நாவூறும் தேங்காய் துவையல் பாரம்பரிய முறையில் இப்படி ஒருமுறை அரைச்சு பாருங்க இனி தொட்டுக்க எதுவும் தேடவே மாட்டீங்க!

coconut-thengai-thuvaiyal2
- Advertisement -

தேங்காய் துவையல் பழைய சாதம் முதல் சூடான இட்லி, தோசை வரை எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொள்ள அவ்வளவு அருமையாக இருக்கும். அடிக்கிற வெயிலுக்கு பழைய சாதமும், தேங்காய் தொகையலும் வைத்துக் கொடுத்தால் போதும்! சட்டி நிறைய சோறு சாப்பிட்டு திருப்தியாக வேலையை பார்க்கலாம். பாரம்பரியமான முறையில் தேங்காய் துவையல், ஒவ்வொரு பொருட்களும் வறுத்து அரைத்து இப்படி செய்து பாருங்கள், அருமையாக இருக்கும். அதை எப்படி அரைப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

தேங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன், பூண்டு பற்கள் – 6, இஞ்சித் துண்டு – ஒரு விரல் நீளம், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, வர மிளகாய் – 6, சின்ன வெங்காயம் – 8, கறிவேப்பிலை 2 இணுக்கு, கல் – உப்பு தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

தேங்காய் துவையல் செய்முறை விளக்கம்:
பாரம்பரியமான முறையில் தேங்காய் துவையல் செய்வதாக இருந்தால் அதை முதலில் நீங்கள் வறுத்து அரைக்க வேண்டும். தேங்காய் துவையல் அப்படியே அரைக்கும் சுவையை விட, வறுத்து அரைக்கும் பொழுது அது பன்மடங்கு அலாதியான, அற்புதமான சுவையை கொடுக்கும். அதே போல உப்பு பயன்படுத்தும் பொழுது தூள் உப்பு பயன்படுத்த கூடாது! கல் உப்பு பயன்படுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை எடுத்து வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுந்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உளுந்து சிவக்க வறுபடும் பொழுது துவையலின் சுவை அட்டகாசமாக இருக்கும். உளுந்து சிவக்க வறுபட்டதும், இஞ்சித் துண்டு மற்றும் பூண்டு துண்டுகளை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 இணுக்கு கறிவேப்பிலையை சுத்தம் செய்து சேர்த்து வதக்கி விடுங்கள். இதனுடன் வர மிளகாய்களைக் காம்பு நீங்கி கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். புளிப்பு சுவைக்கு ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார்கள் எல்லாம் நீக்கி உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தாளித்த பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

இந்த பொருட்களெல்லாம் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதனை சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். துவையலுக்கு கொரகொரவென்று தான் அரைக்க வேண்டும். நைசாக இருந்தால் அதன் சுவை வித்தியாசப்படும். ஒரு சிறு தாளிப்பு கொடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும். இதனால் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து துவையலில் கொட்டினால் அட்டகாசமாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் பாரம்பரிய முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -