நவராத்திரி நாட்கள் என்பது முப்பெரும் தேவியரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் இனிதே நிறைவடைந்து விட்டது. இந்த மூன்று நாட்களிலும் நாம் துர்க்கை அம்மனை வழிபாடு செய்திருப்போம். அடுத்து வரக்கூடிய மூன்று நாட்களும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வோம். அப்படி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்பவர்கள் முதலில் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க வேண்டும். அந்த வகையில் நவராத்திரியின் நான்காம் நாள் மகாலட்சுமி வீட்டிற்கு அழைக்கும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண வரவு அதிகரிக்க பரிகாரம்
நவராத்திரியின் 4, 5, 6 போன்ற நாட்களில் வீட்டில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் இந்த வருடம் வியாழன், வெள்ளி, சனி போன்ற மூன்று கிழமைகளில் மகாலட்சுமியை நாம் வழிபாடு செய்வோம். இந்த மூன்று கிழமைகளுமே மகாலட்சுமி தாயாருக்கு உரிய கிழமைகளாக கருதப்படுகிறது. வியாழக்கிழமை அன்றுதான் லட்சுமி குபேர பூஜை செய்வதற்கு உகந்த நாள் ஆகவும், வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூஜை செய்வதற்கு உகந்த நாளாகவும், சனிக்கிழமை லட்சுமி நாராயணரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த நாட்களில் நாம் தவறவிடாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த முதல் நாள் அன்று நாம் ஒரு சில பொருட்களை நம்முடைய நிலை வாசலில் வைப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்குள் அழைப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. மேலும் இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நமக்கு பணவரவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு இரண்டே இரண்டு பொருட்கள்தான் வேண்டும். அவை தான் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய்.
செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி காலையிலேயே ஒரு சிறிய தட்டையோ அல்லது கிண்ணத்தையோ எடுத்து அதில் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் மூன்று ஏலக்காயை போட்டு நிலை வாசலுக்கு வெளியே வைத்து விடுங்கள். செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முழுவதும் இந்த பொருள் நிலை வாசலுக்கு வெளியே இருக்கட்டும். இரவு உறங்கச் செல்லும் முன் கதவை மூடுவோம் அல்லவா? அப்பொழுது நிலை வாசலுக்கு வெளியே இருக்கக்கூடிய இந்த பொருட்களை எடுத்து வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்து விட வேண்டும்.
இப்படி நாம் செய்வதன் மூலம் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வருவார்கள் என்றும் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நியாயமான பண வரவு நம்மை வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது. வீட்டிற்குள் கொண்டு வைத்த பச்சைக் கற்பூரம் மற்றும் ஏலக்காயை நாம் எப்பொழுதும் பயன்படுத்தக்கூடிய விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:கோரிக்கையை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு
எளிமையான இந்த பரிகாரத்தை 25ஆம் தேதி செய்வதன் மூலம் நம் வீடு தேடி மகாலட்சுமி வருவதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருளால் பணவரவும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.