இந்த குழம்பு வைக்க ஒரு தக்காளி கூட வேண்டாம். தக்காளி இல்லாமல் சூப்பரான காரசாரமான வெங்காய குழம்பு வைப்பது எப்படி?

onion-kuzhambu
- Advertisement -

பெட்ரோலும் டீசலும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு தக்காளியின் விலை மளமளவென உயர்ந்து நிற்கின்றது. தக்காளி வாங்கி சமைக்கனுமா. அப்படின்னு நிறைய பேர் யோசிக்கிறீங்க. ஒரு தக்காளி கூட சேர்க்காமல் காரசாரமா ஒரு வெங்காய குழம்பு ரெசிபியை மிக மிக சுலபமாக செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுட சுட ஒரு குன்டான் சாதம் இருந்தாலும் அது காலியாகிவிடும். இட்லி தோசை சப்பாத்தி பூரி இவைகளுக்கும் சூப்பர் சைட் டிஷ் இது. வாங்க அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

onion-rice1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, தோல் உரித்த பூண்டு பல் – 20, வரமிளகாய் – 15, இவைகளை சேர்த்து முதலில் வதக்கவேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு மீடியம் சைஸில் இருக்கும் – 4 பெரிய வெங்காயங்களை நீளவாக்கில் நைஸாக வெட்டி, கடாயில் போட்டுக் கொள்ள வேண்டும்‌. ஒரு சிறிய எலுமிச்சை அளவு – புளியையும் போட்டுக் கொள்ள வேண்டும். உப்பு 1/2 ஸ்பூன் சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் ஒரு முறை நன்றாகக் கலந்து விடுங்கள். 2 நிமிடம் வதக்கி விட்டால் வெங்காயம் கண்ணாடி பதம் பக்குவத்திற்கு வதங்கி விடும்.

chutney5

வெங்காயம் கண்ணாடி பதம் வரை வதங்கி வந்ததும் இதோடு மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து, 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, கலந்து விட்டு ஒரு மூடி போட்டு 2 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் மிளகாய் மற்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து நன்றாக வெந்து கிடைக்கும். அடுப்பை அணைத்துவிட்டு, இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆறவைத்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். இந்த விழுது மைய மொழுமொழுவென அறைந்து விட்டால் குழம்பு சுவையாக வராது. (திரி திரியாக 90% அரைத்துக்கொள்ளுங்கள்.) அரைத்த விழுது தனியாக அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

குழம்பை தாளிப்பதற்கு மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் 3 தோலுரித்த பூண்டு பற்களை பொடியாக நறுக்கி போட்டு, 1/2 ஸ்பூன் பெருங்காயம் போட்டு தாளித்து, அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை கடாயில் ஊற்றி 1 கப் அளவு தண்ணீரையும் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு குழம்புக்கு தேவையான அளவு உப்பு போட்டு மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் இந்த குழம்பை மிதமான தீயில் மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். (வெங்காயம் வதக்கும்போதும் உப்பு சேர்த்து இருக்கின்றோம். பார்த்து தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.)

kuzhambu2

குழம்பு நன்றாகக் கொதித்து பச்சை வாடை நீங்கி ஊற்றி இருக்கும் எண்ணெய் மேலே மிதந்து வரும். கூடவே கமகம வாசம் வீசும். அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த குழம்பு ரொம்பவும் தண்ணீராக இருக்க கூடாது. கெட்டிப் பதத்துக்கு, தொக்கு போல இருக்க வேண்டும். இதை அப்படியே சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையான சுவை இருக்கும். இந்த குழம்புக்கு காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆனாலும் இந்த குழம்பு கெட்டுப் போகாமல் இருக்கும். உங்களுக்கு குழம்பு ரெசிபி பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -