நவராத்திரியில் வரக்கூடிய ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒவ்வொரு தேவியரை நாம் வழிபாடு செய்வோம். அந்த வகையில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனை வழிபாடு செய்து விட்டோம். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும் வழிபாடு செய்து விட்டோம். கடைசியாக வரக்கூடிய மூன்று நாட்கள் நாம் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதற்குரிய முதல் நாளான இன்று செய்ய வேண்டிய பூஜையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு
கல்வி அறிவியல் சிறந்து விளங்க வேண்டும், படிப்பு திறன் அதிகரிக்க வேண்டும், ஞாபகசக்தி அதிகரிக்க வேண்டும், புத்தி கூர்மையோடு செயல்பட வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் ஆன ஏழு, எட்டு, ஒன்பது இந்த நாட்களில் நாம் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யும்பொழுது சரஸ்வதி தேவியின் அருளால் நாம் மட்டுமல்லாமல் நம்முடைய பிற்கால சந்ததியினரும் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி அடைவார்கள்.
செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நவராத்திரியின் 7ஆம் நாள் இன்றைய நாளில் நாம் சரஸ்வதி தேவியை சாம்பவி தேவியாகவும், வாக் தேவியாகவும் வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் நவ துர்கைகளில் காளாத்ரி துர்கையை வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இருக்கக்கூடிய ஞாபக மறதி முற்றிலும் நீங்கி ஞாபக சக்தி அதிகரிக்கும். அதேபோல் செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களிலும் புத்தி கூர்மையுடன் செயல்படுவார்கள்.
இந்த பூஜையை மாலை 5:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு அம்மனை அலங்காரம் செய்வதற்கு இளஞ்சிவப்பு நிறத் துணியை பயன்படுத்த வேண்டும். அலங்காரத்திற்கும் அர்ச்சனைக்கும் தாழம்பூ, பாரிஜாதம், தும்ப இலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். நெய்வேத்தியமாக அம்மனுக்கு பேரிச்சம் பழத்தை வைப்பதோடு எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் போன்றவற்றை வைக்க வேண்டும்.
அம்மனுக்கு முன்பாக 7 நல்லெண்ணெய் தீபங்களை வடக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைத்துவிட்டு வீட்டில் படிக்கின்ற குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களின் புத்தகத்தையும் வைத்து “ஓம் சாம்பவி தேவியே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு “ஓம் நமோ காளாத்ரி தேவியே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 48 முறை கூறி அர்ச்சனை செய்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலான ரவிக்கை துணி, பேரிச்சம்பழம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை பிரசாதமாக கொடுத்து மாங்கல்ய செட்டையும் தந்து வழி அனுப்ப வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினையை தீர்க்கும் கடுகு எண்ணெய்
கல்வியில் சிறந்தவளாக திகழக்கூடிய சரஸ்வதி தேவியை நவராத்திரியின் ஏழாம் நாள் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிப்பதோடு புத்திக் கூர்மையும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.