புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உரிய மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளை நினைத்து பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு வழிபாடு செய்வார்கள் என்பதும் நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று பெருமாளை எந்த முறையில் வழிபட்டால் அவரின் பரிபூரண அருள் கிடைக்க பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வோம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை மந்திரம்
பெருமாளின் அருள் ஒருவருக்கு கிடைத்து விட்டால் அவருக்கு சனிபகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமியின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதனால் வறுமையில் கஷ்டப்படுபவர்கள் தங்கள் வறுமையிலிருந்து வெளிவந்து செல்வ செழிப்புடன் நலமுடனும் வாழ முடியும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பெருமாளின் அருளை பெறுவதற்கு புரட்டாசி கடைசி சனிக்கிழமை கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை ஆன அக்டோபர் மாதம் 12ஆம் நாள் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவருக்கு துளசி இலைகளை பயன்படுத்தி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். எந்த பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைத்தாலும் துளசி தீர்த்தத்தை கண்டிப்பான முறையில் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலையும், அம்பாளுக்கு மஞ்சளையும் வாங்கி தர வேண்டும். மேலும் கருடருக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் நம்மால் முடிந்த அளவிற்கு பிறருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நம்மை கஷ்டப்படுத்தக் கூடிய நம்முடைய கர்ம வினைகள் குறைய ஆரம்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அன்றைய தினத்தில் நாம் பெருமாளின் இந்த இரண்டு மந்திரங்களை 108 முறை பெருமாளின் ஆலயத்தில் அமர்ந்த வண்ணமோ அல்லது வீட்டு பூஜை அறையில் அமர்ந்த வண்ணமோ கூறி வழிபாடு செய்வது என்பது பெருமானின் பரிபூரண அருளைப் பெறச் செய்யும்.
மந்திரம்
“ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ கோவிந்தாய நமஹ”
இதையும் படிக்கலாமே:பணவரவு அதிகரிக்க விஜயதசமி பரிகாரம்
இந்த எளிமையான வழிபாட்டு முறையை புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை விஜயதசமி நாளும் சேர்ந்து வரக்கூடிய அக்டோபர் மாதம் 12ஆம் தேதி மேற்கொள்பவர்களுக்கு பெருமாள் மற்றும் அம்பாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று அவர்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதோடு செல்வ செழிப்புடனும் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.