காதல் திருமணம் என்பது இங்கு பலரின் கனவாக இருக்கிறது. இன்றைய இயந்திர மயமான நவீன சமுதாயத்தில் பெரும்பாலான காதல் திருமணங்கள் எளிதாக கை கூடினாலும், இன்னும் சிலருடைய காதல் பலவிதமான தடைகளை பெற்றோர்களால் எதிர்கொண்டு தான் வருகிறது. ஆன்மீக ரீதியாக காதலித்தவர்களையே கரம் பிடிக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? பெற்றோர்கள் சம்மதிக்க யாரை வழிபட வேண்டும்? என்பதைத்தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
நவகிரகங்களில் சுக்கிரன் காதலுக்கும், மகிழ்ச்சிக்கும் உரியவர். சந்திரன் மனதின் காரகன், திருமண பந்தத்திற்கு அடிப்படையானவர். இந்த இருவரின் அருளையும் பெறுவதன் மூலம், காதல் திருமணம் எளிதாக கைகூடும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மனதிற்கு பிடித்த இருவர் திருமண பந்தத்தில் இணைய சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய இருவரின் அனுக்கிரஹமும் தேவைப்படுகிறது என்று ஜோதிடங்கள் குறிப்பிடுகின்றன. இருமனம் இணையும் இந்த திருமணம் இனிதே பெற்றோர் சம்பந்தத்துடன் நடைபெற செய்ய வேண்டிய எளிய பரிகாரம் பற்றி பார்ப்போம்.
வெள்ளிக்கிழமையில் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரையும் நவகிரக சன்னதியில் வழிபட வேண்டும். இருவருக்கும் வெள்ளை நிறம் என்பது தான் உகந்த நிறமாக இருக்கிறது. வெள்ளை நிற வஸ்திரத்தை சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய இருவருக்கும் தனித்தனியே வாங்கி சாற்றுங்கள். பின்னர் வெள்ளை நிற வெண்பொங்கலை சுட சுட நெய் ஊற்றி நன்கு சுவையாக செய்து, மிளகு போட்டு படைக்க வேண்டும். வெண்பொங்கல் படைத்து, வெள்ளை நிற பூக்களை இருவருக்கும் வைக்க வேண்டும்.
சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய இருவருக்கும் வெண்தாமரை மலர் மாலை அல்லது வெள்ளை நிற மலர்களை சாற்ற வேண்டும். வெண்மை சாந்தத்தையும், தூய்மையையும் குறிக்கக்கூடியது. எதிர்ப்புகள், பிரச்சனைகள், கலவரங்கள், மனக்காசப்புகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கக்கூடிய சக்தி படைத்தவை. இந்த மலர்களை சாற்றி வைத்து, வஸ்திரம் அணிவித்து, நைவேத்தியம் படைத்து மனதார இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
நவகிரக தோஷங்கள் நீங்கவும், ஜாதக ரீதியாக இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலகவும், பெற்றோர்கள் சம்மதத்துடன் இரு மனங்கள் இணையவும் முழு மனதாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அங்கு வரும் பக்தர்களுக்கு அல்லது ஏழை எளியவர்களுக்கு வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். வெண்மையான அரிசி அல்லது பால் போன்றவற்றை நீங்கள் தானம் செய்யலாம். வெண்ணிற தானியங்களையும் நீங்கள் தானம் செய்யலாம். பச்சரிசி மற்றும் வெள்ளை மொச்சை ஆகியவை இவ்விருவருக்கும் ஆன உகந்த தானியங்கள் ஆகும். இவற்றையும் நீங்கள் தானம் செய்யலாம். பின்னர் ஒன்பது முறை பிரகாரத்தை வலம் வந்து சிறிது நேரம் கோவிலில் இருந்து விட்டு நீங்கள் பிரார்த்தனையை முடித்து வீடு திரும்பலாம்.
இதையும் படிக்கலாமே:
சக்கரை வள்ளி கிழங்கு பான் கேக் செய்முறை
இதுபோல 9 வெள்ளிக்கிழமைகளில் சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் வழிபாடு செய்துவர சீக்கிரமே நீங்கள் உங்களுடைய மனதிற்கு பிடித்தவர்களை பெற்றோர் சம்மதத்துடன் தடை இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் காதல் திருமணம் செய்பவர்கள் பொறுத்திருந்து பெற்றோர்களின் மனதை மாற்றி பின்னர் தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குறிக்கோளுடன் இருக்க வேண்டும். அரும்பாடு பட்டு வளர்ப்பு பெற்றோர்களை அவமானப்படுத்திவிட்டு, மனம் நோகும் படி செய்துவிட்டு இணையும் பந்தம் நிம்மதியை கொடுக்காது.