நம்முடைய உணவில் அதிக அளவு தானிய வகைகளை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒவ்வொரு தானியத்திற்கும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் இருக்கிறது. அந்த சத்துக்களை வைத்து நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான விஷயங்களை நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தானிய வகைகளில் ஒன்றாக கருதப்படுவது தான் கருப்பு உளுந்து. அதாவது தோல் நீக்கப்படாத முழு உளுந்து. இந்த கருப்பு உளுந்தை நாம் தோலுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது நமக்கு பல வகைகளில் நன்மைகள் உண்டாகிறது. கிராமப்புறங்களில் இன்றைய காலத்திலும் கருப்பு உளுந்தை பெண் குழந்தைகளுக்கு அதிகளவில் தரும் வழக்கம் இருக்கிறது. அப்படிப்பட்ட கருப்பு உளுந்தை வைத்து சட்னி எப்படி செய்வது என்று தான் சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
இந்த கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த கருப்பு உளுந்தை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகளும் மூட்டுகளும் வலுப்பெறுகிறது. ரத்த சோகை நீங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. வயதிற்கு வந்த பெண் குழந்தைகளுக்கு அதிக அளவில் இந்த கருப்பு உளுந்தை தருவதன் மூலம் கர்ப்பப்பை வலுப்பெறுகிறது.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து – 1 கப்
- வர மிளகாய் – 6
- பூண்டு – 10 பல்
- சின்ன வெங்காயம் – 10
- தக்காளி – 2
- புளி – நெல்லிக்காய் அளவு
- இஞ்சி – ஒரு துண்டு
- கருவேப்பிலை – 2 இனுக்கு
- எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு கருப்பு உளுந்தை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். கருப்பு உளுந்தில் இருந்து வாசம் வந்து வெடிக்க ஆரம்பிக்கும் வரை வறுக்க வேண்டும். பிறகு அதை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்து விட வேண்டும்.
இப்பொழுது மறுபடியும் அதே கடாயை வைத்து அதில் அரை டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய் போட்டு வறுக்க வேண்டும். வரமிளகாய் சிவந்த பிறகு பூண்டு இஞ்சி வெங்காயம் இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கிய பிறகு இதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். கடைசியாக புளி மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக ஆரிய பிறகு அனைத்தையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து சட்னி தயாராகி விட்டது. இதை ஒரு பௌலில் மாற்றி விட்டு சட்னியை தாளிப்பதற்கு தாளிப்பு கரண்டியில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து கருவேப்பிலையை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் சுவையான கருப்பு உளுந்து சட்னி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: கொத்தவரங்காய் கிரேவி செய்முறை
கருப்பு உளுந்தில் களி, கஞ்சி, கூழ், சத்து மாவு உருண்டை என்று என்ன செய்தாலும் குழந்தைகள் அதை முழுமையாக சாப்பிடுவது கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படி நாம் சட்னி செய்து தருவதன் மூலம் குழந்தைகள் எந்தவித தயக்கமும் இன்றி விரும்பி சாப்பிடுவார்கள்.