பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அவர்களுக்கு மதிய உணவாக எதை செய்து கொடுப்பது என்பது மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். அதிலும் குறிப்பாக பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு செய்வது ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். எதை செய்து கொடுத்தால் அவர்கள் அதை வீணாக்காமல் சாப்பிடுவார்கள் என்று யோசித்து அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுக்க வேண்டும் என்று தான் அனைத்து தாய்மார்களும் விரும்புவார்கள். வீட்டில் இருக்கும் பொழுது செய்து கொடுக்கும் உணவை விட பள்ளிக்கு செல்லும் பொழுது செய்து கொடுக்கும் உணவில் அதிக கவனம் செலுத்தும் தாய்மார்கள் பலர் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட தாய்மார்களுக்கான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியான் இந்த ரெசிபி. எந்த ஒரு வெரைட்டி ரைசை செய்து கொடுத்தாலும் அதனுடன் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு ப்ரை செய்து கொடுத்தால் குழந்தைகள் அந்த உருளைக்கிழங்கிற்காகவே சாப்பாடை சாப்பிடுவார்கள். இதே உருளைக்கிழங்கை வைத்தே சாதம் செய்து கொடுத்தால் அந்த சாதமும் காலியாகும் அல்லவா? அந்த வகையில் தான் இன்றைய சமையல் குறிப்பு குறித்த பகுதியில் லஞ்ச் பாக்ஸ் ரெசிபியான உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 2
- உளுந்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 9
- தனியா – 2 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
- புளி – நெல்லிக்காய் அளவு
- நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
- கருவேப்பிலை – 2 கொத்து
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- வடித்த சாதம் – 2 கப்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஏழு, தனியா, சீரகம், வெந்தயம், புளி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக சிவந்த பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, நல்லெண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, மீதம் இருக்கும் உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் இவற்றை சேர்க்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு பெருங்காயம் கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். தோல் நீக்கப்பட்ட பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு வேகும் அளவிற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து உருளைக்கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது. உருளைக்கிழங்கு வெந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
உருளைக்கிழங்கும் பொடியும் நன்றாக கலந்த பிறகு வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சாதத்தில் மசாலா பொருட்கள் அனைத்தும் நன்றாக கலந்த பிறகு கொத்தமல்லி தலையை தூவி அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். மிகவும் எளிமையான உருளைக்கிழங்கு சாதம் தயார் ஆகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: ஆளி விதை இட்லி பொடி செய்முறை
இந்த முறையில் குழந்தைகளுக்கு லஞ்ச் செய்து கொடுத்தால் மீதம் கொண்டு வராமல் அனைத்தையும் சாப்பிட்டு விடுவார்கள்.