வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்களும் தைரியமாக சாப்பிட இந்த ஒரு சாதத்தை மட்டும் செய்து கொடுங்கள். இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடும் சுவையில் அற்புதமாக இருக்கும்

omam1
- Advertisement -

இப்பொழுது வெயில் காலம் என்பதால் வெளியில் சென்று வந்தாலோ அல்லது வீட்டிலேயே இருந்தாலும் கூட உடல் சூடு என்பது அதிகரித்து விடும். எனவே வயிற்று வலி அஜீரண கோளாறு போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வர ஆரம்பிக்கும். அதுவும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ள வீட்டில் இந்தத் தொல்லை இருந்துகொண்டு தான் இருக்கும். இவ்வாறு வீட்டில் யாருக்காவது ஒருவருக்கு வயிற்று வலி, வாய்வு தொல்லை, அஜீரணக் கோளாறு இருந்தது என்றால் அன்றைய தினம் என்ன சமைப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் அவர்களுக்கு எந்த உணவு கொடுத்தாலும் தேவையற்ற பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயமும் ஏற்படும். அவ்வாறு இந்த பிரச்சனை உடனே சரியாகவும், அனைவரும் சாப்பிடவும் இந்த ஓமம் சாதத்தை மட்டும் செய்தால் போதும். வயிற்று வலி உள்ளவர்களும் சாப்பிடலாம், மற்றவர்களும் சாப்பிடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 150 கிராம், எண்ணெய் – 2 ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, இஞ்சி சிறிய துண்டு – 1, ஓமம் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் 150 கிராம் பாஸ்மதி அரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதில் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மறுபடியும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். பிறகு அடுப்பில் உலை வைத்து, அரிசியை சேர்த்து, முக்கால் பதம் வேக வைத்து, வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

பிறகு இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஓமம் சாதம் தயாராகிவிட்டது.

- Advertisement -