இன்றைய காலத்தில் எதற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ பணத்திற்கும் படிப்பிற்கும் அதிக அளவில் முக்கியத்துவம் இருக்கிறது. பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்து விடலாம். ஆனால் படிப்பறிவை நாம் படித்தால் மட்டுமே நம்மால் பெற முடியும். படிப்பு ஒன்று இருந்துவிட்டால் நம்மால் எப்பேர்பட்ட இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியும். அதனால்தான் இன்றைய கால குழந்தைகளின் படிப்பில் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அவர்களுடைய பெற்றோர்கள். அப்படி முக்கியத்துவம் கொடுத்தும் ஒரு சில குழந்தைகளால் படிப்பில் சிறந்து விளங்க முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் ஒரு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
படிப்பில் சிறந்து விளங்க வழிபாடு
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். நாம் செய்யக்கூடிய காரியத்தில் நமக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். இவரை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு நல்ல அறிவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை படிக்கும் பிள்ளைகள் வழிபாடு செய்வதன் மூலம் அவர்களால் படிப்பில் சிறந்து விளங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை செய்ய தொடங்க வேண்டும். அதுவும் வளர்பிறையில் வரக்கூடிய கிழமையாக பார்த்து செய்வது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகரின் சிலை அல்லது படத்தை எடுத்து சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவருக்கு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அவருக்கு ஏதாவது ஒரு எளிமையான நெய்வேத்தியத்தை வைத்து விட வேண்டும்.
அவருக்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அந்த தட்டின் மேல் வெற்றிலையை வைக்க வேண்டும். பிறகு அச்சு வெல்லம் என்று கடைகளில் விற்கும் அந்த அச்சுவெல்லத்தை வாங்கி அதற்கு நடுவே மட்டும் சற்று பெரியதாக குழி செய்து கொள்ள வேண்டும். பிறகு அதில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி அல்லது பூத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றக்கூடிய தீபம் குறைந்த நேரம் தான் எரியும் என்றாலும் படிக்கும் பிள்ளைகள் காலையிலேயே இந்த தீபத்தை விநாயகருக்கு ஏற்றி வைத்துவிட்டு அருகம்புல்லையும் விநாயகருக்கு சமர்ப்பித்து விட்டு படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு தலையில் மூன்று முறை கொட்ட வேண்டும். பிறகு 21 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 21 நாட்கள் தீபமேற்றி விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் குழந்தைகள் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் அறிவுத்திறன் மேம்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு
அற்புத பலனை தரக்கூடிய இந்த விநாயகர் வழிபாட்டை முழுமனதுடன் செய்து படிப்பில் சிறந்து விளங்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.