பசுவின் கால் பட்டு ரத்தம் வடிந்த வெள்ளியங்கிரி மலை லிங்கம் – வீடியோ

Velliyangiri malai lingam

ஆன்மிகத்தில் உயர் நிலையான ஞான நிலை எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக சித்திக்கும் ஒரு விஷயமல்ல. அதற்காக கடும் தவமியற்ற அக்காலத்தில் மனித நடமாட்டம் அதிகமில்லாத மலைப்பகுதிகளுக்கு சென்று சித்தர்களும், யோகிகளும் தவமியற்றினர். அப்படி அவர்கள் செல்லும் மலைப்பகுதிகள் நிச்சயம் இறைத்தன்மை கொண்டதாகவும், அதே நேரத்தில் பல ஆச்சர்யங்களை கொண்டதாகவும் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட பல ஆன்மிக அதிசயங்களைப் தன்னகத்தே கொண்ட ஒரு வெள்ளியங்கிரி மலையில் உள்ள பல அதிசயங்களை பற்றி இந்த விடியோவில் காண்போம்.

கோவைக்கருகே ஏழு மலைத்தொடர்களைக் கொண்ட “வெள்ளியங்கிரி மலை” பல ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டது. “தென் கயிலாயம்” எனப் போற்றப்படும் இம்மலையில் உள்ள பஞ்சபூத லிங்கங்களை இங்கே தினமும் வழிபட்டு, தவமியற்றி பல சித்தர்கள் சித்தியடைந்தனர். அதன் காரணமாகவே இன்றும் பல யோகிகளும், துறவிகளும் அற்புத ஆற்றல்களைக் கொண்ட இந்த வெள்ளியங்கிரி மலையிலேயே தங்கி தவமியற்றுகின்றனர்.
இம்மலையிலிருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த பஞ்சபூத லிங்கங்கள் ஒரு பசுமாட்டின் மூலமாகவே வெளிஉலகத்துக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த இடைகுலத்தினர் சிலர் பசுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பசுமாடுகளில் ஒன்று ஒரு கன்றை ஈன்றது. ஆனால் அந்த கன்றுக்கு பால் தராமல் அந்த தாய் பசு இம்மலையின் மீது ஏறிச் சென்றது. இதைக் பார்த்துக்கொண்டிருந்த அந்த இடையர்களும் அந்த பசுமாட்டை பின் தொடர்ந்து சென்றனர்.

அப்படி அவர்கள் சென்று பார்த்த போது அந்த பசு ஒரிடத்தில் நின்று தனது பாலை வெளியே சொரிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்து அந்த இடையர்கள் அந்த பசுவை விரட்ட, அந்த பசு பயந்து ஓடிய போது அதன் கால்குளம்பு பட்டு ஓரிடத்தில் ரத்தம் வர தொடங்கியதைக் கண்டனர் அந்த இடையர்கள். பிறகு அங்கே சுயம்புவாக மூன்று லிங்கங்கள் இருப்பதைக் கண்டு ஒரு சிறு ஆலயம் அமைத்து வழிபட தொடங்கியதாக இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

இங்கு இன்றும் அந்த பசுமாடு ஓடும் போது அந்த சிவலிங்கத்தின் மீது பதித்த அதன் கால்குளம்புகளின் சுவட்டை இப்போதும் பார்க்க முடிகிறது. அதுபோல அந்த சிவலிங்கத்தின் மீதிருக்கும் பாறை சுவற்றில் அந்த பசுமாட்டின் கொம்புகள் மோதிய அடையாளத்தையும் காண முடிகிறது. மேலும் அந்த காலத்தில் அந்த பசுமாட்டின் கால்குளம்பு இந்த சிவலிங்கத்தின் மீது பட்ட நொடியிலிருந்து இன்று வரை எந்நேரமும் மூன்றில் ஒரு சிவலிங்கத்திலிருந்து நீர் சுரந்து கொண்டே இருப்பதாக இங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள். அதனால் அந்த லிங்கத்தை பஞ்சபூதங்களில் நீரை குறிக்கும் லிங்கமாக கருதி வழிபட்டு வரப்படுவதாகவும் கூறுகிறார்கள்.