10 நிமிடத்தில் சாம்பார், தயிருக்கு தொட்டுக் கொள்ள சுவையான ‘உருளைக்கிழங்கு சில்லி’ எப்படி செய்வது?

potato-chilli

உருளைக்கிழங்கு வாய்வு என்றாலும் அதைக் குறைத்துக் கொள்வதற்கு என்னவோ நமக்கு மனம் வருவதில்லை. ஏனென்றால் உருளைக்கிழங்கு அந்த அளவிற்கு சுவையை கொடுப்பது ஆகும். சின்னஞ்சிறிய குழந்தைகள் .முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே உருளைக்கிழங்கு என்றால் அலாதியான பிரியம் உண்டு. அதில் பெருங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்தால் வாய்வு போய் விடப் போகிறது அவ்வளவு தானே! தயிர் சாதம் மற்றும் சாம்பார் சாதத்திற்கு அட்டகாசமான சுவையில் ‘உருளைக்கிழங்கு சில்லி’ பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்!

potato-urulai

உருளைக் கிழங்கு சில்லி செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
கடலை மாவு – 1 கப்
பொரிய வெங்காயம் – 2
குடை மிளகாய் – 1

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ – 1/4 சிட்டிகை
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காய தூள் – 1/4 சிட்டிகை

potato-chilli1

சில்லி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

உருளைக் கிழங்கு சில்லி செய்முறை விளக்கம்:
முதலில் உருளைக் கிழங்குகளை தோலுரித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீளவாக்கில் உருளை உருளையாக நறுக்கி உப்பு நீரில் ஐந்து நிமிடம் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் சில்லி பவுடர், கடலை மாவு, பெருங்காய தூள், உப்பு ஆகிய மூன்றும் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கெட்டியாக கொஞ்சமாக நீரூற்றி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் உப்பு நீரில் ஊற வைத்து எடுத்த உருளைக் கிழங்கை ஒவ்வொன்றாக எடுத்து கலந்து வைத்துள்ள கடலை மாவு பேஸ்டில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

potato-chilli2

பிறகு ஒரு புறம் இன்னொரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணை காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அஜினமோட்டோ கலந்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கிளற வேண்டும். கடைசியாக தக்காளி சாஸ் ஊற்றி பொரித்து எடுத்து வைத்துள்ள உருளைக் கிழங்குகளை போட்டு இரண்டு நிமிடம் நன்கு பிரட்டி எடுத்தால் போதும்! சுவையான சூடான ‘உருளைக்கிழங்கு சில்லி’ தயாராகி விட்டிருக்கும். பெருங்காயம், இஞ்சி, பூண்டு ஆகிய பொருட்கள் சேர்த்து உள்ளதால் வாய்வை எடுத்து விடும். எனவே பயப்படாமல் எவ்வளவு வேண்டுமானாலும் ருசித்து சாப்பிடலாம்! இம்முறையில் உங்கள் வீட்டில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.