அருள்மிகு ஓமாந்தூர் மாசி பெரியண்ண சுவாமி திருக்கோவில் வரலாறு

பெரியண்ண சுவாமி:
இந்த கோவிலில் ஏகாம்பரேஸ்வரரும், அன்னகாமாட்சியும் மூலவராக பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். கொல்லிமலையில் மாசி பெரியசாமிக்கு இருக்கும் கோவில்களில் இந்த கோவில்தான் மிகவும் பெரிய கோவிலாக கருதப்படுகிறது. ஆகவே இக்கோவிலுக்கு ஓமாந்தூர் பெரிய கோவில் என்ற பெயர் வந்தது. ஆனால் இந்த கோவிலில் எந்த கடவுளுக்கும் சிலையை வைத்து வழிபடுவது கிடையாது. எல்லா இறைவனும் ஒளி வடிவிலேயே காட்சி தருகின்றனர். இதனால் மூலஸ்தானத்தில் விக்ரகங்கள் எதுவும் இல்லை. ஜோதி வடிவில் இருக்கும் இறைவனைத்தான் மக்கள் தரிசித்து வருகின்றார்கள். அன்னகாமாட்சி அம்மன், பெரியண்ண சுவாமி, ஏகாம்பரேஸ்வரர், தேவராய சுவாமிகள், கௌதாரி அம்மன், முனீஸ்வரர், கரட்டடியான், பச்சைநாச்சி அம்மன், சண்டிகேஸ்வரர், லாடப்ப சன்னதி, மதுரைவீரன், புது கருப்பு சாமி, பச்சாயி அம்மன், காத்தவராயன், பைரவர் இவர்களுக்கென்று தனித்தனி சந்நிதிகள் உள்ளது. மாசி கருப்பண்ண சுவாமி, நல்லேந்திரர் சுவாமி, ஜலகண்டேஸ்வரர், இவர்களுக்கென்று ஒரு தனி சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளது.

omandur-periya-koil1

இந்த கோவில்களில் ஜோதி வடிவில் இருக்கும் தெய்வங்களுக்கு காட்டப்படும் ஆரத்தியானது பக்தர்களுக்கு  தரப்படுவதில்லை. கோவிலில் மூலவர் ஜோதி வடிவில் இருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுவது இல்லை. அதற்கு பதிலாக அங்கு ஜோதி வடிவில் இருக்கும் தெய்வங்களுக்கு, விளக்கு ஏற்ற தேவையான நெய், எண்ணெயை காணிக்கையாக கொடுத்து வருகின்றனர். கோவிலில் பிரசாதமாக திருநீறுக்கு பதில் புற்றுமண் தரப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், மாத தொடக்க நாள், சதுர்த்தி, சஷ்டி இந்த நாட்களில் கோவில்கள் திறக்கப்படாது.

தல வரலாறு
பல நூறு வருடங்களுக்கு முன்பு கொல்லிமலை பகுதியில் காராளன் என்ற பெயர் கொண்ட 10 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். தற்சமயம் இந்தப் பகுதி புலியஞ்சோலை என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறுவனின் தொழிலானது மாடு மேய்ப்பது. அந்த சமயம் கொல்லிமலையில் உள்ள பெரியண்ண சுவாமியை மலையாள மக்கள் தான் வழிபட்டு வந்திருந்தனர். மலையாள பக்தர்கள் செய்யப்படும் பூஜையில் குறிப்பிட்டவர்களை தவிர, மற்றவர்கள், அந்த பூஜையில் அனுமதிக்கப்படுவதில்லை.  ஆனால் மலையாள பூஜை செய்யும் பூசாரியின் மகனும், காராளனும் நண்பர்களே. ஒரு முறை காராளன் மலையாள பூஜையை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். மலையாள பூசாரியின் மகன் இந்த காராளனின் நண்பன் அல்லவா? தன் நண்பனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக காராளனை, அந்த பூஜைக்கு ரகசியமாக அழைத்துச்சென்றான். காராளன் பார்க்கக் கூடாத பூஜையை பார்த்துவிட்டான்.

omandur-periya-koil

மலையாள பூசாரிக்கு பூஜை செய்யும் சமயத்தில் திடீரென்று அருள் வந்து, ‘இந்த பூஜையை வேற்று மனிதன் ஒருவன் பார்த்து விட்டான். அவனை உடனடியாக பலி கொடுத்தாக வேண்டும் என்று கூறினார்’. அந்த இடத்தில் இருந்த மற்றவர்கள் ஒளிந்துகொண்டு பூஜையை பார்த்த காராளனை கண்டுபிடித்து விட்டனர். ஒருவழியாக பஞ்சாயத்து நடந்து முடிந்தது காராளனை ஒரு இடத்தில் அடைத்து வைத்து, மறுநாள் காலை தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்தனர். பொழுதுவிடிந்தால் காராளனுக்கு  மரண தண்டனை.

