நம்முடைய கஷ்டங்களை போக்கக்கூடிய ஒரு நாளாக தான் பிரதோஷ நாள் திகழ்கிறது என்றாலும் அந்த பிரதோஷ நாளில் நாம் ஒரு சில பரிகாரங்களை செய்யும்பொழுது அந்த பரிகாரங்களின் பலனால் நம்முடைய வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்றே கூறப்படுகிறது. அதுவும் பிரதோஷம் வரக்கூடிய கிழமையை பொறுத்து அந்த பரிகாரத்திற்குரிய பலன்களும் மாறுபடும். அந்த வகையில் புதன்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த கிழமையாக திகழ்கிறது. இந்த கிழமையில் வரக்கூடிய பிரதோஷ நாளில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்யும்பொழுது பணவரவு அதிகரிக்கும் என்றே கூறலாம். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண வரவை அதிகரிக்க பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் பணவரவை அதிகரிப்பதற்காக தான் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறோம். எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் பணவரவில் பலவிதமான தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாளில் இந்த ஒரு பரிகாரத்தை செய்ய பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்குவதோடு பண வரவும் படிப்படியாக அதிகரிக்கும்.
ஆடி மாதம் 21ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் ஆறாம் நாள் புதன்கிழமை அன்று பிரதோஷம் வருகிறது. பிரதோஷ நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து “ஓம் சிவ சிவ ஓம்” என்னும் மந்திரத்தை அன்றைய நாள் முழுவதும் நாம் கூற வேண்டும். பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு சிவபெருமானுக்கு நடக்கக்கூடிய அபிஷேகத்தில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு அந்த ஆலயத்திலேயே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு அருகில் பசுமாடு இருக்கும் இடத்திற்கு சென்று பசு மாட்டிற்கு நம்முடைய கைகளால் நான்கு வாழைப்பழங்களை தானமாக தரவேண்டும். இப்படி நாம் செய்யக்கூடிய வழிபாடு மற்றும் பரிகார சமயத்தில் நாம் சிவபெருமானின் “ஓம் சிவ சிவ ஓம்” என்னும் மந்திரத்தை விடாமல் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு பசு மாட்டிற்கு நாம் வாழைப்பழத்தை தானமாக தருவதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளைப் பெற முடியும். நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷத்தை நீக்குவதற்குரிய தெய்வத்தின் அருளை பெற்று சிறப்பான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: விரும்பியவர்களை மணந்து கொள்ள பரிகாரம்
பிரதோஷம் எப்படி சிவபெருமானுக்கு உகந்த நாளாக திகழ்கிறதோ அதேபோல்தான் நந்தியம் பெருமானுக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அளவு பசு மாட்டிற்கு ஏதாவது ஒரு பொருளை தானமாக தருவதன் மூலம் சகல நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.