தோசை, சப்பாத்திக்கு பன்னீர் கிரேவி போலவே வெறும் உருளைக்கிழங்கை வைத்து மணக்க மணக்க நாவூறும் கெட்டியான கிரேவி எளிதாக எப்படி செய்வது?

potato-gravy1
- Advertisement -

சப்பாத்தி இட்லி, தோசை, பூரிக்கு பன்னீர் கிரேவி செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். சிலருக்கு பன்னீர் பிடிக்காமல் இருக்கும். அவர்கள் உருளைக்கிழங்கு மற்றும் கடலை பருப்பு சேர்த்து பன்னீர் போல ஒரு சூப்பரான மணக்க மணக்க நாவூறும் கெட்டியான கிரேவி இப்படி தயாரித்துப் பாருங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கு கிரேவி எப்படி செய்வது? என்பதைத் தான் இனி இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

உருளைக்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2, கடலைப்பருப்பு – கால் கப், பெரிய வெங்காயம் – 3 தக்காளி – 2, பூண்டு பற்கள் – 4, இஞ்சி – ஒரு துண்டு, மல்லி விதைகள் – ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு – 1, பட்டை – ஒரு துண்டு, பிரிஞ்சி இலை – ஒன்று, அன்னாசி மொக்கு – ஒன்று, கல்பாசி – கொஞ்சம், வர மிளகாய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, காஷ்மீரி மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

உருளைக்கிழங்கு கிரேவி செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கடலைப்பருப்பை ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய உருளைக் கிழங்கு துண்டுகளுடன் ஊறிய கடலைப்பருப்பை சேர்த்து தண்ணீர் எதுவும் விடாமல் நைஸாக மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் சுத்தம் செய்த தக்காளி துண்டுகள், தோல் உரித்து ஒன்றிரண்டாக நறுக்கிய பெரிய வெங்காயம், ரெண்டு வர மிளகாய், ஒரு பச்சை மிளகாய் காரத்திற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் தனியா விதைகள், பூண்டு பற்கள் தோல் உரித்து சேர்க்க வேண்டும். பூண்டு பற்கள் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் நீங்கள் வாசத்திற்கு பயன்படுத்தும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கல்பாசி, அன்னாசி மொக்கு எல்லாமே சேர்த்து 5 நிமிடம் அடுப்பை பற்ற வைத்து கொதிக்க விடுங்கள். அதற்கு முன்பு அதன் மீது ஒரு மூடி போட்டு வையுங்கள். நீங்கள் அரைத்த இந்த உருளைக்கிழங்கு மற்றும் கடலை பருப்பு விழுதை அந்த தட்டின் மீது பரப்பி வையுங்கள். பின்னர் அதற்கு ஒரு மூடி போட்டு 5 நிமிடம் வேக விடுங்கள். பாத்திரத்திற்குள் இருக்கும் காய்கறிகள் வெந்து மேலே இருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் கடலைப் பருப்பு விழுது நன்கு வெந்து கெட்டியாகிவிடும்.

- Advertisement -

பிறகு உருளைக் கிழங்கை கத்தி பயன்படுத்தி வில்லைகளாக சதுரங்களாக வெட்டி எடுத்தால் பனீர் போலவே சூப்பராக இருக்கும். பின்னர் நீங்கள் பாத்திரத்தில் வேக வைத்துள்ள பொருட்களை வடிகட்டி தண்ணீரை எடுத்து விட்டு பொருட்களை மட்டும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

மஞ்சள் தூள் மற்றும் நிறத்திற்கு காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய்த்தூள் இல்லை என்றால் விட்டுவிடலாம் அது ஆப்ஷனல் தான். இப்போது இந்த கிரேவிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நீங்கள் வடிகட்டி எடுத்து வைத்துள்ள தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கிரேவி பதத்திற்கு அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது எனவே உங்களுக்கு தேவையான அளவிற்கு கொஞ்சமாக சேர்த்து நீங்கள் வில்லைகளாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளையும் சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். கிரேவி கொதித்து மசாலா முழுவதும் இறங்கி கெட்டியான பதத்திற்கு வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சூடான சாதம் என்று எல்லாவற்றுக்குமே அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.

- Advertisement -