நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். கஷ்டங்கள் என்பதும் வரத்தான் செய்யும். அவற்றை சரி செய்வதற்குரிய முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள தான் செய்வோம். ஒரு சில பிரச்சினைகளுக்கு எவ்வளவு தான் முயற்சிகளை நாம் செய்தாலும் அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர முடியாமல் கஷ்டப்படுவோம். அந்த சூழ்நிலையில் தெய்வமே கதி என்று தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு அந்த பிரச்சனை தீர வேண்டும் என்ற வேண்டுதலையும் முன் வைப்போம். அப்படி குறிப்பிட்ட பிரச்சினை தீர்வதற்கு வீட்டில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பிரச்சினைகள் தீர தீபம்
பொதுவாக தெய்வ வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வீட்டில் கண்டிப்பான முறையில் தீபமேற்றி வழிபாடு செய்வார்கள். ஆலயத்திற்கு செல்பவர்களாக இருந்தாலும் ஆலயத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வார்கள். தீபம் என்பது எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்காக எண்ணெய், திதி போன்றவற்றை வாங்கித் தர வேண்டும் என்று கூறுவார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த தீபம் நம்முடைய பிரச்சினையையும் தீர்க்கும். அந்த தீபத்தை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த தீபத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இந்த மூன்று கிழமைகளில் மட்டும் தான் ஏற்ற வேண்டும். அதேபோல் இந்த தீபத்தை பூஜை அறையில் ஏற்றக்கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. பூஜை அறையில் நாம் ஏற்றக்கூடிய தீபத்தை எப்பொழுதும் போல் ஏற்றிய பிறகு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் என்பது வேப்ப எண்ணெயாக இருக்க் வேண்டும். இந்த வேப்ப எண்ணெய்யால் நாம் தீபம் ஏற்றும் பொழுது நம்மிடமும் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது .
வீட்டின் தென்மேற்கு திசையில் எந்த அறை இருந்தாலும் அந்த மூலையில் ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டின் மீது ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்கு சற்று பெரியதாக இருக்க வேண்டும். அந்த அகல்விளக்கு நிறைய வேப்ப எண்ணையை ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு பஞ்சுத்திரி போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அந்த எண்ணெயில் நெல்லிக்காயின் கொட்டைகள் ஆறு போட வேண்டும். இந்த நெல்லிக்காய் கொட்டைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது நாமே கூட நெல்லிக்காயை வாங்கி அதன் சதைப்பகுதியை நீக்கிவிட்டு கொட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்ததாக இதில் நாம் இரண்டு சிட்டிகை வசம்பு பொடி சேர்க்க வேண்டும். வசம்பை வாங்கி வந்து காயவைத்து நாமே வீட்டில் பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியில் இருந்து இரண்டு சிட்டிகையை இந்த எண்ணெயில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு ஒரு சிறிய வசம்பு கட்டையையும் அந்த எண்ணெயில் போட்டு விட வேண்டும். பிறகு அந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து அந்த தீபத்தை பார்த்தவாறு உங்களுடைய எந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று முழுமனதோடு குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த தீபமானது குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும்.
அடுத்த முறை தீபம் ஏற்றும் பொழுது அகல் விளக்கை சுத்தம் செய்து புதிதாக வேப்ப எண்ணெய், புதிதாக திரி போட்டுக் கொள்ளுங்கள். நெல்லிக்கனி நெல்லிக்காய் கொட்டை மற்றும் வசம்பு கட்டை மட்டும் ஏற்கனவே உபயோகப்படுத்தியதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வசம்பு பொடி புதிதாக போட வேண்டும். இப்படி நாம் தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் தீபம் ஏற்றி வைத்து குறிப்பிட்ட அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்வதன் மூலம் விரைவிலேயே அந்த பிரச்சனை தீர்வதற்குரிய வழி கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:தோஷம் நீக்கும் தூப பரிகாரம்
முழு மனதோடு தெய்வ நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி வைத்து பிரச்சினைகள் தீர வேண்டும் என்று வேண்டுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் குலதெய்வத்தின் அருளால் அவர்களுடைய பிரச்சினை முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.