ஒருவருடைய வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றாலும், தங்களுடைய வருமானம் வீட்டில் தங்க வேண்டும் என்றாலும், கணவன் மனைவிக்கிடையே நல்ல அன்யோனியம் ஏற்பட்டு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றாலும் இவை அனைத்திற்கும் முன்னோர்களின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். முன்னோர்களின் அருள் இருந்தால்தான் நம்முடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக அமையும். எப்படி குலதெய்வத்தின் அருளை பெறுவதற்காக சிறப்பான வழிபாடுகளை நாம் செய்கிறோமோ அதே போல் முன்னோர்களின் அருளை பெறுவதற்காகவும் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அப்படி வழிபாடுகளை மேற்கொள்வதற்குரிய ஒரு அற்புதமான நாளாக தான் மகாளய அமாவாசை திகழ்கிறது. அன்றைய நாளில் நம்முடைய முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக படையலிட்டு வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்போம். தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்போம். ஒருவேளை உங்களால் படையலிட முடியவில்லை, தர்ப்பணம் செய்ய இயலவில்லை என்றால் இந்த எளிமையான பரிகாரங்களை செய்து பாருங்கள். முன்னோர்களின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அந்த பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக அமாவாசை தினத்தன்று நாம் நம்முடைய வீட்டில் சமைத்த பொருட்களை முன்னோர்களுக்கு படையல் இட்டு அதில் சிறுப்பகுதியை எடுத்து காகத்திற்கு வைப்போம். முன்னோர்கள் காக வடிவில் வந்து அந்த உணவை சாப்பிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று நாம் படையலிட இயலவில்லை என்றால் கூட நாம் வடித்த சாதத்தை எச்சில் படாமல் எடுத்து தட்டிலோ கிண்ணத்திலோ வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக பிணைந்து கொள்ளுங்கள். பிறகு சிறிது கருப்பு எள், ஒரு சொட்டு நெய் விட வேண்டும். இதை காகத்திற்கு வைப்பதன் மூலம் முன்னோர்களின் அருளை நம்மால் பெற முடியும்.
புரட்டாசி அமாவாசை அன்று பலரும் தங்களுடைய முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு துணிகளை வைத்து அவர்களுக்கு பிடித்தமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வந்து படையலாக இட்டு வழிபாடு செய்வார்கள். இந்த அளவிற்கு சிறப்பாக நம்மால் செய்ய இயலவில்லை என்றால் கூட ஒரே ஒரு இளநீரை முன்னோர்களின் படத்திற்கு முன்பாக வைத்து அவர்களுக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்தாலேயே அவர்களின் அருளை பெற முடியும்.
முன்னோர்களின் மனம் குளிரவும் முன்னோர்களின் அருளையும், ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு மகாளய அமாவாசையான இன்று குறைந்தபட்சம் 11 நபர்களுக்காவது ஏதாவது ஒரு சாதத்தை செய்து தானமாக தருவதன் மூலம் பித்ரு தோஷம் முற்றிலும் நீங்கும். குடும்பத்தில் பித்ரு தோஷம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் கர்ம வினைகளும் குறையும். அதுவும் கஷ்டப்படக்கூடிய நபர்களாக பார்த்து அன்னதானம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு அந்த டம்ளரை அப்படியே நம்முடைய வீட்டு நிலை வாசலுக்கு வெளியே வைக்க வேண்டும். இரவு முழுவதும் இந்த டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீர் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை சூரிய உதயம் ஆன பிறகு அந்த டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரை எடுத்து செடிகளில் ஊற்றி விட வேண்டும். மகாளய பட்ச காலத்தில் வீட்டிற்கு வந்த முன்னோர்கள் மனநிறைவோடு திரும்பவும் தங்களின் இடத்திற்கு செல்லும் பொழுது இந்த தண்ணீரை பருகி விட்டு மனம் குளிர்ந்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: மகாளய அமாவாசை கல் உப்பு பரிகாரம்
சிறப்பான முறையில் முன்னோர்களை வழிபாடு செய்யவில்லை தர்ப்பணம் கொடுக்க இயலவில்லை என்று நினைப்பவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து முன்னோர்களின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் இன்றி வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.