பெண்களுக்கு ஒன்பது நாள் நவராத்திரி என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் ஆன நவராத்திரி நாட்கள் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய நாட்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த நாட்களில் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற முப்பெரும் தேவியரையும் வழிபாடு செய்யும் வழக்கத்தை பலரும் வைத்திருப்பார்கள். அப்படி நவராத்திரி நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டிய சில வழிபாட்டு முறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி புரட்டாசி மாதத்தின் அமாவாசை அதற்கு மறுநாள் அதாவது செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி நவராத்திரி ஆரம்பம் ஆகும். இந்த நவராத்திரி சமயத்தில் பலரும் பலவிதமான வழிபாட்டு முறைகளில் ஈடுபடுவார்கள். அப்படி வழிபாட்டு முறையில் ஈடுபடக் கூடியவர்கள் எப்பொழுதும் போல் அவர்களுடைய வழிபாட்டு முறையை பின்பற்றலாம். புதிதாக நவராத்திரி வழிபாட்டை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பின்வரும் இந்த ஐந்து வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலே முப்பெரும் தேவியரின் அருளைப் பெற முடியும்.
புதிதாக நவராத்திரி வழிபாட்டை செய்ய விரும்புபவர்கள் தங்களுடைய வீட்டில் கொலு அமைத்து வழிபாடு செய்யலாம். அப்படி கொலு வைத்து வழிபாடு செய்பவர்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் கொலுவைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கொலு வைக்க விரும்புபவர்கள் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, 11 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் கொலு படிக்கட்டை அமைத்து அதற்கேற்றார் போல் கொலு பொம்மைகளை வைக்க வேண்டும். கொலுவை வைப்பதற்கு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி மாலை 5:30 மணியிலிருந்து 7:30 மணி வரையும், செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரமும், காலை 6:15 இருந்து 7 15 மணி வரையும் அல்லது 9:15 இல் இருந்து 10:15 மணி வரையும் நல்ல நேரமாக கருதப்படுகிறது.
கொலு வைக்க இயலாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய வீட்டிலேயே எளிமையான முறையில் கலசத்தை வைத்து அந்த கலசத்தியே அம்மனாக பாவித்து ஒன்பது நாட்களும் வழிபாடு செய்யலாம். கொலு வைக்க முடியாது கலசமும் வைத்து வழிபாடு செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய எந்த ஒரு அம்மன் படமாக இருந்தாலும் அந்தப் படத்தை வைத்து ஒன்பது நாட்களும் பூஜை செய்யலாம். அடுத்ததாக அம்மன் படத்திற்கு முன்பாக அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் முறையும் இருக்கிறது.
இந்த அகண்ட தீபம் என்பது ஒன்பது நாட்களும் தொடர்ச்சியாக எரிய வேண்டும். பத்தாவது நாள் விஜயதசுமி நாள் அன்று தான் இந்த அகண்ட தீபத்தை குளிர வைக்க வேண்டும். 24 மணி நேரமும் எரிவதற்கு ஏற்றார் போல் ஒரு பெரிய மண் விளக்காக எடுத்து வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊத்தி கனமான பஞ்சுத்திரி போட்டு கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தையே முப்பெரும் தேவியராக பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். மேற்சொன்ன இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்ற இயலாதவர்கள் தினமும் அதாவது நவராத்திரி தொடங்கிய நாளிலிருந்து 9 நாட்களும் தினமும் 9 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இப்படி அன்னதானம் செய்வதன் மூலம் யாரோ ஒருவர் ரூபத்தில் அம்மனே வந்து நாம் கொடுக்கக்கூடிய அன்னதானத்தை ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்
நவராத்திரி சமயத்தில் ஏதாவது ரூபத்தில் முப்பெரும் தேவியையும் வழிபாடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மேற் சொன்ன ஐந்து வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றி செய்ய முப்பெரும் தேவியரின் அருளால் அவர்களின் வாழ்க்கை வளமானதாக மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.