பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

astrology-4
- Advertisement -

பூசம்:

pusam

இதனை புஷ்யம் என்றும் குறிப்பிடுவார்கள். சமஸ்கிருதத்தில் ‘புஷ்டி’ என்றால் ‘பலம்’ என்று பொருள். அதிலிருந்து மருவியது புஷ்யம். மூன்று நட்சத்திரங்கள் புடலங்காய் போலத் தோற்றமளிக்கும். 27 நட்சத்திரங்களில், சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று!

- Advertisement -

பொதுவான குணங்கள்:

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகள். புத்திக்கூர்மை உள்ளவர்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளக்கூடியவர்கள். சுதந்திரமாக வாழ நினைப்பவர்கள். அடக்கமானவர்கள். அதே நேரம், ஆத்திரமும் கோபமும் உள்ளவர்கள்.

- Advertisement -

astrology-wheel

பூசம் நட்சத்திர சிறப்பியல்புகள்

ஜோதிட சாஸ்திரத்தில் சனீஸ்வரன் நீதிமான் என வர்ணிக்கப்படுகிறார். அந்த சனீஸ்வர பகவானுக்கு உரிய பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீதி, நேர்மை, நியாயத்திற்காக பாடுபடுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு உடல் உறுதியும், மன உறுதியும் அதிகமுண்டு. எத்தகைய சிக்கலான பிரச்சனைகளுக்கும் சுலபமாக தீர்வுகளை கண்டு செயல்படுவார்கள். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக பூச நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்களின் ஆன்மீக வாழ்க்கைக்காக தங்களின் குடும்பம், செல்வம் ஆகிய அனைத்தையும் துறந்து விடும் திட சித்தத்தையும் பெற்றிருப்பார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் அனைவராலும் விரும்பப்படுகிறவர்களாக இருப்பார்கள். பலவகையான விடயங்களைப் பற்றியும் ஓரளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். எல்லா விடயங்களிலும் தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள். இவர்களில் பலர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தங்களின் கடுமையான உழைப்பின் மேலும் வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். நெருக்கடியான நிலைகளிலும் திறம்பட செயலாற்றும் குணம் கொண்டவர்கள்.

- Advertisement -

சனி பகவானுக்குரிய நட்சத்திரமாக இருப்பதால் இவர்களில் பெரும்பாலானோருக்கு மனதில் ஏதேனும் இனம் புரியாத ஒரு சோகம் இருக்கும். பிறருக்கு தங்களால் முடிந்த எந்த வகையிலும் உதவி செய்வதற்கு தயாராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு சவாலாகவும், கடினமாக இருக்கும் விடயங்களையும் இவர்கள் தங்களின் திறமையால் எளிதில் சாதித்து வெற்றி பெறுவார்கள். ஒழுக்கமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். தவறு செய்தவர்களை மன்னிக்கும் குணம் இருக்கும். தங்களின் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்களாக இருப்பதால் தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். உறவினர், நண்பர்கள், விருந்தினர்களை உபசரிப்பதில் சிறந்தவர்கள். பொறுமை குணம் அதிகம் இருந்தாலும் இவர்களுக்கு சில சமயங்களில் சட்டென கோபம் ஏற்பட்டு விடும். தங்களின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் போது எரிமலையாக வெடிப்பார்கள். வாழ்வில் எந்த ஒரு விடயத்திலும் சுலபத்தில் அஞ்சாமல், மன உறுதியுடன் எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள். மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இந்த நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். முக அமைப்பு பிறரை கவரும் வகையில் இருக்கும்.

astro wheel 1

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செய்நன்றி மறவாதவர்களாக இருக்கின்றனர். பாரம்பரிய பழக்க வழக்கங்களில் பற்றுடையவர்கள். அதேநேரம் புதுமையை வரவேற்கவும் தயங்காதவர்கள். மனதளவிலும் பிறருக்கு தீங்கு செய்வோர் நினைக்காதவர்கள். இந்த பூச நட்சத்திரக்காரர்களுக்கு சிறந்த கற்பனை வளம் அதிகம் இருப்பதால் கதை, கவிதை, கட்டுரை எழுதுதல் போன்ற துறைகளில் பிரகாசிப்பார்கள். இளமை காலங்களில் போராட்டமான வாழ்க்கையை ஏற்பட்டாலும் நடுத்தர வயது மற்றும் பிற்பாதி வயதுகளில் மிகுந்த சொத்துக்களை சேர்ப்பார்கள். எவ்வளவு அதிகம் சம்பாதித்தாலும் எப்போதும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். ஒரு சிலர் தங்களின் உழைப்பால் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் மாறுவார்கள். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பும் அதனால் மிகுதியான ஆதாயமடைவார்கள். திரைப்படத்துறை, இரும்பு சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி, கப்பல்துறை பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் துறைகளில் ஈடுபட்டு அதிகம் வருமானம் பெறுவார்கள்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலும் காதல் போன்ற விடயங்களில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைந்தவர்களாக இருக்கின்றனர். எனினும் தங்களுக்கு வருகின்ற வாழ்க்கைத்துணையிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். சற்று சபல புத்தி இருந்தாலும் ஒழுக்கக் கேடான செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை அதிகம் விரும்புவார்கள். தங்களுக்கு உற்றார், உறவினர்கள் செய்த உதவிகளை ஒருபோதும் மறவாமல், தக்க சமயத்தில் அவர்களுக்கு பதில் உதவி செய்வார்கள். எப்படிப்பட்ட உணவு என்றாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பதில் இன்பம் காண்பார்கள். வாழ்வில் வசதியான வீடு, வாகனம் ஆகியவை அமையப் பெறுவார்கள்.

