பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக தான் நவராத்திரி நாட்கள் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக முப்பெரும் தேவியர்கள் என்று கூறக்கூடிய துர்க்கை, லஷ்மி, சரஸ்வதி இவர்களை வழிபாடு செய்து வாழ்க்கையில் வளங்களை பெறுவதற்குரிய அற்புதமான நாட்களாக தான் நவராத்திரி நாட்கள் திகழ்கின்றன. அப்படிப்பட்ட நவராத்திரி நாட்களில் முதல் நாள் அன்று அம்மனை எந்த முறையில் நெய்வேத்தியம் வைத்து மந்திரம் கூறி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரி முதல் நாள் வழிபாடு
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி தாயாரை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நவ துர்க்கைகளை நினைத்து நவராத்திரி நாட்களில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நவராத்திரியின் முதல் நாள் அன்று நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
நவராத்திரியின் முதல் நாள் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி வருகிறது. வீட்டில் கொலு வைத்திருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் காலையிலேயே தீபமேற்றி சாம்பிராணி தூபம் காட்டி ஏதாவது ஒரு நெய் வைத்தியத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மாலை நேரத்தில்தான் பூஜையை செய்ய வேண்டும். கலசம் வைத்திருப்பவர்கள், தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்கள் மற்றும் அம்மனின் படத்தை வைத்து வழிபாடு செய்பவர்கள் மாலை நேரத்தில் நெய்வேத்தியம் வைத்து பூஜையை மேற்கொள்ளலாம். முதல் நாள் பூஜை செய்யும் பொழுது கலசத்தையும், அம்மன் படத்தையும், தீபத்தையும் மகேஸ்வரியாக பாவித்து நாம் செய்ய வேண்டும். மகேஸ்வரியை வழிபாடு செய்வதன் மூலம் எதிர்கால பயம் முற்றிலும் நீங்கும். எது நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை உண்டாகும்.
இந்த வழிபாட்டை மாலை 5:30 மணியிலிருந்து 9:30 மணிக்குள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் வழிபாட்டிற்கு நாம் நெய்வேத்தியமாக வெள்ளை கொண்டை கடலை சுண்டலை வைக்கலாம், சர்க்கரை பொங்கலை வைக்கலாம், கண்டிப்பான முறையில் வெண்பொங்கலை வைக்க வேண்டும். மேலும் கலசம் வைத்திருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கலசத்திற்கு மேல் பச்சை நிற துணியை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். அதேபோல் வீட்டிற்கு சுமங்கலி பெண்களை அழைப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பச்சை நிற துணியை தாம்பூலம் தரும் பொழுது சேர்த்து தர வேண்டும்.
அடுத்ததாக அன்றைய தினம் நவராத்திரியின் முதல் நாள் அம்மனுக்கு சாத்துக்குடி பழத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அர்ச்சனை செய்வதற்கு மல்லிகைப்பூ, அரளிப்பூ, வில்வ இலை போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். கலசத்திற்கு முன்பாகவோ அல்லது கொழுவிற்கு முன்பாகவோ அல்லது அம்மனின் படத்திற்கு முன்பாகவோ 3 தீபங்களை கிழக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைத்துவிட்டு பிறகு அர்ச்சனை செய்ய வேண்டும்.
முதல் நாள் அர்ச்சனை செய்வதற்கு கூற வேண்டிய மந்திரம் “ஓம் ஸ்ரீம் மகேஸ்வரி தாயே நமஹ” மேலும் முதல் நாள் நவ துர்க்கைகளில் நாம் வணங்க வேண்டிய துர்க்கையாக சைலபுத்திரி துர்க்கை திகழ்கிறாள். அதனால் அவளுக்குரிய மந்திரமாக “ஓம் தேவி சைல புத்திரி நமஹ” என்னும் மந்திரம் திகழ்கிறது. மகேஸ்வரி மந்திரத்தை 108 முறையும் சைலபுத்திரி மந்திரத்தை 11 முறையும் கூறி அர்ச்சனை செய்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு சாத்துக்குடி, வெண்பொங்கல் மற்றும் பச்சை நிற துணியை கொடுத்து வழி அனுப்ப வேண்டும்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாதம் புதன்கிழமை பரிகாரம்
பிரம்மாண்டமாக பூஜை செய்வதாக இருந்தாலும் சரி, எளிமையான முறையில் பூஜை செய்வதாக இருந்தாலும் சரி, அது அவர்களுடைய பொருளாதாரத்தை பொறுத்து அமையும். எந்த பூஜையாக இருந்தாலும் முழு மனதுடன் செய்யும்பொழுது அந்த பூஜைக்குரிய பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.