ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விதமான தெய்வங்களுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. அந்த திதிக்குரிய தெய்வத்தை அன்றைய நாளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை சிறப்புற செய்து எளிதில் வெற்றி பெறுவதற்கு முருகப்பெருமானை முருகப்பெருமானுக்குரிய சஷ்டி திதி அன்று வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அந்த வகையில் வளர்பிறை சஷ்டி நாளன்று ஏலக்காயை வைத்து எப்படி வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
நினைத்தது நடக்க சஷ்டி வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். ஒவ்வொரு விதமான செயல்கள் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அது எப்பேற்பட்ட செயலாக இருந்தாலும் நியாயமான கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் அதை முருகப்பெருமான் விரைவிலேயே நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. அப்படி முருகப்பெருமான் நாம் நினைத்ததை நிறைவேற்றுவதற்கு அவருக்குரிய தினமான சஷ்டி திதி அன்று வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது சில சூட்சமமான பொருட்களையும் பயன்படுத்த வேண்டும்.
அந்த வகையில் மே மாதம் மூன்றாம் தேதி சனிக்கிழமை அன்று வளர்பிறை சஷ்டி என்பது வருகிறது. அன்றைய நாளில் ராகுகால, எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் வீட்டில் இருக்கக் கூடிய முருகப்பெருமானின் வேல், சிலை, படம் போன்றவற்றை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து செவ்வரளி மலர்களால் அல்லது செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இவை இரண்டுமே கிடைக்கவில்லை என்பவர்கள் வாசனை மிகுந்த மலர்களை பயன்படுத்தி அலங்காரம் செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக நல்ல நிலையில் விதைகள் எதுவும் தெரியாமல் இருக்கக்கூடிய ஏலக்காயாக 21 ஏலக்காயை எடுத்து அதை பச்சை நிற நூலால் மாலையாக கட்ட வேண்டும். வீட்டில் எவ்வளவு பெரிய சிலை இருக்கிறதோ அல்லது படம் இருக்கிறதோ அதற்கேற்றார் போல் இந்த ஏலக்காய் மாலையை கட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதை முருகப் பெருமானின் சிலைக்கோ படத்திற்கோ, வேலிற்கோ போட்டுவிட்டு முருகப் பெருமானுக்கு முன்பாக மூன்று நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். அடுத்ததாக தேனை முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு “ஓம் சரவணபவ போற்றி ஓம்” என்னும் முருகப்பெருமானின் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.
பிறகு உங்களுடைய வேண்டுதலை முருகப் பெருமானிடம் முன்வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட வேண்டும். மறுநாள் காலையில் நாம் முருகப்பெருமானுக்கு சாற்றிய ஏலக்காய் மாலையை எடுத்து அதில் இருக்கக்கூடிய ஏலக்காயை சமையலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது அதை நுணுக்கி சாம்பிராணி தூபம் போடவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:சகல சௌபாக்கியம் கிடைக்க உதவும் சஷ்டி தீபம்
எளிமையான இந்த ஏலக்காய் வழிபாட்டை வளர்பிறை சஷ்டி நாளன்று முருகப்பெருமானை மனதார நினைத்து செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்ததை முருகப்பெருமான் நிறைவேற்றுவார் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.