உடல் சோர்வையும், மூட்டு வலியையும் சரி செய்யும் அற்புதமான பச்சை சுண்டை காயை ஒரு முறை இப்படி மசாலா அரைத்து குழம்பு வைத்து பாருங்கள். கசப்பே தெரியாமல் சுவையில் அருமையாக இருக்கும்.

sundaikai kulambu
- Advertisement -

அறுசுவைகளும் நிறைந்தது தான் நமது பாரம்பரியமான உணவு. அன்றாடம் நாம் அறுசுவையையும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடம்பில் எந்தவித நோய்களும் ஏற்படாது என்று தான் அந்த காலத்தில் அறுசுவை உணவு என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது நாம் அதில் சில சுவைகளை அறவே சேர்ப்பதில்லை. அவற்றில் ஒன்றுதான் கசப்பு சுவை. கசப்பு சுவை நிறைந்த பொருட்கள் ஒன்று தான் பச்சை சுண்டைக்காய். கசப்பு சுவை தெரியாமல் எப்படி பச்சை சுண்டைக்காயை வைத்து குழம்பு செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சோர்வை நீக்கும். மூட்டு வலியை குறைக்க உதவுகிறது. மூட்டு வலி ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம். சிறுநீரகத்தை பெருக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். அஜீரணம், மலச்சிக்கல் போன்ற ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை தடுக்க உதவுகிறது. அப்படிப்பட்ட இந்த சுண்டைக்காயை வைத்து எப்படி குழம்பு செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

செய்முறை 

இதற்கு முதலில் நாம் மசாலாவை அரைத்துக் கொள்வோம். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் 50 கிராம் மல்லி மற்றும் 15 வர மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 1/2 டீஸ்பூன் அளவிற்கு கடுகு, 1 ஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் வெந்தயம், 1/2 டீஸ்பூன் மிளகு இவற்றை சேர்த்து நன்றாக வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டினக்கு கருவேப்பிலை, 1/2 டீஸ்பூன் உளுந்து இதையும் தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் அளவிற்கு கடலைப்பருப்பையும், துவரம்பருப்பையும் சேர்த்து நன்றாக வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்து வைத்திருக்கும் இந்த அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு முழு பூண்டுகளை உரித்து அதை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 200 கிராம் சின்ன வெங்காயத்தையும் தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய துண்டு அளவு பெருங்காயத்தை வறுத்து அதையும் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது 1/4 கிலோ அளவிற்கு பச்சை சுண்டைக்காயை எடுத்து கழுவி விட்டு, இடி கல்லை பயன்படுத்தி இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் நீரை ஊற்றி விதையில்லாமல் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். விதையோடு நாம் செய்யும் பொழுது அதில் கசப்பு சுவை மிகவும் அதிகமாக இருக்கும். ஒரு எலுமிச்சம் பழம் அளவிற்கு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் 1/2 ஸ்பூன் அளவிற்கு கடுகும், 1 ஸ்பூன் அளவிற்கு சீரகமும் சேர்க்க வேண்டும். பிறகு அதில் கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். நன்றாக சிவந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் பூண்டையும் போட்டு வதக்க வேண்டும். இரண்டும் வதங்க ஆரம்பித்ததும் பொடித்து வைத்திருக்கும் பெருங்காயத்தை அதனுடன் சேர்க்க வேண்டும். வெங்காயமும் பூண்டும் நன்றாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 5 தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி நன்றாக வதங்கிய பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் சுண்டைக்காயை அதில் சேர்க்க வேண்டும். குழம்பிற்கு தேவையான அளவு உப்பை சேர்த்து சுண்டைக்காயை நன்றாக வேக வைக்க வேண்டும். சுண்டைக்காய் வெந்த பிறகு ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து அதில் ஊற்ற வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாவில் 10 கிராம் அளவிற்கு சேர்க்க வேண்டும். குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 1/2 டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு, பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: தக்காளி இருந்தா இந்த பச்சடி செஞ்சு பாருங்க. அட !தக்காளியை வைத்து இப்படி ஒரு அருமையான சைடு டிஷ் செய்யலாமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இட்லி, தோசை சாதம் என எல்லாத்துக்குமே அட்டகாசமான காம்பினேஷன்

மிகவும் சுவையான கசப்புத் தன்மை அற்ற பச்சை சுண்டைக்காய் புளிக்குழம்பு தயாராகி விட்டது.

- Advertisement -