ஊட்டத்தூர் சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோவில் வரலாறு

sivan
- Advertisement -

அருள்மிகு சுத்த ரத்தினேசுவரர்:
இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இந்த மூலவருக்கு சுத்த ரத்தினேஸ்வரர், துய்ய மாமணீஸ்வரர், மாசிலாமணி என்ற மூன்று பெயர்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 இந்த 3 தேதிகளில் சூரிய ஒளியானது கர்ப்பகிரகத்தில் இருக்கும் மூலவரின் மேல் படுகிறது. இதே போல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின் போது, சூரியனின் கதிர்கள் 3 நிமிடங்கள் மூலவரின் மீது படுவது மற்றொரு சிறப்பு.

suththarathineshwarar temple

இந்த கோவிலில் வீற்றிருக்கும் பஞ்ச நதன நடராஜர் சிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பார்ப்பதற்கு கருங்கல்லை போன்று தோற்றம் இருந்தாலும் சில தருணங்களில் அந்தக் கல்லானது கரு நீலமாகவும், கரும் பச்சை வண்ணத்திலும் கூட காட்சிதரும். பல கோடி சூரியனின் சக்தியை உள்ளடக்கிய கல்லாக இது சித்தர்களால் கூறப்பட்டுள்ளது. இந்த பஞ்சநதன பாறையின் மற்றொரு சிறப்பை கேட்டால் எவராலும் நம்ப முடியாது. இந்தப் பாறையில் இறைவனின் திரு உருவத்தை எவராலும் உளியால் செதுக்க முடியாது என்றும், இறைவனின் திருவுருவம் தானாகவே உருவாகும் என்றும், வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலும் காணமுடியாத பஞ்சநதன கல்லில் உருவான சிலைதான் ஊட்டத்தூர் நடராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனவே நவ லிங்க பூஜை எனப்படும், ஒன்பது விதமான பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே, இந்தப் பாறையில் இருக்கும் நடராஜரின் உருவம் தெரியும், என்பதற்காக அபிஷேகம் நிறைவடைந்த பின்புதான் மனிதர்கள் பஞ்சநதன பாறையில் உருவாக்கப்பட்ட நடராஜரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வளவு சிறப்புமிக்க இத்திருத்தலத்தை ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று நம் மனதில் தோன்றுகிறது அல்லவா?

suththarathineshwarar-temple1

இந்த பஞ்சநதன கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜ பெருமானை உரிய பூஜைகளால் வழிபட்டால் சிறுநீரக கோளாறுகள் நீங்கும் என்பதும் இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து இங்கே கிடைக்கும் வெட்டிவேரை வாங்கி 48 துண்டுகளாக உடைத்து மாலையாக கட்டி நடராஜப் பெருமானுக்கு அணிவிக்க வேண்டும். அடுத்ததாக அவருக்கு உண்டான அர்ச்சனைகளை முறையாக செய்து வழிபட்ட பின்பு, நாம் அணிவித்த அந்த வெட்டிவேர் மாலையை பிரசாதமாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். கோவிலில் இருக்கும் பிரம்ம தீர்த்த நீரை ஒரு கேனில் சேகரித்து வாங்கிக் கொள்ளலாம். இந்த தீர்த்தம் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டுக்கு சென்றதும் தினமும், நடராஜர் சிலையில் இருந்து பெறப்பட்ட வெட்டிவேர் மாலையில் இருந்து ஒரு துண்டை எடுத்து, அந்த தீர்த்தத்தில் போட்டு முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் அந்த தீர்த்தத்தை எடுத்து குடித்து விடலாம். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வர சிறுநீர் கோளாறு நீங்கும் என்பது இத்தளத்தின் பக்தர்களின் நம்பிக்கையாக கூறப்படுகிறது. பெண்கள் கட்டாயம் மாதவிலக்கு நாட்களில் இந்த நீரை பருக கூடாது. 48 நாட்கள் முடிந்ததும் மீதமுள்ள வெட்டிவேரை ஓடும் ஆற்றில் விட்டு விடலாம். பல பேர் இந்த பரிகாரத்தை செய்து சிறுநீர் கோளாறுகள் முழுமையாக நீங்கிய பின்பு திரும்பவும் இந்த ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அபிஷேக அர்ச்சனை ஆராதனை செய்து நன்றி தெரிவித்து விட்டு சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

suththarathineshwarar

தல வரலாறு:
ஊட்டத்தூரின் மேற்கு திசையில் அமைந்திருக்கும் சோளேஸ்வரம் கோவிலுக்கு ராஜராஜ சோழன் அடிக்கடி வருகை தருவார். ஒருசமயம் மன்னரின் வருகைக்காக, பாதையை சரி செய்யும் சமயத்தில் மண்வெட்டியால் புல்லை வெட்டும் போது, ஒரு இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. பயந்துபோன தொழிலாளிகள் இந்த செய்தியை மன்னனிடம் தெரிவித்தனர். அந்த இடத்தில் இருந்த சிவலிங்கத்தை கண்டுபிடித்து, செய்த பாவத்திற்காக மன்னிப்பும் கேட்டு, அந்த லிங்கத்திற்கு ஊட்டத்தூரில் ரத்தினேசுவரர் திருக்கோவிலை கட்டினார் ராஜராஜ சோழ மன்னர். இன்றும் இத்திருத்தலத்தில் வீட்டிலிருக்கும் லிங்கத்தின் நெற்றியில் வடு தென்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பலன்கள்:
நம் உடலில் இருக்கும் எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும், அதை தீர்க்கும் சக்தி, இத்தலத்தில் வீற்றிருக்கும் பஞ்சநதன நடராஜர்க்கு உண்டு. திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்துகொள்ளலாம். இழந்த பதவியையும் மீட்பதற்கு சிவபெருமானை வழிபடலாம்.

செல்லும் வழி:
சென்னையிலிருந்து திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடலூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

தரிசன நேரம்:
காலை 07.00 – 12.00
மாலை 04.00 – 08.00

முகவரி:
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்,
லால்குடி தாலுகா,
பாடலூர் வழி,
ஊட்டத்தூர்,
திருச்சி 621109.

தொலைபேசி:
+91 83449 11836.

இதையும் படிக்கலாமே
பூஜை புனஸ்காரங்கள் கூட தேவையில்லை. இந்த ஒரு மந்திரம் போதும் குபேரரின் ஆசிபெற!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have oottathur sivan kovil history in tamil. oottathur shiva temple history in tamil. oottathur temple trichy. arulmigu suddharathneswarar temple oottathur

- Advertisement -