10 நிமிடம் கூட ஆகாது பட்டுன்னு பீர்க்கங்காய் சட்னி இப்படி செஞ்சு பாருங்க இன்னும் சாப்பிட வேண்டும் போல பசி எடுக்க ஆரம்பித்து விடும், அவ்ளோ டேஸ்டியாக இருக்கும்!

peerkangai-chutney0
- Advertisement -

எப்போதும் ஒரே மாதிரியான சட்னி அரைத்து போரடித்து போனவர்களுக்கு, இந்த பீர்க்கங்காய் சட்னி சற்று சுவையாக வேறு மாதிரியான டேஸ்ட்டில் இருக்கும். இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடக் கூடிய அற்புதமான பீர்க்கங்காய் சட்னி அல்லது பீர்க்கங்காய் தொக்கு எப்படி எளிதாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

பீர்க்கங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 1, பச்சை மிளகாய் – ஐந்து, பூண்டு பல் – பத்து, சின்ன வெங்காயம் – 10, கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, தக்காளி – ஒன்று புளி – சிறு நெல்லிக்காய் அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – 1/4 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வரமிளகாய் – ஒன்று.

- Advertisement -

பீர்க்கங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பீர்க்கங்காயை முழுதாக எடுத்து அதனை தோல் சீவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் உங்கள் காரத்திற்கு தகுந்த மாதிரி பச்சை மிளகாய்களை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். ஒரு நிமிடம் வதங்கியதும், ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டுக் கொள்ளுங்கள். பின் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை முழுதாக அப்படியே சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கி விடுங்கள். பீர்க்கங்காய் நீர்க்காய் என்பதால் சீக்கிரம் வதங்கி சுருண்டு விடும்.

- Advertisement -

பீர்க்கங்காய் போட்டதும் கொஞ்ச நேரம் வதக்கிவிட்டு, பின்னர் மூடி போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடத்தில் பீர்க்கங்காய் சுருள வெந்துவிடும். அதுவே நீர் விடும் என்பதால் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். தண்ணீர் எல்லாம் வற்றி போய் சுருண்டதும் புளி மற்றும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கி விடுங்கள். பிறகு இரண்டு நிமிடம் மூடி வைத்து வதக்கி விடுங்கள். அதன் பிறகு மத்து அல்லது மசிப்பதற்கு தகுந்தார் போல் ஏதாவது ஒன்றை வைத்து நன்கு சட்னி பதத்திற்கு மசித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் இதை அப்படியே ஆற விட்டுவிட்டு மிக்ஸி ஜாரில் பல்ஸ் மோடில் ரெண்டு சுற்று மட்டும் சுற்றி எடுங்கள் போதும், ரொம்பவும் அரைத்து விட்டால் நன்றாக இருக்காது.

கொரகொரவென்று அரைத்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும். இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். அதற்கு தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுந்து மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் காரத்திற்கு ஒரு வரமிளகாயை கிள்ளி போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்தால் அருமையான சூப்பரான பீர்க்கங்காய் சட்னி ரெடி! இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க.

- Advertisement -