ரோட்டுக்கடை பானி பூரியை, நம் வீட்டிலேயே செய்ய முடியுமா? அதுவும், இவ்வளவு சுலபமாக!

pani-poori2
- Advertisement -

ரோட்டோர கடைகளில் விற்கும்  பானிபூரி சுவைக்கு மயங்காதவர்கள் கட்டாயம் யாருமே இருக்க முடியாது. கடைகளில் சாப்பிடும் பானி பூரியை நம் வீட்டிலும், சுவையாக, சுலபமாக செய்ய முடியும். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும், பானிபூரி என்றால் மிகவும் பிடிக்கும். நிறைய பேர் வீடுகளில் ரோட்டோர கடை பானிபூரி, ஆரோக்கியமாக, சுத்தமாக இருக்காது என்பதால் அதை சாப்பிட கூடாது என்று, குழந்தைகளை தவிர்த்து விடுவார்கள். சரி. நாமே, நம் வீட்டிலேயே, நம் கையாலேயே, ஆரோக்கியமான பானி பூரியை, நம்முடைய குழந்தைகளுக்கு செய்து தரலாமே! சுலபமாக பானி பூரி எப்படி செய்வது தெரிந்துகொள்ளலாமா?

pani-poori

Step 1:
முதலில் பூரியை எப்படி தயார் செய்வது என்பதை பார்த்துவிடுவோம். 1 கப் அளவு ரவை எடுத்துக் கொள்ள வேண்டும். 2 டேபிள்ஸ்பூன் அளவு மைதா, 2 டேபிள் ஸ்பூன் அளவு கோதுமை மாவு, 2 சிட்டிகை உப்பு, 1 ஸ்பூன் நல்லெண்ணெய், இவை எல்லாவற்றையும் முதலில் ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். மாவின் மீது, ஈரத் துணியைப் போட்டு மூடி, 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

ரவை ஈரத்தன்மையை உறிஞ்சும் தன்மை கொண்டது. 20 நிமிடங்கள் கழித்து மாவு சரியான பதத்தில் இருந்தால், பூரிக்கு அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் வரண்ட பதத்தில் இருந்தால், கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, மீண்டும் மாவை பிசைந்து கொள்ளலாம்.

poori

இந்த மாவை இரண்டு உருண்டைகளாக பிரித்து, பூரி கட்டையில் வைத்தோ, அல்லது சமையலறை திண்ணையின் மீதோ, கொஞ்சமாக மைதா மாவு தூவி, மாவு உருண்டைகளை பிரட்டி, மெல்லிசாக தேய்த்து, பிஸ்கட் கட்டரிலோ அல்லது கூர்மையாக உள்ள, வட்ட வடிவ மூடியிலோ, சிறுசிறு வட்டங்களாக வெட்டி எடுத்து, எண்ணெயில் போட்டு பக்குவமாக பொரித்து எடுக்க வேண்டும். எவ்வளவு மெல்லிசாக தேய்த்து எடுக்கிறார்களோ, அவ்வளவு மொறுமொறுவென்று, பூரி நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

எண்ணெயில் நன்றாக சிவந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்தால், பானிபூரி தயார்!. நன்றாக ஆறிய பின்பு இதை, ஒரு கவரில் கட்டி வைத்து விட்டீர்கள் என்றால் இரண்டு நாட்களுக்குக் கூட மொறுமொறுவென்று இருக்கும்.

poori1

Step 2:
இப்போது பானி பூரிக்கு உள்ளே ஊற்றக்கூடிய பானி! கொத்தமல்லி தண்ணீர்! எப்படி தயார் செய்வது என்பதை பார்த்துவிடுவோம். மிக்ஸி ஜாரில் 2 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகளை, போட்டுக்கொள்ளுங்கள். மல்லித்தழைகளை காம்போடு சேர்க்கலாம். அரைக் கைப்பிடி அளவு புதினா, சிறிதளவு இஞ்சி துண்டு, பச்சை மிளகாய் 2, தேவையான அளவு உப்பு, ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு இவைகளை சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

pani-poori-pani

இப்போது நமக்கு கொத்தமல்லி சட்னி பதத்தில், கொஞ்சம் விழுது கிடைத்திருக்கும். அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, கரைத்து அதன் பின் மிளகாய் தூள், மல்லி தூள், சாட் மசாலா, சேர்த்து மசாலா கலந்த தண்ணீரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், இதன் மேல் காராபூந்தி தூவி கூட பயன்படுத்திக் கொள்ளலாம். உப்பு, காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள் இது ஒரு ஓரமாக இருக்கட்டும்.

Step 3:
அடுத்ததாக பானி பூரி உள்ளே வைக்கக்கூடிய உருளைக்கிழங்கு மசாலா. மசாலாவிற்கு ஒன்றாக கலக்க வேண்டிய பொருட்கள்: (வேகவைத்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், ஆம்சூர் பவுடர், சாட் மசாலா கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.) இந்த மசாலாவை கொழகொழவென்று ஆகிவிடக்கூடாது. ஓரளவுக்கு உதிரி பதத்தில் இருக்க வேண்டும் அப்போதுதான் சுவையாக இருக்கும்.

pani-poori-masala

2 பெரிய உருளைக்கிழங்குகளை கொஞ்சம் உப்பு சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வைத்து, நன்றாக வேக வைத்து, தோலுரித்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மசித்த உருளை கிழங்குடன், வேக வைத்திருக்கும் பச்சை பட்டாணியாக இருந்தாலும் சரி, வெள்ளை கொண்டைக்கடலையாக இருந்தாலும் சரி, அந்த தானியத்தை ஒன்றிரண்டாக மசித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம். மசாலாவிற்கு தேவையான உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஆம்சூர் பவுடர், சாட் மசாலா, கொத்தமல்லி தழை,  இவைகளை ஒன்றாக சேர்த்து உருளைக்கிழங்கோடு பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது மசாலாவும் தயாராகிவிட்டது.

கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி இவைகளை மசாலாவில் சேர்க்க வேண்டும் என்றால் முந்தைய நாள் இரவே இவற்றை தண்ணீரில் போட்டு ஊற வைத்து இருக்க வேண்டும். அப்போதுதான் வேக வைத்து உடனடியாக மசாலாவில் சேர்க்க முடியும்.

pani-poori1

Step 4:
பார்ப்பதற்கு இவ்வளவு வேலையா என்று மலைத்துப் போகாதீர்கள்! சின்ன சின்ன வேலைகள்தான். இப்போது பானிபூரி சாப்பிட தேவையான எல்லா பொருட்களும், தயாராகிவிட்டது. வழக்கம்போல ஒரு முழு பானி பூரியை எடுத்து, நடுவில் ஓட்டை போட்டு, உருளைக்கிழங்கு மசாலாவை கொஞ்சம் உள்ளே வைத்து, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை கொஞ்சம் அதன் மேலே வைத்து, உங்கள் கையாலேயே தயாரித்த பாணியில் தோய்த்து, சுவைத்துப் பாருங்கள்! அருமையாக இருக்கும்.  உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்! உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பானி பூரியை செய்து கொடுங்கள்!

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டில் ‘பாமாயில்’ இருந்தால் போதும், மிகக் குறைந்த செலவில் ‘பாத்திரம் தேய்க்கும் சோப்’ நீங்களே செய்து விடலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -