தந்தைக்கு உபதேசம் செய்து குருவாக திகழ்ந்தவர் தான் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக திகழக்கூடியது கிருத்திகை நட்சத்திரம். இந்த கிருத்திகை நட்சத்திரம் என்பது வியாழக்கிழமை உடன் சேர்ந்து வரும் பொழுது அதற்கு இன்னும் அதிக பலன் இருக்கிறது. காரணம் வியாழக்கிழமை என்பது குருவிற்கு உரிய கிழமை. அப்படிப்பட்ட நாளில் நாம் செய்யக்கூடிய இந்த குரு வழிபாடு கோடி நன்மைகளை நமக்கு தரும். அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கோடி நன்மை தேடி வர வழிபாடு
குருவருள் கிடைத்தால் திருவருள் கிடைத்ததற்கு சமம் என்று கூறப்படுகிறது. தெய்வத்திற்கு முன்பாக குருவை வணங்க வேண்டும் என்று நம்முடைய புராணங்கள் கூறுகின்றது. மேலும் குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த குருவின் அருளை நாம் அனைவரும் பரிபூரணமாக பெற வேண்டும். அதனால் ஆன்மிக ரீதியாக நாம் நம்முடைய மனதிற்கு பிடித்தமான ஏதாவது ஒரு குருவை மானசீகமாக ஏற்றுக் கொண்டு அவர்களை தினமும் வழிபாடு செய்ய வேண்டும். சரி இப்பொழுது கிருத்திகை நட்சத்திரத்துடன் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று எப்படி குருவை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
கிருத்திகை நட்சத்திரம் என்பது வியாழக்கிழமை மதியம் 3 மணிக்கு மேல் தான் ஆரம்பிக்கிறது. வியாழக்கிழமையில் மொத்தம் மூன்று நேரங்கள் குரு ஹோரை என்பது வரும். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள். இந்த குரு ஹோரை கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரக்கூடிய நேரம் தான் நமக்கு முக்கியமான நேரம். அப்படி பார்க்கும் பொழுது இரவு 8 மணியிலிருந்து 9 மணி என்பது நாம் வழிபாடு செய்வதற்குரிய நேரமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் வழிபாடு செய்ய இயலவில்லை என்று நினைப்பவர்கள் காலையில் வரக்கூடிய ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் இருக்கக் கூடிய குரு ஹோரையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதலில் முருகப் பெருமானை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த பிள்ளையாருக்கு முன்பாக அச்சு வெல்லத்தை வைக்க வேண்டும். பிறகு நீங்கள் யாரை குருவாக நினைத்திருக்கிறீர்களோ அவர்களை மனதார நினைத்துக் கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
வழிப்பாட்டை நிறைவு செய்த பிறகு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்திருக்கிறோம் அல்லவா அந்தப் பிள்ளையாரிலிருந்து சிறிதளவு மட்டும் எடுத்து தண்ணீர் ஊற்றி கலந்து நம்முடைய நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். மீதம் இருக்கக்கூடிய மஞ்சளில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து நன்றாக சேர்த்து பிடித்து அதை நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த முறையில் நாம் குருவை கிருத்திகை நட்சத்திரத்தில் வரக்கூடிய குரு ஹோரையில் வழிபாடு செய்யும்பொழுது குருவின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நமக்கு நன்மைகள் பல உண்டாக்கும்.
குரு மந்திரம்
ஓம் குருவே போற்றி
ஓம் குருவே வாழ்க
ஓம் குருவே வெல்க
ஓம் குருவே சரணம்
ஓம் குருவே அனைத்தும்
ஓம் குருவே துணை
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக வைகுண்ட ஏகாதசி பரிகாரம்
வாழ்க்கையில் பல நன்மைகளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் குருவின் அருளைப் பெற வேண்டும். அப்படி குருவின் அருளை பெறுவதற்குரிய அற்புதமான நாளாக தான் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி திகழ்கிறது. அன்றைய தினத்தில் இந்த முறையில் குருவை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.