இட்லிக்கு தொட்டு சாப்பிட வழக்கமா செய்யும் சட்னி சாம்பாருக்கு ஒரு நாள் லீவு விட்டு, பீர்க்கங்காயில் இப்படி ஒரு சைடு டிஷ் செய்து வையுங்கள். 2 இட்லி சாப்பிடுறவங்க கூட, 4 இட்லி சாப்பிடுவாங்க.

masiyal
- Advertisement -

இட்லி தோசை என்றாலே நம்முடைய வீடுகளில் வழக்கம் போல சட்னி, சாம்பார், கார சட்னி இப்படி தான் ஏதாவது ஒன்று செய்வோம். ஆனால் கொஞ்சம் சுவையாக வித்தியாசமாக சைவ சாப்பாட்டில் பீர்க்கங்காயை வைத்து இப்படியும் ஒரு கடையல் செய்யலாம். இதை பீர்க்கங்காய் மசியல் என்று கூட சொல்லுவார்கள். இது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி கூட. அதே சமயம் குக்கரில் இரண்டு விசில் விட்டால் சுலபமாக வேலை முடிந்துவிடும். வாங்க வித்தியாசமான இந்த சைடு டிஷை எப்படி செய்வது என்று பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் ஒரு குக்கரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் மீடியம் சைஸில் இருக்கும் பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி சேர்க்கவும். பெரிய சைஸ் இருக்கும் பெரிய வெங்காயம் நறுக்கியது 1, பூண்டு பல் தோல் உரித்தது 4, பச்சை மிளகாய் 4, நறுக்கிய தக்காளி பழம் 1, புளி சின்ன கோலி குண்டு அளவு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், இந்த குழம்புக்கு தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை இதில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி இரண்டிலிருந்து மூன்று விசில் விட்டு வேக வைக்கவும்.

- Advertisement -

இதில் காரத்திற்கு வெறும் பச்சை மிளகாய் தான். வர மிளகாய் பொடியோ அல்லது சாம்பார் பொடியை நாம் சேர்க்கப்போவது கிடையாது. ஆகவே உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் முதலிலேயே இதில் போட்டுக் கொள்ளவும். இந்த பொருட்கள் எல்லாம் வெந்து, விசில் அடங்கியதும் குக்கரை திறந்து பாருங்கள். நன்றாக தண்ணீர் விட்டு பொருட்கள் எல்லாம் குழைய குழைய வெந்திருக்கும்.

தண்ணீரை மட்டும் வடிகட்டி விட்டு ஒரு மத்தை வைத்து மீதம் இருக்கும் பொருட்களை நன்றாக மசிய கடைந்து கொள்ளவும். உங்களுக்கு ஒன்றும் இரண்டுமாக தொக்கு போல தேவை என்றாலும் இதை லேசாக மசித்து விடலாம். அது நம்முடைய விருப்பம் தான். இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக மசிந்து வந்த பிறகு வடித்து வைத்திருக்கும் தண்ணீரையும் இதோடு ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மசியில் ரொம்பவும் திக்காக வேண்டுமா அல்லது கொஞ்சம் குழம்பு போல வேணுமா அது உங்களுடைய தேவையை பொருத்தது. கொஞ்சம் தண்ணீராக வேண்டும் என்றால் கொதிக்க கொதிக்க சுடுதண்ணியை இதில் ஊற்றிக் கொள்ளலாம். பச்சை தண்ணீர் ஊற்றக்கூடாது. சரி, இப்போது இந்த பீர்க்கங்காய் மசியல் தயாராக உள்ளது. இதற்கு இறுதியாக ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நமக்கு மட்டும் எதுவும் நல்லாத நடக்க மாட்டேங்குதே என்று நினைக்கிறவங்க ஒரு துண்டு வசம்பை இப்படி மட்டும் பயன்படுத்தி பாருங்க. இதுவரை உங்களுக்கு நடக்காத நம்மையெல்லாம் நடக்கும்.

இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயிலோ, தேங்காய் எண்ணெயிலையோ கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 10 பல், கருவாப்பிலை 1 கொத்து, வர மிளகாய், பெருங்காயம், தாளித்து இதை நன்றாக பொன் நிறத்தில் வதக்கி அப்படியே குக்கரில் இருக்கும் பீர்க்கங்காய் மசியலில் கொட்டி கலந்து, சுடச்சுட இட்லிக்கு மேலே வார்த்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். நிஜமாவே சாம்பாருக்கு பதில் இந்த சைட் டிஷ் இட்லிக்கு தோதானதுதாங்க. நீங்க வேணும்னா உங்க வீட்ல இந்த ரெசிபி ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -