ஏதாவது ஸ்னாக்ஸ் செய்யணுமா? வீட்ல வெறும் ரேஷன் பச்சரிசி தான் இருக்கா? கவலை விடுங்க. அதிலேயே நம்ம ஈஸியான தட்டை செய்யலாம் வாங்க.

- Advertisement -

முன்பெல்லாம் இந்த தட்டை, முறுக்கு, சீடை இது போன்ற பலகாரங்கள் எல்லாம் பெரியவர்கள் நம் வீட்டுலேயே செய்து தருவார்கள். மாலையில் பிள்ளைகளுக்கு ஸ்னாக்ஸ் என்று வரும்போது இதை தான் கொடுப்பார்கள். ஆனால் இன்று அப்படி எல்லாம் இல்லை. ஸ்னாக்ஸ் என்று வந்துவிட்டால் நாம் கடைகளில் விற்கும் பாக்கெட் உணவுகளையும், அல்லது பேக்கரியில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நோக்கித்தான் ஓடுகிறோம்.

அது நம் உடம்பிற்கு அவ்வளவு ஆரோக்கியமும் இல்லை, ஆகவே கடைகளில் ஆரோக்கியம் அற்ற ஸ்னாக்ஸ்ளை வாங்காமல், வீட்டிலேயே செய்து கொடுங்கள். அதிக செலவும், அதிக நேரமும் தேவை படாத ரேஷன் பச்சரிசி தட்டை சுலபமாக செய்வது எப்படி. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1/4 கிலோ, கடலை பருப்பு – 50 கிராம், காயந்த மிளகாய் – 7, பூண்டு பல் -12, பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – கால் கப், உப்பு – 1 டீஸ்பூன்.

முதலில் ரேஷன் பச்சரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதேபோன்று இன்னொரு சிறிய கிண்ணத்தில் கடலை பருப்பையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த பச்சரிசியை வெயிலில் காய வைக்க வேண்டாம். வீட்டிலேயே ஒரு காட்டன் துணி போட்டு அதிலே காய வைத்தால் போதும். சற்று ஈர பதம் இருக்குபடி காய் வைத்து கொள்ளுங்கள். (லேசாக ஈரப்பதம் இருந்தால் போதும். தண்ணீரும் இருக்க கூடாது.) காய்ந்த பிறகு நீங்கள் மிக்ஸி ஜாரில் இதை போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள், அரைத்த மாவை ஒரு சல்லடை வைத்து சலித்து மாவை எடுத்து வைத்து விடுங்கள். பிறகு அடுப்பில் ஒரு அடி கனமான கடாய் வைத்து சூடான பிறகு மாவை கொட்டி லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். (அதிகமாக வறுத்து விட்டால் தட்டை தடிமனாக மாறிவிடும்) லேசாக வறுத்து எடுத்த பிறகு இதில் ஊற வைத்த 50 கிராம் கடலைப்பருப்பையும் சேர்த்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு காய்ந்த மிளகாய், பூண்டு 10 பல் இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதையும் இந்த மாவில் சேர்த்து விடுங்கள். இத்துடன் பெருங்காயம், உப்பு இரண்டையும் சேர்த்து, இரண்டு பல் பூண்டு இடித்தும், பெருங்காயமும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாசம் நன்றாக இருக்கும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் கருவேப்பிலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம், இல்லை என்றால் வேண்டாம். இவை எல்லாம் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து விடுங்கள். தட்டைக்கு மாவு தயாராகி விட்டது.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எடுத்து தட்டையை பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை அதில் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்தவுடன் இந்த தட்டை மாவை ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் லேசாக தட்டி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு எடுங்கள். (தட்டையை தட்டும் போது கையில் சிறிது எண்ணெய் தேய்த்து தட்டுங்கள்) எண்ணெய் அதிக சூடாகவும் இருக்கக் கூடாது, மிதமான சூட்டில் இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள். அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து விடுங்கள். இல்லையென்றால் தட்டை போட்டவுடன் கருகி விடும். மேலே நிறம் மாறி விடும். ஒவ்வொரு தட்டையாக போட்டு எடுத்து விடுங்கள். அவ்வளவு தான். சுவையான ரேஷன் பச்சரிசி தட்டை ரெடி. இதை காற்று புகாத டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்தால் பத்து நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம்.

- Advertisement -