ஒவ்வொரு முறை பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்த பின்பும், அது நீண்ட நாட்களுக்கு கறுக்காது இருக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் சுத்தம் செய்யும் பொழுது கைகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. மேலும் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்த பின்பும், உடனே கறுத்து போய்விடுகிறது. பூஜை பாத்திரங்கள் உடனே கறுத்து போகாமல் இருக்கவும், கை வலிக்காமல் சுத்தம் செய்யவும் ஒரு அற்புதமான டிப்ஸ் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொழுது முதலில் அதில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகள் மற்றும் மஞ்சள், குங்கும பொட்டுகளை ஒரு பேப்பர் அல்லது டிஷ்யூ கொண்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு பயன்படுத்திய புளியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு மார்க்கெட்டில் விதவிதமான பொருட்கள் விற்பனைக்கு உள்ளன, ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தாது. சிலருடைய கைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
நம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் புளியை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்தி வாருங்கள். குழம்பு வைக்க, ரசம் வைக்க என்று பயன்படுத்திய மீதம் இருக்கும் புளியை தூக்கி எறிந்து விடுவோம். அதனை தூக்கி எறியாமல் சேகரித்து வைத்தால் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படும். இந்த புளியை கொண்டு முதலில் எல்லா பாத்திரங்களையும், எல்லா இடங்களிலும் படும்படி ஒருமுறை நன்கு தேய்த்து சுத்தம் செய்து கழுவி விடுங்கள்.
பின்பு ஈரம் இல்லாத சபீனாவை கொண்டு பூஜை பொருட்களின் மீது சாதாரண கைகளால் தேயுங்கள். ஸ்கிரப்பர், பிரஷ் எதுவும் பயன்படுத்த வேண்டாம். கைகளில் ஈரம் இல்லாத சபீனாவை கொண்டு லேசாக தேய்த்தாலே, பூஜை பாத்திரங்கள் அவ்வளவு பளிச்சென்று மின்னும். இந்த முறையில் சுத்தம் செய்யும் பொழுது நீண்ட நாட்களுக்கு பூஜை பாத்திரங்கள் கறுத்து போகாது அதன் பொலிவும் இழக்காது.
கழுவிய பின்பு உடனே ஒரு பெரிய பவுலில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதில் பன்னீர் ஒரு மூடி அளவிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் பூஜைப் பொருட்களை போட்டு ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விடுங்கள். அதன் பிறகு ஒரு சுத்தமான துணியை கொண்டு ஈரத்தை துடைத்து பேன் காற்றில் காய விடுங்கள். நன்கு காய்ந்ததும் எடுத்து பூஜைக்கு உரிய அலங்காரங்களை செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே:
8-10-2024 வளர்பிறை சஷ்டி முருகன் வழிபாடு
இந்த முறையில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்து, நீங்கள் பூஜைக்கு பயன்படுத்தினால், அடுத்த 20 நாட்களுக்கு பூஜை பாத்திரங்கள் அதன் பொலிவை கொஞ்சம் கூட இழக்காது, தங்கம் போல தகதகவென்று மின்னும். இனி அடிக்கடி பூஜை பாத்திரங்களை கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. காசு கொடுத்து எந்த பொருட்களையும் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது. வீட்டில் இருக்கும் இந்த எளிமையான பொருட்களை வைத்து ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கு வேலையும், நேரமும் நிறையவே மிச்சமாகும்.