தாட்சாயணி யாககுண்டத்தில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதனை அறிந்து கொண்ட சிவபெருமான் தன் கோபத்தை ஒன்றாக்கி வீரபத்திரரை உருவாக்கினார். அந்த வீரபத்திரர் கோபத்தோடு யாகம் நடந்த இடத்திற்கு சென்று, தட்சனின் தலையை துண்டித்து, யாககுண்டத்திலிருந்து தாட்சாயணியை  தூக்கிக்கொண்டு கோரதாண்டவம் ஆடினார். இந்நிலையில் செய்வது என்னவென்று அறியாமல் இருந்த தட்சனின் மனைவி பிரசுத்தா தேவி, சிவனிடம் தஞ்சம் அடைந்தாள். தன் கணவரையும், மகளையும் உயிர்ப்பித்து தர வேண்டிக் கேட்டுக் கொண்டாள். அவளது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தட்சனையும், தாட்சாயிணியையும், மீண்டும் உயிர்பெறச் செய்தார். தாய் தந்தையர் இருவரும் சேர்ந்து தாட்சாயணியுடன் காட்சி தந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு வீரபத்திரர், தாட்சாயிணியுடன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார் என்பதாக கூறுகிறது வரலாறு.

Nanjundeswarar

தல வரலாறு
கொடுமையான விஷத்தன்மை கொண்ட கேசியன் என்னும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக தேவர்கள் சிவனிடம் தஞ்சம் அடைந்தனர். சிவனும் தேவர்களும் சேர்ந்து ஒரு சிறிய நாடகத்தை நடத்தினார். தேவர்கள் கபிலா, கவுண்டினி, மணிகர்ணிகை என்ற பெயர்  கொண்ட மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஒரு யாகம் நடத்தப் போவதாகவும், அந்த யாகத்திற்கு அசுரனை அழைத்து யாக குண்டத்தில் வீழ்த்தி வதம் செய்ய ஒரு நாடகத்தை திட்டம் தீட்டினர். அதுபடியே யாகமும் நடந்தது. அசுரனும் அந்த யாகத்திற்கு வருகை தந்தான். அந்த அசுரனை தேவர்கள் வரவேற்பது போல நாடகம் ஒன்றினை அரங்கேற்றி, தக்க சமயத்தில் யாககுண்டத்தில் உள்ள நெருப்பில் அசுரனை தள்ளி விட்டனர். அப்போது சிவன் அக்னி வடிவில் மாறி, விஷத்தன்மை கொண்ட அசுரனை விழுங்கி விட்டார். இதனால் தேவர்கள் அந்த இடத்திலேயே சிவபெருமானை மக்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டனர். இதன் மூலம் சிவபெருமான் அந்த இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி மக்களுக்கு காட்சி தந்தார். விஷத்தன்மை கொண்ட அசுரனை விழுங்கியதால் இந்த ஈஸ்வரனுக்கு ‘நஞ்சுண்டேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது.

- Advertisement -

Nanjundeswarar

சிறிது நாட்களுக்குப் பின்பு இயற்கை சீற்றத்தினால் இந்த லிங்கமானது மறைந்துவிட்டது. தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் வேண்டி பரசுராமர் இந்த லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக வந்தார். ஆனால் லிங்கம் அந்த இடத்தில் இல்லை. செய்வதறியாது தவித்த பரசுராமர் அந்த இடத்திலிருந்த செடிகொடிகளை எல்லாம் அகற்றி சுத்தம் செய்ய தொடங்கினார். அந்த சமயம் ஓரு இடத்தில் செடியை வெட்டிய போது, அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்தது. பயந்துபோன பரசுராமர் செடிகளை விலக்கி பார்த்தார். அந்த இடத்தில் ஒரு லிங்கம் இருந்ததை அறிந்துகொண்டார். செய்த தவறுக்கு மன்னிப்பை சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார். அந்த சமயம் சிவபெருமான் பரசுராமருக்கு காட்சி தந்து, பாவ விமோசனம் அளித்தார். அதன்பின்பு பரசுராமரால் இந்த லிங்கம் திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பரசுராமரின் கையால் வெட்டிய காயமானது இன்றுவரை சிவலிங்கத்தில் தெரிகிறது.

செல்லும் வழி:
மைசூரில் இருந்து கோவை செல்லும் வழியில் 23 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்:
காலை 06.30AM – 12.30PM
மாலை 04.00PM – 08.00PM

முகவரி:
அருள்மிகு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்,
நஞ்சன்கூடு-571 301.
மைசூர்,
கர்நாடக மாநிலம்.

தொலைபேசி:
+91-8221-226 245, 99804 15727.

இதையும் படிக்கலாமே
நீங்கள் சேமித்த பணத்தை இந்த இடத்தில் மறைத்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Nanjundeshwara temple in mysore. Nanjundeshwara temple nanjangud timings. Nanjundeshwara temple nanjangud history. Sri nanjundeshwara temple nanjangud.