ஒருவருடைய வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நவகிரகங்கள் மிக முக்கிய காரணமாக திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக ராகு கேது, சனீஸ்வர பகவான் போன்றவர்கள், அதீத முக்கியத்துவம் மிகுந்த கிரகங்களாக கருதப்படுகின்றன. இவர்கள் மூவரும் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும் ஒருவருடைய வாழ்க்கையை தலைகீழாக அதுவும் எதிர்மறையான முறையில் மாற்றக்கூடியவர்களாகவும் திகழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் தாக்கத்திலிருந்து வெளியே வருவதற்கும் நமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சினையிலிருந்து வெளியே வருவதற்கும் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரச்சினைகளை தீர்க்கும் வழிபாடு
சிவபெருமானின் உக்கிர வடிவங்களில் ஒன்றாக திகழ்வதுதான் காலபைரவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் தொடர்ச்சியாக வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலதரப்பட்ட பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்ய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போகும் என்றே கூறலாம்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தேய்பிறை அஷ்டமி அக்டோபர் மாதம் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் ராகு காலமான மூன்று மணியிலிருந்து நான்கு முப்பது மணிக்குள் இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் பிரச்சினைகள் அனைத்துமே தீரும் என்று கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரு சிவப்பு நிற துணி வேண்டும். முதலில் செவ்வாய்க்கிழமை வரக்கூடிய ராகு நேரமான மூன்று மணியிலிருந்து நான்கு முப்பது மணிக்குள் வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து முழு மனதோடு கால பைரவரை வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணியில் பைரவருக்கு மிகவும் பிடித்தமான சில பொருட்களை நாம் வைக்கப் போகிறோம். அவ்வாறு வைக்கும் பொழுது ஒவ்வொரு பொருளாக நாம் வைக்கும் பொழுது ஓம் ஸ்ரீம் கால பைரவரே போற்றி ஓம் என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அந்த சிவப்பு நிற துணியில் வைக்க வேண்டிய பொருளாக திகழ்வது வில்வ இலை. இந்த வில்வ இலைக்கு மேல் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய செம்பருத்திப்பூ அல்லது செவ்வரளி பூவோ ஈரம் இல்லாத நிலையில் இருக்க வேண்டும்.
பிறகு அதற்கு மேல் நாயுருவி பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு வைக்க வேண்டும். நாயுருவி பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றுதான். ஒருவேளை நாயுருவி பொடி கிடைக்கவில்லை என்பவர்கள் ஒரு வில்லை சந்தனத்தை வைத்து விடுங்கள். அடுத்ததாக இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகு, ஒரே ஒரு ஏலக்காய், சிறிதளவு கிராம்பு, ஒரு துண்டு பச்சை கற்பூரம், இவற்றை வைத்துவிட்டு இதனுடன் வாசனை மிகுந்த ஜவ்வாது, புனுகு போன்றவற்றையும் வைத்து மூட்டையாக கட்டி, அந்த தீபத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
பிறகு முழு மனதோடு கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு இந்த மூட்டையை அப்படியே பத்திரமாக உங்களுடைய பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி நாளில் இந்த பொருட்களை எடுத்து கால்படாத இடத்தில் அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட்டு புதிதாக இந்த பொருட்களை வாங்கி வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் உண்டாக தேய்பிறை அஷ்டமி வழிபாடு
இப்படி செய்வதன் மூலம் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கக் கூடிய பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.