ஜீவ சமாதி அடைந்த சித்தர் குழந்தைகளிடம் சூட்சுமமாக பேசும் வீடியோ

palraj siddhar

சித்தர்கள் பலர் இன்று அரூபமாக நமக்கருகில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்பது சித்தர் வழிபாட்டில் இருக்கும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஜீவ சமாதி அடைந்த சித்தர் ஒருவர் குழந்தைகளோடு பேசி அவர்கள் மூலம் தன்னை நாடி வருபவர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறார். இதோ அது பற்றிய வீடியோ காட்சி.

கோயம்புத்தூர் அருகில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் என்னும் ஊரில் உள்ளது பால்ராஜ் சித்தர் ஜீவ சம்மதி. இங்கு தான் தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் இங்கு சென்றால் அதற்கான தீர்வை சித்தர் குழந்தைகளின் காதில் சொல்கிறார். நம் மனதில் என்ன நினைத்து வேண்டினாலும் அதை அப்படியே குழந்தைகள் சித்தரிடம் கேட்டு சொல்கின்றனர்.

1991 ஆம் ஆண்டு பிறந்த பால்ராஜ் சித்தர் 16 வருடங்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்தார். அதன் பிறகு அவர் ஜீவசமாதி அடைந்து விட்டார். இந்த பூமில் வாழ்ந்த காலத்தில் அவர் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவரின் உடலில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என்று எண்ணிய பெற்றோர் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் ஏன் பேசவில்லை என்பது யாருக்கும் புரியாத புதிராய் இருந்துள்ளது.

அவருக்கு 13 வயது இருக்கும் சமயத்தில் தான் அவர் ஒரு தெய்வ அருள் பெற்ற குழந்தை என்பது தெரிய வந்திருக்கிறது. சாமியாடி குறி சொல்லும் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு மூன்று ஆண்டுகளில் அவர் ஜீவ சமாதி அடைந்துள்ளார். தான் சமாதி அடைந்த ஒரு வருட காலம் அவர் பல்லி மூலமாக அனைவரிடமும் பேசி உள்ளார். அதன் பிறகு குழந்தைகள் மூலமாக தன் பக்தர்களிடம் உரையாட துவங்கி உள்ளார்.

இவர் இறந்த பிறகு தான் இவருடைய முற்பிறவி ரகசியங்கள் பல வெளிப்பட்டுள்ளன. இவர் தனது முற்பிறவியில் கல்கத்தா அருகில் பிறந்துள்ளார். முற் பிறவியில் மிகப்பெரிய ஞானியாக வாழ்ந்த இவர் 16 ஆண்டுகள் தொடர்ந்து யாரிடமும் பேசாமல் இருந்து தவத்தில் ஈடுபட்டுள்ளார். இவரை அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் கிருஷ்ணரின் அவதாரம் என்று போற்றியுள்ளனர். இவை அனைத்தும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக நடந்துள்ளது. அதன் பிறகு இந்த பிறவியில் இவர் கோயம்புத்தூரில் பிறந்து 16 வயதில் ஜீவசமாதி அடைந்து மக்களுக்கு அருளாசி புரிகிறார்.

தெய்வீகம் வீடியோ : Dheivegam