Peerkangai Gravy : சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு சூப்பரான சைடு டிஷ்

peergankai gravy
- Advertisement -

ஏதாவது ஒரு டிபன் ஐட்டத்தை செய்து விட்டு அதற்கு சைட் டிஷ் தயார் செய்வது தான் குடும்பத் தலைவிகளுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும். ஒரே மாதிரி சைட் டிஷ் செய்தால் அது போர் அடித்து விடும் என்பதால் புதிதாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த முயற்சியை ஆரோக்கியமான முயற்சியாக மாற்றுவதற்கு பீர்க்கங்காயை வைத்து எப்படி கிரேவி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பீர்க்கங்காயில் பல அற்புதமான நன்மைகள் இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் பீர்க்கங்காயை தங்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ரத்தத்தின் சர்க்கரை அளவை அது கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்த சோகையை நீக்கி இரத்த அபிவிருத்தியை அதிகரிக்கிறது. இவை அனைத்தையும் விட மிகவும் முக்கியமான விஷயம் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது என்பதுதான்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பீர்க்கங்காய் – 300 கிராம்
  • எண்ணெய் – 1 1/2 ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • வெங்காயம் – ஒன்று பெரியது
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • பச்சை மிளகாய் – 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • தக்காளி – 1
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
  • தயிர் – 1/2 கப்
  • கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை

முதலில் பீர்க்கங்காயை சுத்தமாக கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு ஒரு இன்ச் அளவிற்கு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றையும் பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் நன்றாக காய்ந்ததும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் பிரிஞ்சி இலை, கடுகு, சீரகம் போன்றவற்றை போட வேண்டும். கடுகும், சீரகமும் பொறிந்த பிறகு அதில் வெங்காயம், கருவேப்பிலை இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் பாதி அளவு வெந்த பிறகு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கி கரையும் அளவு வதக்க வேண்டும். இப்பொழுது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

மசாலாக்களின் பச்சை வாடை போன பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து நன்றாக வதக்கி ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் தயிரை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த தயிரை பீர்க்கங்காயில் சேர்க்க வேண்டும். தயிர் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் அதற்கு பதிலாக கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கலாம்.

- Advertisement -

பிறகு அதில் தண்ணீரை ஊற்றி அதனுடன் கரம் மசாலா தூளையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மறுபடியும் ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். பீர்க்கங்காய் நன்றாக வெந்து எண்ணெய் பிரியும் அளவு அடுப்பில் இருக்க வேண்டும். எண்ணெய் பிரிந்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: உடல் பருமனை குறைத்து இரத்த விருத்தி அதிகரிக்கும் பைனாப்பிள் இப்படி ரசம் வைத்து சாப்பிடுங்க

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து அதே சமயம் சருமத்தை பளபளப்பாக்க உதவும் பீர்க்கங்காயை வைத்து ருசியான பீர்க்கங்காய் கிரேவி தயாராகி விட்டது.

- Advertisement -