- Advertisement -

ஆனால் காராளன் ஒரு பெரியண்ண சுவாமி, அன்ன காமாட்சியின் தீவிரமான பக்தன். தன்னை எப்படியாவது காக்க வேண்டும் என்று அந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டான். சோகத்திலேயே தன்னை மறந்து தூங்கியும் விட்டான்‌. அந்த சமயம், இந்த சிறுவனின் கனவில் வந்த பெரியண்ண சுவாமி, ‘இங்கிருந்து இரவோடு இரவாக தப்பி ஓடி விடு. அப்படி செல்லும் சமயத்தில் உன் மாடுகளையும், உன் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு ஓடிப் போ! ஆனால் நீ செல்லும் திசை தென்திசையாக இருக்க வேண்டும். உன் மாடுகள் எந்த திசையில் செல்கின்றதோ, அந்த திசையில் சென்று அந்த இடத்தில் தங்கி உன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இரு. எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து உன் மாடுகள் போகாமல் அந்த இடத்திலேயே வசிக்கின்றதோ, அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருகின்றதோ, அந்த இடத்தில்தான் பெரியண்ண சுவாமியாகிய நான் நிரந்தரமாக இருப்பேன்.’ என்று கூறிவிட்டு கனவில் இருந்து மறைந்தார் பெரியண்ண சுவாமி.

omandur-periya-koil2

பெரியண்ண சுவாமியின் வாக்குப்படி, தன்னை அடைத்து வைத்திருந்த அந்தப் பகுதியில் இருந்து தப்பித்து ஓடினான் காராளன். சுவாமி தன் கனவில் கூறியபடி தனது பயணத்தை தொடர்ந்தான். ஒரு நாள் மாடுகள் குன்னிமர தோட்டத்திற்கு வந்து அந்த இடத்திலேயே சுற்றி சுற்றி வந்தது. அந்த சமயம் எதிர்பாராமல் புயல் வீசுவது போன்று காற்று சுழற்றி அடித்தது. அப்போது பெரியண்ண சுவாமியை, தன் மனதார நினைத்து கொண்டான் அந்த சிறுவன். பெரியண்ணா சுவாமியும், அன்னகாமாட்சியும் அசிரீரி குரலில் ‘நாங்கள் இங்கேயே இருக்கப் போகிறோம். என் பக்தனான நீயும் இந்த இடத்திலேயே தங்கி கொள்ளலாம். என்று கூறினார்கள். இதனால் காராளனும் அந்த இடத்திலேயே தங்கி விட்டான். துறையூர் ஜமீன்தார் இந்த கோவிலுக்காக மண்டபத்தை கட்டிக் கொடுத்தார். இந்த இடம்தான் இன்று ஓமாந்தூர் கோவில் பெரியண்ண சுவாமி கோவிலாக திகழ்கின்றது. ஒரு சிறுவனின் குறையில்லாத பக்திக்காக, தன் இருக்கும் இடத்தையே மாற்றிக் கொண்டவர் தான் பெரியண்ண சுவாமிகள். உண்மையான பக்திக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்பது இங்கு நமக்கு தெரிகிறது.

செல்லும் வழி:
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஓமாந்தூர்.

தரிசன நேரம்:
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு மாசி பெரியண்ண சுவாமி திருக்கோவில்,
ஓமாந்தூர்,
திருச்சி.

தொலைபேசி:
+91-4327-235 640.

இதையும் படிக்கலாமே
விளக்கிற்கு இப்படி பொட்டு வைப்பதால் ஐஸ்வர்யம் பெருகுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Omandur masi periyanna swamy. Omandur temple history in tamil. Trichy omandur temple timings. Omandur periya kovil.