இந்து கோவில்களில் விதவிதமான தல புராணங்களுடன் கூடிய எண்ணற்ற கோவில்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய இந்த ஒரு கோவில் வாரம் ஒரு இரவு மட்டுமே திறக்கப்படுகிறது. விடிவதற்குள் கோவில் கதவும் சாத்தப்பட்டு விடுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கோவிலா? என்று நினைக்கும் அளவிற்கு இருக்கக்கூடிய இந்த கோவில் பற்றிய ஆன்மீக குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில், பட்டுக்கோட்டை அருகே அமைந்திருக்க கூடிய, பரக்கலக்கோட்டை என்னும் ஊரில் அமைந்திருக்கிறது இந்த அதிசய திருத்தலம்! இதை குரு ஸ்தலம் என்றும் கூறப்படுகிறது. சிவன் கோவிலாக இருக்கக்கூடிய இந்த கோவிலில் பல அதிசயங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த கோவிலில் ஒவ்வொரு திங்கட்கிழமை இரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.
வருடம் ஒருமுறை பொங்கல் திருநாள் அன்று மட்டும் பகலில் திறக்கப்படும். மற்ற நேரங்களில் நடை சாத்தப்பட்டு தான் இருக்கும். இக்கோவிலில் இருக்கும் மூலவரை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் இருப்பார்கள். பிரசித்தி பெற்ற இந்த பொது ஆவுடையார் கோவிலில் முன்னொரு காலத்தில் முனிவர்கள் தவம் புரிந்ததாக கூறப்படுகிறது. இங்கு வெள்ளால மரம் ஸ்தல விருட்சமாக இருக்கிறது. இவ்விருட்சமே மூலவராகவும் திகழ்கிறது அதிசயம் தான்.
வெள்ளால மரத்தின் கீழே தவம் புரிந்த முனிவர்களுக்குள் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் பொதுவான தீர்ப்பு கொடுத்து சிவன் மரத்திலேயே ஐக்கியமாகியதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. இதனாலேயே பொதுவுடையார் எனப்படுகிறார். இந்த ஆலமரத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பி கருவறையாக செய்துள்ளனர்.
இம்மரத்திற்கு சந்தனம் பூசி சிவ உருவம் தெரிய நெற்றி பட்டை வைத்து, கண் மலர்களை பதித்து, திருநாசி, திருவாய், திருவாட்சி போன்றவற்றை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். மரமே சிவ ரூபம் எடுத்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வருவதாக நம்பப்படுகிறது. இம்மரத்தின் இலையே பிரசாதமாக இருக்கிறது. இவ்விலையை விளை நிலத்தில் போட்டால் விளைச்சல் அமோகமாகும். தொழுவத்தில் கட்டினால் கால் நடைகள் நன்றாக இருக்கும். வீட்டில் கட்டினால் செல்வம் சேருமாம்.
இங்கு வரும் பக்தர்கள் அவரவர் விருப்பப்படி காணிக்கைகளை செலுத்துவார்கள். வசதி படைத்தவர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை என்று உலோகங்களை தானம் கொடுப்பார்கள். இதனால் அவர்களுடைய செல்வம் பெருகுவதாக ஐதீகம் நிலவுகிறது. அது போல ஒவ்வொரு காணிக்கைக்கும் ஏற்ப பலன்களும் கிடைக்குமாம். அவர் அவர்களுக்கு விருப்பமான பணம், பொருள், நகை என்று காணிக்கை செலுத்துவார்கள். மேலும் நெல், தானியங்கள் கூட காணிக்கை செலுத்தப்படுவது உண்டு.
இதையும் படிக்கலாமே:
கால பைரவரின் இந்த பாடலை வாசித்தால் பகைவர்களும் நம்மை கண்டு அஞ்சுவார்கள்! தீராத நோய்களும், துன்பங்களும் தீர பைரவரை எப்படி வழிபடுவது?
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பயறு வகைகள், எள்ளு, நவதானியங்கள், மாங்காய், தேங்காய், மிளகாய், புளி, காய்கறிகள் என்று நாம் விரும்பும் பொருட்களை காணிக்கை செலுத்தினால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது ஐதீகம். நீதி கூறுவதால் கோவிலில் இருக்கும் இந்த சிவனை மத்தியபுரீஸ்வரர் என்றும் கூறுகின்றனர். இவருக்கு தென்னங்கீற்றால் செய்யப்பட்ட துடைப்பத்தை காணிக்கை செலுத்தினால் தென்னை ஓலை போல அடர்த்தியாக நீண்ட கூந்தல் வளரும் என்றும் கூறப்படுகிறது. இதனால் நீண்ட கூந்தல் பெற விரும்புபவர்கள் தென்னங்கீற்று துடைப்பத்தை காணிக்கை செலுத்துகின்றனர். ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க அவைகளை கூட காணிக்கை செலுத்தி வேண்டுதல்களை வைக்கின்றனர்.