வீடு என்றாலே அதில் சில வேண்டாத விருந்தாளிகளும் இருக்கத் தான் செய்வார்கள். பல்லிகள், கரப்பான் பூச்சி, எறும்பு போன்ற ஜந்துக்கள் தொல்லை அதிகமாக இருந்தால் அதை கட்டுப்படுத்துவது அவசியமாகும். இரவு நேரங்களில் இதன் நடமாட்டம் அதிகம் வீட்டில் இருப்பதால், உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிறு ஜந்துக்களின் தொல்லைகள் நீங்க எளிய வழிமுறையை தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
வீட்டில் பல்லிகள் இருப்பது தவறில்லை! அது சிறு பூச்சிகளையும், கொசுக்களையும் உண்டு நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும், மேலும் பல்லி இந்து சமயங்களில் கடவுளாகவும் நினைத்து வழிபடுகின்றோம். அப்படி இருக்கும் பொழுது பல்லியை கொல்வது என்பது பாவச் செயலாக கருதுகின்றோம். பல்லி இரவு நேரங்களில் நமக்கு தெரியாமல் தைரியமாக வெளியில் நடமாடும்.
குறிப்பாக சமையலறையில் அதிகம் பல்லிகளின் நடமாட்டம் இரவு நேரங்களில் இருப்பதை பார்க்க முடியும். நாம் இரவில் கழுவி வைத்திருக்கும் பாத்திரங்களின் மீது இருக்கும் நீர் துளிகளை அது தன் நாவினால் குடிக்கும். அதனால் தான் காலையில் எந்த பாத்திரமாக இருந்தாலும் ஒருமுறை நன்கு கழுவி விட்டு அதன் பிறகு பயன்படுத்த வேண்டும். பல்லியின் எச்சில் பட்ட பாத்திரங்களில் அப்படியே உணவு உண்பதன் மூலம் அந்த உணவானது நஞ்சாகிறது, பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகிறது.
சமையல் கட்டில் இருக்கும் பாத்திரங்களின் மீது எச்சம் இடவும் செய்யும். பல்லி மட்டுமல்லாமல் கரப்பான் பூச்சிகளும் இதைத் தான் செய்யும். இவைகளின் எச்சில், எச்சம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல! எப்பொழுதும் உணவுப் பொருட்களை கீழே சிந்த விட கூடாது. அடிக்கடி வீட்டை சுத்தம் செய்து விட வேண்டும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இன்னும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அழையா விருந்தாளியாக வந்திருக்கும் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை முற்றிலும் இல்லாமல் போக, இந்த வழிமுறையை கையாளலாம். முதலில் ஒரு சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு வரமிளகாய்களை நான்கைந்தாக கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாயின் விதைகளோடு சேர்ந்து மிளகாய் நன்கு தண்ணீரில் கொதிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
மீண்டும் பிறவா நிலை பெற பரிகாரம்
ரெண்டு நிமிடம் நன்கு கொதித்த ஆறிய பின்பு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் அரை ஸ்பூன் அளவிற்கு தூள் உப்பு, அரை ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடுங்கள். ஒரு ஸ்பூன் அளவுக்கு டெட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை கொஞ்சம் மீதம் வையுங்கள். அந்த தண்ணீருடன் சிறிதளவு கோதுமை மாவு அல்லது மைதா மாவு சேர்த்து உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து எந்தெந்த இடங்களில் எல்லாம் கரப்பான்கள் தொல்லை அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஒட்டி வையுங்கள். ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துள்ள தண்ணீரை பல்லி வரும் இடங்களில் எல்லாம் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான், இனி ஒரு பல்லி மற்றும் கரப்பான் பூச்சியும் உங்கள் வீட்டில் தொல்லையே செய்யாது, ஓடியே போய்விடும்.