- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிர்ஷ்டம் தரும் பாரிஜாதம்

அதிர்ஷ்டம் தரும் பாரிஜாதம்

- Advertisement -

தெய்வீக சக்தி கொழிக்கும் பவளமல்லி எனப்படும் இந்த பாரிஜாத மலருக்காக இந்திரனுக்கும், கிருஷ்ணருக்கும் பெரும் யுத்தமே நடந்தது. இந்த பூவை கொண்டு பிரார்த்தனை செய்து வரங்கள் கேட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பாரிஜாத மலரின் புராண கதையும், அம்மலரால் உண்டாகக்கூடிய பலன்கள் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களையும் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும், துவாரகை மன்னனான கிருஷ்ணருக்கும் இடையே ஒரு மரத்துக்காகவே பெரிய யுத்தம் நடந்தது. அதுவும் தன் மனைவிக்காகக் கிருஷ்ணர் செய்த காதல் சாகசம். இந்தக் கதை புராணங்களில் மிகவும் சுவாரசியமானது. துவாரகையில் ஒரு நாள், தேவரிஷி நாரதர் சொர்க்கலோகத்திலிருந்து தெய்வீகமான பாரிஜாதப் பூக்களை (பவழ மல்லி என்றும் கூறுவார்கள்) எடுத்து வந்து, கிருஷ்ணரிடம் கொடுத்தார். அந்தப் பூக்கள் அவ்வளவு மணம்! வாடவே வாடாத தன்மை கொண்டவை.

- Advertisement -

கிருஷ்ணர் அந்தப் பூக்களைத் தன் முதல் மனைவியும், அன்புக்குரியவருமான ருக்மணிக்கு அளித்தார். வழக்கம்போல, நாரதர் இந்தப் பேச்சைக் கிருஷ்ணரின் மற்றொரு மனைவியான சத்தியபாமாவிடம் போட்டுக் கொடுக்க, அவளுக்கோ தாங்க முடியாத கோபம்! “எனக்கு மட்டும் ஏன் அந்த தெய்வீகப் பூ கிடைக்கவில்லை?” என்று கோபத்துடன் சென்று அறையில் சென்று அமர்ந்துவிட்டார். கிருஷ்ணர் சத்தியபாமாவைச் சமாதானப்படுத்த வந்தபோது, அவள் சொன்னாள்.. “எனக்குப் பூ மட்டும் போதாது. அந்தப் பூக்கள் பூக்கும் பாரிஜாத மரத்தையே பூமிக்குக் கொண்டு வந்து, என் தோட்டத்தில்தான் நட வேண்டும்!” என்று பிடிவாதம் பிடித்தாள்.

தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தார் கிருஷ்ணர். அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, கருடன் மீது ஏறிச் சொர்க்கலோகம் சென்றார். கிருஷ்ணர், தேவலோக நந்தவனத்தில் இருந்த பாரிஜாத மரத்தை இந்திரனிடம் கேட்டார். ஆனால், தேவர்களின் தலைவனான இந்திரனோ அதைக் கொடுக்க மறுத்துவிட்டான். “இந்தத் தெய்வீக மரம் பூமியில் உள்ள மனிதர்களுக்குச் சொந்தமில்லை!” என்று ஆணவத்துடன் பேசினான். அவனுடைய ஆணவத்தை முறியடிக்க எண்ணிய கிருஷ்ணர், அந்த மரத்தை வேரோடு பிடுங்கினார். இதைக் கண்ட இந்திரன், கிருஷ்ணரின் மீது தனது சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தைப் பிரயோகித்து, பயங்கரமான யுத்தம் செய்தான். இருப்பினும், அவனுடைய சக்தி கிருஷ்ணரின் முன் நிற்கவில்லை.

- Advertisement -

இந்திரனைப் போரில் தோற்கடித்து, கிருஷ்ணர் அந்தப் பாரிஜாத மரத்தை வெற்றிச் சின்னமாகத் தன் மனைவியுடன் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். மரத்தைச் சத்தியபாமாவின் தோட்டத்திற்குக் கொண்டு வந்தாலும், ருக்மணியையும் திருப்திப்படுத்த வேண்டுமே? கிருஷ்ணர் ஒரு கில்லாடி வேலை செய்தார்! அவர் அந்தப் பாரிஜாத மரத்தை சத்தியபாமாவின் தோட்டத்தில் நட்ட போதிலும், அதன் கிளைகள் அனைத்தும் வளைந்து ருக்மணியின் அரண்மனைப் பக்கமாகக் கிளை பரப்பி இருக்குமாறு பார்த்துக் கொண்டார். இதன் விளைவாக, மரம் சத்தியபாமாவின் தோட்டத்திலேயே இருந்தாலும், அந்த மரத்திலிருந்து உதிரும் வாடாத, வாசனை மிகுந்த பூக்கள் அனைத்தும் ருக்மணியின் தோட்டத்தில் தான் விழுந்தன. இப்படி, ஒரே மரத்தின் மூலம் இரண்டு மனைவியரின் மனத்தையும் திருப்திப்படுத்திய சாமர்த்தியசாலிதான் நம் கிருஷ்ணர்!

இதையும் படிக்கலாமே:
சரியான முடிவை எடுக்க உதவும் வழிபாடு

பாரிஜாத பவளமல்லி தெய்வீக அருளை பெற்றுள்ளது என்பது இந்த புராண கதையின் மூலம் நமக்கு விளங்குகிறது. இந்த மலரை கொண்டு வீட்டில் மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்து, வெள்ளிக்கிழமை தோறும் மனதார பிரார்த்தனை செய்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, தொழில் ரீதியான முன்னேற்றம் உண்டாகும். இதனால் வறுமை இல்லாமல் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

சற்று முன்