பாகற்காய் கிரேவி செய்முறை

pavakkai gravy
- Advertisement -

நம்முடைய உணவில் அறுசுவைகளும் சேர்ந்து இருந்தால்தான் அது முழுமையான உணவாக கருதப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் சில சுவைகளை நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் உணர்ந்ததே இல்லாமல் போய்விட்டது. அவற்றுள் ஒன்றுதான் கசப்பு சுவை. கசப்பு சுவை மிகுந்த பொருட்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது பாகற்காய் தான். அப்படிப்பட்ட பாகற்காயை வைத்து எப்படி கிரேவி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

பாவற்காயில் ஆன்ட்டி ஆக்சைடு இருப்பதால் இது ரத்தத்தை சுத்தி செய்வதற்கு மிகவும் உதவுகிறது. மேலும் இரைப்பையில் இருக்கக்கூடிய பூச்சிகளை கொல்லவும் பசியை தூண்டவும் உதவுகிறது. பித்தத்தை தணிக்கும் ஆற்றல் உள்ளது. இதில் அதிக அளவு பீட்டா கரோட்டின், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் நம்முடைய கண், தோல் போன்றவற்றிற்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல், எலும்புகள் பற்கள் ஆரோக்கியமாகவும், தசை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடு சிறப்பாகவும் நடைபெறுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • பாகற்காய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுந்து – 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • பூண்டு – 15 பல்
  • கருவேப்பிலை – 2 இனுக்கு
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • புளி – எலுமிச்சை பழ அளவு

செய்முறை

முதலில் பாகற்காயில் இருக்கக்கூடிய முள் போன்ற அமைப்பை பீலரை வைத்து எடுத்துவிட்டு பாகற்காயை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் நறுக்கிக் கொள்ள வேண்டும். முற்றிய பாவற்காயாக இருந்தால் விதைப் பகுதியை நீக்கிவிட வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாகற்காயை போட்டு அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து லேசாக சிவக்கும் வரை அடுப்பில் வைத்து விட்டு பிறகு அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதே எண்ணெயில் கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், பூண்டு, கருவேப்பிலை இவற்றை போட்டு பூண்டு லேசாக சிவக்கும் வரை வதக்க வேண்டும். பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். இந்த சமயத்தில் கிரேவிக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி வதங்கிய பிறகு இதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து வதக்கி மூடி போட்டு மூடி விட வேண்டும். எண்ணெய் பிரியும் வரை இதை அப்படியே குறைந்த தீயில் வைத்திருக்க வேண்டும். எண்ணெய் பிரிந்ததும் இதில் நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பாவற்காயை சேர்த்து இதனுடன் புளி கரைசலையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி நன்றாக குறைந்த தீயில் 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

15 நிமிடம் கழித்து இது கிரேவி பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான பாகற்காய் கிரேவி தயாராகி விட்டது. இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, வெரைட்டி ரைஸ் என்று அனைத்திற்கும் சைடிஷ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கருப்பு உளுந்து சட்னி செய்முறை

கசப்பு சுவை மிகுந்த பாகற்காயை இந்த முறையில் நாம் சமைத்து தருவதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

- Advertisement -