- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் பல்லி தரும் பலன்கள்

வீட்டில் பல்லி தரும் பலன்கள்

- Advertisement -

பொதுவாகவே வீடு என்றால் அதில் சில ஜந்துக்களும் வசிக்கத் தான் செய்கிறது. அப்படி நம் வீட்டில் அழையாத விருந்தாளியாக எப்போதும் இருக்கும் ஒரு ஜந்து பல்லி! இந்தப் பல்லியை இந்து சமயங்களில் தோஷங்கள் போக்கும் கடவுளாகவும் பாவிக்கிறோம். பழம்பெரும் கோவில்களில் இன்றும் பல்லியை தொட்டு வணங்கும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. பல்லியை கொன்றால் பாவம் என்பார்கள். இந்தப் பல்லி வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் இருந்தால் அதிர்ஷ்டம் வரும்? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கௌதம முனிவரின் சீடர்களாக இருந்த இருவர் ஒரு முறை பூஜையின் பொழுது எடுத்து வந்த தீர்த்தத்தில், பல்லி மிதந்து கிடந்ததை பார்த்து கௌதம முனிவருக்கு கோபம் வந்தது. பொறுக்க முடியாத முனிவர், இருவருக்கும் பல்லிகளாக இருக்க கடவீர்கள்.. என்று சாபம் கொடுத்து விட்டார். தெரியாமல் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கொடுங்கள், விமோசனம் அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டதன் பின்பு கௌதம முனிவர் கோபம் தணிந்து சத்திய விரத ஷேத்திரமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை சென்று தரிசியுங்கள் என்று கூறினார்.

- Advertisement -

அதன்படி காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலை அடைந்த சீடர்கள், கடும் தவம் புரிந்து வழிபட்டு வந்தனர். இதனால் மனம் மகிழ்ந்த வரதராஜ பெருமாள் சாப விமோசனம் கொடுத்து, இருவரையும் வைகுண்டம் அழைத்துக் கொண்டார். தங்களின் சரீரங்கள் பஞ்சலோகங்களால் எனக்கு பின்னால் எப்போதும் இருக்கும். உங்களை தொட்டு வணங்குபவர்களை விட்டு எல்லா விதமான தோஷங்களும் நீங்கும் என்றும் கூறி மோட்சம் கொடுத்தார்.

காஞ்சி வரதராஜ பெருமாள் மூலவர் சந்நிதிக்கு பின்புறம் ரெண்டு பஞ்சலோக பல்லிகள் இருக்கும். ஒன்று வெள்ளி முலாமும், ஒன்று தங்க முலாமும் பூசப்பட்டு அருமையாக காட்சி தரும். இந்த தங்கம் மற்றும் வெள்ளி பல்லிகளை தலை முதல் வால் வரை உங்கள் கைகளால் தொட்டு வணங்கினால் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். காஞ்சி பெரியவர் ஒரு முறை இந்த பல்லிகளை வணங்கி வரும் பொழுது தலையில் ஒரு பல்லி விழுந்தது. தலையில் பல்லி விழுந்தால் அதன் சகுண பலனாக மரணம் நிகழும் என்று சீடர்கள் பயந்தனர். ஆனால் பெரியவரோ, இது சத்திய விரத ஷேத்திரம், கவலைப்படாதீர்கள் இங்கு பல்லி தோஷம் பலிப்பதில்லை என்று கூறி புன்னகைத்தார்.

- Advertisement -

இத்தகைய பெருமைகள் நிறைந்த பல்லிகள் வீட்டில் சத்தம் போட்டால் பேசிக் கொண்டிருக்கிற காரியம் வெற்றி பெறும் என்னும் நம்பிக்கையும் உண்டு. இந்தப் பல்லி வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் எதிர்மறை சக்திகளின் ஆதிக்கம் குறையும். பல்லிகளை எப்பொழுதும் மெதுவாக விரட்ட வேண்டுமே, தவிர அதனை கொல்லக் கூடாது. தோஷங்களை நீக்கும் பல்லிகள் பீரோவிற்கு பின்னால் இருந்தால் குபேர அருள் கிடைக்கும். எப்போதும் அதே இடத்தில் தான் இருக்கிறது. அந்த இடத்தை விட்டு போக மாட்டேன் என்கிறது என்றால், உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப் போகிறது.

இதையும் படிக்கலாமே:
அமாவாசை கல் உப்பு முடிச்சு பரிகாரம்

அது போல பூஜை அறையில் இருந்தால் உங்களுக்கு வரக்கூடிய தோஷங்கள் விலகும் என்று அர்த்தம். சுவாமி படங்களுக்கு பின்னால் எப்பொழுதும் பல்லி இருக்கிறது என்றால் அதை அப்படியே விட்டு விடுங்கள், விரட்ட நினைக்காதீர்கள். பெருமாள் ஆசிர்வாதம் உங்களுக்கு இருப்பதை இது உணர்த்துகிறது. முடிந்தால் வரதராஜ பெருமாளை சென்று தரிசித்து பல்லியை தொட்டு வணங்கி வாருங்கள், அதிர்ஷ்ட மழை உங்களை துரத்தும்.

சற்று முன்