முருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள் பல இருக்கின்றன. வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையை போலவும், மாதம் தோறும் வரக்கூடிய சஷ்டி திதியைப் போலவும், கிருத்திகை நட்சத்திரத்தைப் போலவும், வருடத்திற்கு ஒருமுறை பலவிதமான விசேஷ நாட்கள் என்பது வரும். அதிலும் மிகவும் குறிப்பிடத்தக்கதாக திகழ்வது தைப்பூசம், கந்த சஷ்டி கவசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் போன்றவை. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர நாளன்று எந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பங்குனி உத்திர வழிபாடு
பங்குனி மாதம் என்பது தமிழ் மாதத்தில் பன்னிரண்டாவது மாதமாக திகழக்கூடியது. மேலும் உத்திர நட்சத்திரம் என்பதும் 12வது நட்சத்திரமாக வரக்கூடியது. இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி நாளை தான் நாம் பங்குனி உத்திரம் என்று கூறுகிறோம். முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக திகழக்கூடிய இந்த பங்குனி உத்திர நாளில் தான் முருகப்பெருமான் தேவயானையை திருப்பரங்குன்றத்தில் மணமுடித்தார் என்று புராணங்கள் கூறுகிறது. அப்படி நடக்கக்கூடிய முருகப்பெருமானின் திருமண வைபோகத்தை முன்னிட்டு எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
அன்றைய தினம் காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் போல் தீபத்தை ஏற்றி வைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்து கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானுக்கு அன்றைய தினம் முழுவதும் எந்தவித உணவையும் எடுத்துக் கொள்ளாமல் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு விரதம் இருந்து முடிந்த பிறகு மாலை நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை அல்லது சிலையையோ சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவரை சுற்றி ஆறு அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அவருக்கு வாசனை மிகுந்த மலர்கள் அல்லது செவ்வரளி மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
அந்த ஆறு தீபங்களுக்கும் மலர்களை வைக்க வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், வேல்மாறல் போன்ற எதுவாக இருந்தாலும் அதை ஆறு முறை படிக்க வேண்டும். இப்படி நாம் அன்றைய தினம் ஆறு தீபங்களை ஏற்று வைத்து ஆறு முறை முருகப்பெருமானுக்குரிய கவசத்தை படிப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே தீரும் என்று கூறப்படுகிறது. கல்யாண சாப்பாடு போல் வடை பாயாசம் அப்பளம் போன்றவற்றை செய்து வைத்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:லட்சுமி கடாட்சம் தரும் புஷ்ய யோகம்
முருகப்பெருமானின் திருமண நாளான பங்குனி உத்திர நாளன்று இந்த முறையில் முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து முருகப்பெருமானிற்காக திருமண படையலை படைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.