நோய் எதிர்ப்பாற்றலை அள்ளிக் கொடுக்கும் பச்சைப் பயறு தோசை மாவு எப்படி எளிதாக தயார் செய்வது? இது தெரிஞ்சா இனி இட்லி, தோசை மாவு தேடவே மாட்டிங்களே!

pachai-payaru-dosai_tamil
- Advertisement -

நம்முடைய வீட்டில் எப்பொழுதும் இட்லி, தோசைக்கு மாவு ரெடியாக வைத்திருப்போம். இது போல எப்பொழுதும் அரிசி, உளுந்து சேர்த்து மாவு அரைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் வகையில் பச்சை பயிறு கொண்டு மாவு தயாரித்து பாருங்கள்! பச்சை பயிறு தோசை மொறு மொறுன்னு கிரிஸ்ப்பியாக சுட்டு சாப்பிடலாம். அயன் சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பச்சை பயறு தோசை அடிக்கடி சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்பவும் நல்லது. எப்படி இதனை தயாரிப்பது? என்று பார்ப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்

பச்சை பயறு – ஒரு டம்ளர், பச்சரிசி – 5 ஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு இன்ச், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

பச்சை பயறு தோசை செய்வதற்கு முதலில் ஒரு டம்ளர் அளவிற்கு பச்சை பயரை முழுமையாக நிரப்பி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனுடன் அஞ்சு ஸ்பூன் அளவிற்கு பச்சரிசி சேர்த்து நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரவில் இதனை ஊற வைத்தால் மறுநாள் காலை வரை நன்கு ஊறி இருக்க வேண்டும்.

பிறகு காலையில் எழுந்ததும் தண்ணீரை எல்லாம் வடிகட்டி எடுத்துவிட்டு பயறு மற்றும் அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சி தோல் நீக்கி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்து உருவி சேருங்கள். காரத்திற்கு அதிகம் எதுவும் சேர்க்க வேண்டாம். ஒரே ஒரு பச்சை மிளகாயை காம்பு நீக்கி கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நான்கைந்து கொத்துக்கள் மல்லி தழையை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி இதனுடன் சேருங்கள். பின்னர் இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொஞ்சம் போல் நீங்கள் வடித்து எடுத்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து நைசாக தோசை மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸி கழுவிய தண்ணீரையும் சேர்த்தால் தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். இதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இதை அப்படியே மூடி போட்டு அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சுவையான அடை தோசை தயாரிப்பது எப்படி?

அரைமணி நேரத்திற்கு பிறகு மாவு நன்கு புளித்திருக்கும். இப்பொழுது இது தோசை சுடுவதற்கு தயாராக இருக்கிறது. அடுப்பில் தோசை கல்லை வைத்து லேசாக எண்ணெயை தடவி மாவை ஊற்றி பரப்பி விடுங்கள். எவ்வளவு மெலிதாகவும் நீங்கள் பரப்பலாம் அல்லது கல் தோசை போல தடிமனாகவும் பரப்பிக் கொள்ளலாம். அது உங்கள் விருப்பம் தான்.

பின்னர் சுற்றிலும் எண்ணெய் விட்டு காய விடுங்கள். ஒருபுறம் நன்கு பொன்னிறமாக சிவந்ததும், அடுத்தப்புறம் திருப்பி போடுங்கள். அவ்வளவுதாங்க, மொறுமொறுன்னு சூப்பரான கிரிஸ்பியான பச்சைபயிறு ஆரோக்கிய தோசை ரெசிபி ரொம்பவே சீக்கிரமாக ரெடி! நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -