பொங்கல், இட்லி, தோசைக்கு பாசிப்பருப்பு இருந்தா போதும் 10 நிமிடத்திற்குள்ளேயே ருசியான சாம்பார் வெச்சிடலாமே!

siru-paruppu-sambar1
- Advertisement -

பொதுவாக பொங்கலுக்கு சிறுபருப்பு சாம்பார் செய்வது உண்டு. குறைந்த பொருட்களை வைத்து சட்டுனு பத்து நிமிஷம் கூட ஆகாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும், சூடான சாதத்துடனும் சாப்பிட அருமையான பாசிப்பருப்பு சாம்பார் எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பாசிப்பருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 150 கிராம், பெரிய வெங்காயம் – ரெண்டு, தக்காளி – இரண்டு, பச்சை மிளகாய் – 3, தாளிக்க: சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பாசிப்பருப்பு சாம்பார் செய்முறை விளக்கம்:
பாசிப்பருப்பு சாம்பார் செய்வதற்கு முதலில் 150 கிராம் அளவிற்கு பாசிப்பருப்பை எடுத்து களைந்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அதற்குள் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் இருந்தால் 10 எடுத்து தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இது இன்னும் சுவையை கூட்டிக் கொடுக்கும்.

பின்னர் பாசிப்பருப்பை அடுப்பில் வைத்து குழைய வேக வைக்க வேண்டும். பாசிப்பருப்பு ரொம்பவும் சீக்கிரமாக வெந்துவிடும் எனவே பத்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொண்டால் இந்த சாம்பார் செய்வதற்கு கொஞ்ச நேரம் கூட ஆகாது. பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் தாளித்து, ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் இதனுடன் மூன்று பச்சை மிளகாய் மற்றும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவுக்கு நன்கு வதங்கி வரும் பொழுது, தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவை மசிய வதங்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் குழைய வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொதிக்க விடுங்கள்.

பாசிப்பருப்பு சாம்பார் எந்த அளவிற்கு நீர்க்க இருக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் போதும். அதிகம் தண்ணீர் சேர்த்து விடக் கூடாது. டிபன் வகைகளுக்கு என்றால் குறைவாகவும், சாத வகைகளுக்கு என்றால் கொஞ்சம் அதிகமாகவும் சேர்த்துக் கொள்ளலாம். சாம்பார் நன்கு கொதித்து கெட்டியாகும் வரை காத்திருங்கள். ஐந்து நிமிடத்திலேயே சாம்பார் கொதித்து நன்கு கெட்டியாகி எல்லா பொருட்களும் ஒன்று ஒன்றாக திரண்டு நல்ல சுவையுடன் கூடிய ஆரோக்கியமான பாசிப்பருப்பு சாம்பார் நொடியில் தயாராகி விட்டிருக்கும். பிறகு நறுக்கிய மல்லி இலைகளை தூவி சுடச்சுட சாதம் அல்லது டிபன் வகைகளுக்கு பரிமாற வேண்டியது தான்! மிளகு பொங்கல் செய்யும் பொழுது இதை செஞ்சு பாருங்க செம டேஸ்டாக இருக்கும்.

- Advertisement -