வயதான பிறகுதான் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும், என்ற நிலைமை மாறி இப்போது இளம் வயதிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. எனவே இந்த நரைமுடியை மறைப்பதற்காக பலரும் பல ரசாயனங்கள் கலந்த செயற்கையான ஹேர் டையை பயன்படுத்தி வருகின்றார்கள். இவ்வாறு வேதியல் பொருட்கள் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் நமக்கு குறைந்த நாட்களுக்கு மட்டுமே முடியின் நிறம் கருப்பாக மாறுகிறது. பின்னர் கருமை நிறம் மறைந்து மறுபடியும் நரை முடி வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல நாட்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் நரைமுடி அதிகமாகிக் கொண்டே செல்லும். அத்துடன் முடி உதிர்தல் ஏற்பட்டு முடியின் வலிமை குறைய ஆரம்பிக்கும். இவ்வாறு நரை முடி பிரச்சனை போக முடி கொட்டும் பிரச்சனையும் சேர்ந்து வந்துவிடும். எனவே செயற்கையான டையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு இயற்கையான ஹேர்டையை தொடர்ந்து பயன்படுத்தினால் உங்கள் நிறை முடி முழுவதும் கருமையாக மாறிவிடும். வாருங்கள் இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
அவுறி பவுடர் – 3 ஸ்பூன், மருதாணி பவுடர் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சோளமாவு – இரண்டு ஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்.
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மூன்று ஸ்பூன் மருதாணிப் பவுடர் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை காற்று புகாத வண்ணம் இறுக்கமாக மூடி வைத்து, இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடவேண்டும்.
பிறகு மறுநாள் காலை இந்த மருதாணி கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு, ஹேர் பிரஷ் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தலைமுடியின் மீது பூசிக் கொள்ள வேண்டும். பிறகு இதனை மூன்று மணிநேரத்திற்கு அப்படியே ஊற வைத்து, தலை முடியை தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். தலைமுடியை அலசும் பொழுது ஷாம்பூ, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
அதன் பிறகு 3 ஸ்பூன் அவுரி இலை பவுடரை எடுத்துக் கொண்டு, அதனுடன் இரண்டு ஸ்பூன் சோள மாவு, ஒரு பின்ச் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை மறுபடியும் நரை முடியின் மீது தடவி வைத்து, இரண்டு மணி நேரத்திற்குப் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் தலை முடியை தண்ணீரில் அலச வேண்டும். அதன் பின்னர் மறுநாள் நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் முடி இயற்கையாகவே கருமையாக மாறிவிடும். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது.