புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே வீட்டை எல்லாம் சுத்தபத்தமாக வைத்துக் கொண்டு, மனதையும் தூய்மையாக்கி இறைவனே கதி என்று முழு மனதார திருமாலை நினைத்து வழிபடுகின்றோம். அவருக்குரிய இந்த மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும், ரொம்பவே முக்கியமானது. சனிக்கிழமையில் பெருமாளிடம் வேண்டியது கிடைக்க என்ன செய்யணும்? எதை செய்யக்கூடாது? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
பெருமாள் மட்டுமல்ல எந்த ஒரு கடவுளாக இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுது இறைவனே நம் முன் காட்சி தருவதாக ஒரு ஐதீகம் உண்டு. இறைவனை அடைவதைத் தவிர பேரின்பம் இவ்வுலகில் எதுவும் இல்லை என்று ஆன்றோர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். இறைவனே நம் வேண்டுதல்களுக்கு செவி கொடுக்க, ஏழை ஒருவர் செய்த செயலினை கதையாக பார்ப்போம்.
ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் பெருமாள் மீது பேரன்பு கொண்டிருந்தார். அளவு கடந்த பக்தியினால் பெருமாளுக்கு ஒவ்வொரு நாளும் தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த ரத்தினங்கள் கொண்டு அலங்காரம் செய்து, பட்டாடை உடுத்தி, கவசங்கள் அணிவித்து, வாசம் மிகுந்த அற்புத மலர்களை கொண்டு பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வந்தார். புரட்டாசி மாதம் துவங்கியதும் நாள் தவறாமல் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து, சுத்தமாக பெருமாள் முன்பு அமர்ந்து, அர்ச்சனை செய்ய துவங்கி விடுவார். அப்படி முதல் நாள் அர்ச்சனை செய்யும் பொழுது அர்ச்சனை பூக்கள் இறைவனடி சேரும் பொழுது, மண் உருண்டைகளாக மாறிப் போனது. பூக்களால் அர்ச்சனை செய்கிறோமே, அது எப்படி மண் உருண்டைகளாக மாறுகிறது? என்று செல்வந்தருக்கு ஒரே குழப்பம்.
ஏதோ பிரம்மை பிடித்தது போல இருக்கிறது என்று நினைத்து அர்ச்சனையை குழப்பத்தோடு முடித்துவிட்டு அன்றைய நாள் பணியை செய்ய கிளம்பிவிட்டார். செல்வந்தர் வேலையில் முழு கவனத்தோடு ஈடுபடாமல் அரைகுறையாக செய்து விட்டு, இரவு வீட்டிற்கு படுக்க சென்றார். எதனால் இப்படி ஆனது? என்று தெரியவில்லை, பெருமாளே… நீ தான் அதை எனக்கு உணர்த்த வேண்டும் என்று கூறி படுத்து விட்டார். செல்வந்தர் கனவில் பெருமாள் தோன்றி, “நாளை ராமனை சந்திப்பாயாக” என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார். யார் இந்த ராமன்? எங்கிருக்கிறான்? என்று செல்வந்தர் சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்து ராமனை சந்திக்க புறப்பட்டார்.
ராமன் என்பவர் வயதான ஒரு ஏழை விவசாயி. மண் குடிசையில் அமர்ந்து, மண்ணால் ஆன பெருமாளை வைத்து தினந்தோறும் மனதார “கோவிந்தா” “கோவிந்தா” என்று வணங்கி விட்டு வேலை பார்க்க கிளம்பி விடுவார். எதுவுமே அவரிடம் இல்லை என்றாலும், தனக்கென இது வேண்டும், அது வேண்டும் என்று ஒருநாளும் அந்த ஏழை பெருமாலிடம் வேண்டியதில்லை. “கோவிந்தா.. கோவிந்தா..” என்று அவரது நாமத்தை மட்டும் நா வறண்டாலும் ஜெபித்துக் கொண்டே இருப்பார். இந்த அளவிற்கு பெருமாளின் மீது தூய்மையான அன்பு செலுத்தி வருவதை செல்வந்தன் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்தார்.
இதையும் படிக்கலாமே:
புரட்டாசி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு
அப்போது ஏழையின் முன் பெருமாள் தோன்றி அருள் புரிந்தார். அக்கணமே ஏழை விவசாயி மோட்சம் பெற்றார். அப்போது தான் ஆடை, ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு சுயநலத்துடன் இறைவனை வேண்டினால் ஒரு பலனும் இல்லை, எதுவுமே நம்மிடம் இல்லை என்றாலும், நமக்கென எதுவும் கேட்காமல், தூய்மையான பக்தியுடன் பெருமாளை வழிபட்டாலே, நமக்கு வேண்டியதெல்லாம் அவரே நிறைவேற்றி வைப்பார். ஏழைக்கு மோட்சம் கிடைத்த அந்த நாள், புரட்டாசி சனிக்கிழமை ஆகும். எனவே ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமை தோறும் இறைவனின் திருநாமத்தை மட்டும் தூய்மையான பக்தியுடன் எதுவும் கேட்காமல் வேண்டிப் பாருங்கள், உங்கள் பக்திக்கு பெருமாளே செவி சாய்ப்பதற்கு ஓடி வருவார்.