
தெரிந்தும், தெரியாமலும் ஒரு மனிதன் செய்யும் பாவத்திற்கு உரிய தண்டனைகள் காலம் காலமாக மட்டும் அல்லாமல், ஜென்ம ஜென்மமாக தொடரும் என்று வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒரு பாவம் அடுத்தவர்களை ஏமாற்றியோ அல்லது துன்புறுத்தியோ சம்பாதிக்கக்கூடிய சொத்தோ, பணமோ பாவமாகும். இவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? என்பதைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
கஷ்டப்பட்டு ஒருவர் உடல் உழைப்பை கொடுத்து சம்பாதித்த பணமோ, பொருளோ, சொத்தோ ஏமாற்றப்பட்டோ, துன்புறுத்தியோ அடுத்தவர்கள் அபகரித்தால் அவர்கள் செய்த பாவத்திற்கான தண்டனை அடுத்தடுத்த ஜென்மங்களிலும் விடாது தொடரும். இவர்கள் நன்றாக இருப்பது போல வெளியில் தோன்றினாலும் உள்ளுக்குள் இவர்களுக்கான தண்டனையை கடவுள் கொடுத்திருப்பார்.
அந்த தண்டனையிலிருந்து மீள முடியாதவர்கள் யாரிடமும் செய்த பாவத்தை சொல்லவும் முடியாமல், ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் சரணடையும் ஒரே இடம் கடவுளின் திருவடி தான். கடவுளிடம் மன்றாடி வேண்டி எவ்வளவுதான் பிரார்த்தனை செய்தாலும் நீங்கள் செய்த பாவத்திலிருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியாது. தவறான வழியில் பணம் சம்பாதித்த அந்த பணம் உங்கள் தேவைகளை நிறைவேற்றினாலும், வேறு வழிகளில் உங்களுக்கான பிரச்சனைகளை இறைவன் உண்டாக்கி விடுவார்.
இதுவரை செய்த பாவத்தை மனதார உணர்ந்து இனி திருந்தி நல்ல வழியில் சம்பாதிப்பேன் என்பவர்கள் இந்த சிறு பரிகாரத்தை செய்து வாழ்க்கையில் மிகப்பெரிய மன நிம்மதியை பெறலாம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியான ஒரு பரிகாரத்தை பற்றி தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள். மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் பரிகாரம். மன்னிக்கவே முடியாத பாவங்களுக்கு கூட பரிகாரம் தீர்வு தரும்.
தவறான முறையில் இவ்வளவு காலம் பணம் சம்பாதித்து இருந்தாலும், இனி நீங்கள் திருந்த நினைப்பதால் இந்த ஒரு தானத்தை செய்து வாருங்கள். மழை, வெயில் என்று பார்க்காமல் வேலை செய்பவர்களுக்கு குடையை தானம் அளிக்க வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் இந்த தானத்தை தொடர்ந்து செய்யலாம். அல்லது முடிந்தவரை ஒரு சிலருக்காவது குடை தானம் செய்யுங்கள்.
குடை தானம் என்பது எல்லோருக்கும் செய்வது கிடையாது. தேவைப்படுபவர்களுக்கு தான் நாம் செய்தாக வேண்டும். நம் வீட்டிற்கு வரும் பால்காரர், போஸ்ட்மேன், கொரியர் பாய், பேப்பர் போடுபவர், சிலிண்டர் போடுபவர் என்று அன்றாடம் நமக்காக வெயில் என்றும் பாராமல், மழை என்றும் பார்க்காமல் சிரமப்பட்டு வேலை செய்பவர்களுக்கு குடை தானம் செய்யலாம். இப்போது இருக்கும் காலத்தில் குடைக்கு பதிலாக ரெயின் கோட் வாங்கி கொடுங்கள், இன்னும் சிறப்பானதாக அமையும்.
இதையும் படிக்கலாமே:
நினைத்தது நடக்க எழுத வேண்டிய முருகன் மந்திரம்
அந்த காலத்தில் குடை தானம் என்பது ரொம்பவே சிறப்பான ஒரு தானமாக இருந்து வந்தது. மும்மாரி மழை பெய்யும் காலங்களில் குடை தானம் செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் பல பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுபோல இப்பொழுது தவறான வழிகளில் பணம் சம்பாதித்து அதனால் படும் துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்க குடை தானம் அல்லது ரெயின் கோட் போன்றவற்றை தானம் செய்து பரிகாரம் தேடுவதன் மூலம் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நீங்கள் செய்த பாவமானது பாதிக்காமல் தடுக்கலாம்.