கடவுளுக்கு நம்மால் படைக்கப்பட்டாலும், இவ்வுலகில் உள்ள அனைத்தும் கடவுளால் நமக்கு படைக்கப்பட்டவை தான் என்பதை நாம் எப்போதும் மறப்பது கிடையாது. பூக்கின்ற பூக்கள் எல்லாமே இறைவனின் பாதங்களை சேர்வதில்லை. அது போல படைக்கப்பட்டுள்ள அத்தனை பொருட்களும், கடவுளுக்கு சமர்ப்பணம் ஆவதும் இல்லை. தேங்காய், பழம் இல்லாமல் பெரும்பாலான பூஜைகள் நடைபெறுவதும் கிடையாது. இவ்விரண்டு பொருட்களுக்கு மட்டும் அப்படி என்ன மதிப்பு? ஏன் ஸ்பெஷலாக கடவுளுக்கு படைக்கிறோம்? என்பதை பற்றிய சிறு தொகுப்பினை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.
ருசி மிகுந்த கனிகள் எவ்வளவோ உலகில் இருந்தாலும், முக்கனிகளில் ஒன்றாக விளங்கக்கூடிய இந்த வாழைப்பழத்திற்கு தனித்துவம் உண்டு. எல்லா இடங்களிலும் பரவலாக எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு கனி வாழைப்பழம். ஏழைக்கும் எட்டும் கனியாக இருப்பது வாழைப்பழம். வாழைப்பழத்தினை தின்றுவிட்டு மீதி பாகத்தினை மண்ணில் போட்டால் அது முளைப்பது கிடையாது. விதைகள் இருந்தும் மற்ற பழங்களைப் போல் மிச்சப்பட்ட பாகங்கள் மூலம் புதிதாக உருவாவது கிடையாது.
அதே போல தான் தேங்காயும்.. தேங்காயின் மிச்சப்பட்ட பாகங்கள் எதுவும் புதிய மரத்தை முளைக்க செய்யாது. உடைக்கப்படாத தேங்காயும், உரிக்கப்படாத வாழைப்பழமும் தான் கடவுளுக்கு படைக்கப்படுகிறது. இவை முழுமையாக மண்ணில் புதைத்தால் தான் முளைத்து, வளர்ந்து கனி தரும். அதனால் இது மிகவும் புனிதத்துவமாக கருதப்படுகிறது.
புனிதம் வாய்ந்த பொருட்கள் இறைவனடி சேரும். வாழைப்பழமும், தேங்காயும் கறை படியாத புனிதம் வாய்ந்த பொருட்கள் என்பதால் கடவுளிடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாக தேங்காயில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு. முக்கண் உள்ள தேங்காய் ஈசனையும் நினைவுபடுத்துகிறது. ஆணவம், வன்மம், மாயை ஆகிய மூன்றையும் ஒழித்து இறைவனின் பாதத்தில் சரணடைகிறோம் என்பதை உணர்த்தவே தேங்காய் படைக்கப்படுகிறது.
வாழைப்பழம் மட்டும் அல்லாமல் வாழை இலையிலும் நிறைய நற்குணங்கள் நிறைந்துள்ளன. வாழை இலை பாக்டீரியா கிருமிகளை அழிக்கக் கூடியது, அதனால் தான் வாழை இலையில் எந்த ஒரு நைவேத்திய உணவினையும் படைக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வாழை இலையில் சாதத்தை பரிமாறி, சம்மனங்கால் போட்டு வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. வாழைப்பழம் மற்றும் தேங்காய் இந்த இரண்டையும் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறிந்தால் அது மண்ணில் புதைந்து வேர் விட்டு வளர்வது கிடையாது, இதனால் புனிதத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தகைய புனிதம் நிறைந்த இவ்விரண்டு மரமும் வீட்டில் இருந்தால் சகல ஐஸ்வர்யங்களும் அவர்களை தேடி வரும் என்பது ஐதீகம்.
இதையும் படிக்கலாமே:
பணக்கஷ்டம் தீர்க்கும் ஏலக்காய் பரிகாரம்
வாழையடி வாழையாய் வம்சம் தழைக்க வாழை மரமும், வாழ்க்கை ஓங்கி உயர்ந்து செழித்து வளர தென்னையும் வீட்டில் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய மரங்கள், மேலும் இவ்விரண்டையும் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர சகல ரோகங்களும் நிவாரணம் பெறும். உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். வறண்டு போகாமல் உடலை ஈரப்பதத்தோடு வைத்துக் கொள்ளும். தேகத்திற்கு கவசம் போல செயல்படும் இந்த புனிதம் நிறைந்த வாழைப்பழம் மற்றும் தேங்காயை ஒவ்வொரு பூஜையிலும் தவறாமல் வீட்டில் படைத்து வழிபடுங்கள், சகல சம்பத்துக்களும் உங்கள் வசமாகும்.