தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்கு ருசியாக இருக்கிறதா என்று தான் நாம் பார்க்கிறோமே தவிர அது உடலுக்கு எந்த அளவிற்கு ஊட்டச்சத்தை தருகின்றது என்பதை இன்றைய சூழ்நிலையில் கவனிப்பதே கிடையாது. அந்த வரிசையில் உடலுக்கு அதிகப்படியான நீர் சத்தை, நார் சத்தையும் கொடுக்கக்கூடிய பீர்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேருக்கு இந்தப் பீர்க்கங்காய் பிடிக்காது. எப்படி செய்வது என்பது தெரியாது. பீர்கங்காய் வைத்து ஒருமுறை இப்படி குழம்பு வைத்து கொடுத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

முதலில் ஒரு மீடியம் சைஸ் பீர்க்கங்காயை தோல் சீவி வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அந்த பீர்க்கங்காய் 400 லிருந்து 500 கிராம் அளவு எடையுள்ள காயாக இருந்தால் இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் அளவுகள் சரியாக இருக்கும்.
ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் இரண்டு மீடியம் சைஸ் தக்காளி பழங்களை போட்டு அரைத்து, அந்த விழுதை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன், நெல்லிக்காய் அளவு – புளி, சீரகம் – 1 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்து இதையும் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக இப்போது குழம்பை தாளிக்க செல்லலாம். ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, பொடியாக நசுக்கிய பூண்டு பல் – 4, பச்சை மிளகாய் – 2, இந்த பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பூண்டு எண்ணெயில் கொஞ்சம் வறுபட்ட உடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை வெங்காயத்துடன் சேர்த்து, தக்காளியின் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து 30 வினாடிகள் வரை வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய்களை கடாயில் சேர்த்து ஒரு நிமிடம் மீண்டும் வதக்கி, லேசாக தண்ணீர் தெளித்து, குழம்புக்கு தேவையான அளவு உப்புப் போட்டு, ஒரு மூடி போட்டு பீர்க்கங்காயை மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வேக வையுங்கள்.

பீக்கங்காய் கால்பாகம் வெந்துவிடும். இப்போது மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து விட்டு, தேவையான அளவு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, மீண்டும் ஒருமுறை மூடி போட்டு எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சூப்பரான சுவையான வாசமான பீர்க்கங்காய் குழம்பு தயார். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி, சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சொல்ல வார்த்தை ஏது. உங்களுக்கு இந்த பீர்க்கங்காய் குழம்பு குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.