பூச நட்சத்திரம் 1 – ஆம் பாதம்

பூச நட்சத்திரத்தில் முதலாவது பாதத்தை சூரியபகவான் ஆள்கிறார். எனவே இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே அதிக சுறுசுறுப்பு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எளிதில் நோய் நொடிகள் அண்டாது. மிகப்பெரும் கூட்டத்திலும் தங்களின் தனித்தன்மையால் அனைவரின் கவனத்தையும் பெறுவார்கள். இவர்களுக்கு தந்தையுடன் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதே நேரம் விளையாட்டுப் போட்டிகளிலும் அதிகம் ஈடுபட்டு மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்று பரிசுகளை வெல்வார்கள். இவர்களிடம் தலைமை பண்பு அதிகமிருக்கும். பிறரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்கிற நோக்கம் தெரிந்தவர்கள். தவறான காரியங்களை ஒருபோதும் செய்யமாட்டார்கள். மற்றவர்கள் அப்படி செய்வதையும் அனுமதிக்க மாட்டார்கள். சூடான உணவுகளை அதிகம் விரும்பி உண்பார்கள். மனதிற்கினிய வாழ்க்கைத்துணையை அமையப் பெறுவார்கள். சூரியனுக்குரிய பாதம் என்பதால் அடிக்கடி உஷ்ண சம்பந்தமான நோய்களால் அவதிப்படுவார்கள். வாழ்வில் சீக்கிரத்திலேயே வாழ்வில் உன்னதமான நிலையை அடைவார்கள்.

பூச நட்சத்திரம் 2 – ஆம் பாதம்

பூச நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தை புதன் பகவான் ஆள்கிறார். எனவே இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே மிகுந்த சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். நகைச்சுவையாக பேசும் திறன் பெற்றவர்கள். வாழ்க்கையில் அனைத்து வசதிகளும் பெற்று வாழ விரும்புவார்கள். தங்களின் பெற்றோர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருப்பார்கள். அவர்கள் சொல்கின்ற விடயங்களை தயங்காமல் செய்து முடிப்பார்கள். தங்களின் உறவினர்களோடு அதிகம் நெருங்கிப்பழக விருப்பம் இருக்காது. எந்த ஒரு நபரிடமும் நட்புறவோடு மட்டுமே இருக்க விரும்பும் நபர்களாக இந்த பாதத்தில் பிறந்தவர்கள் இருக்கின்றனர். அவ்வப்போது எதையாவது நினைத்து கவலை கொண்டிருப்பார்கள். தங்களுக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணம் கொண்டவர்கள். ஒரு காரியத்தில் ஈடுபடும் போது அந்தக் காரியத்தை செய்து முடிப்பதில் எத்தனை தடங்கல்கள், பிரச்சினைகள் உருவானாலும் அனைத்தையும் தங்களின் பொறுமை குணம் மற்றும் திறமையால் முடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக அதிகம் செல்வம் சேர்க்க கடுமையாக உழைப்பார்கள். பொழுதுபோக்குக்காக பிற செயல்களில் ஈடுபடுவதை காட்டிலும் புத்தகங்கள் படிப்பதிலேயே இந்த பாதத்தினர் அதிகம் நேரம் செலவழிப்பார்கள்.

astrology wheel

பூச நட்சத்திரம் 3 – ஆம் பாதம்

பூச நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தை சுகங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான் ஆட்சி புரிகிறார். எனவே இயற்கையாகவே பிறரை கவர்கின்ற முகம், உடல் தோற்றம் பெற்றிருப்பார்கள். எத்தனை வயதானாலும் இளமை தோற்றத்துடன் காணப்படுவார்கள். வாழ்வில் எத்தனை சோதனைகள், இன்னல்கள் ஏற்பட்டாலும் அவை அனைத்தையும் தங்கள் திறமையால் வென்று, இன்புற வாழ்வார்கள். எப்பாடுபட்டாவது தாங்கள் நினைத்த காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மிகவும் விரும்புபவர்களாக இருப்பார்கள். இயற்கையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இயற்கை எழில் நிறைந்த இடங்களில் வசிக்கவே அதிகம் விரும்புவார்கள். புதிய ஆடை, அணிகலன்கள் அணிவது, விதவிதமான வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருக்கும். தீவிரமான ஆன்மீக சிந்தனை இருக்கும். செல்வங்கள் அதிகம் பெற்றவராக இருந்தாலும், அச்செல்வங்களை தான, தர்ம காரியங்களில் செலவழிப்பதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். வாகனங்கள் மீது தீவிர பற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள். தாங்கள் பயணிக்கும் பழைய வாகனங்களை மாற்றி விட்டு புதிய வாகனங்களாக அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு போதும் சண்டையை விரும்பாதவர்கள். சண்டை போடுபவர்களை சுலபத்தில் சமாதானப்படுத்தி விடுவார்கள். சுக்கிரன் இந்தப் பாதத்தை ஆள்வதால் பிற உயிர்களின் மீது அன்பு அதிகம் இருக்கும். தங்கள் வீட்டிலும் இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் ஏதேனும் செல்லப்பிராணிகளை வளர்ப்பார்கள்.

பூச நட்சத்திரம் 4 – ஆம் பாதம்

பூச நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தை ஆளும் கிரகமாக செவ்வாய் பகவான் இருக்கிறார். எனவே இயற்கையிலேயே வீரப்பராக்கிரமம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். தங்களின் உடல் பலத்தை பேணிக் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். உறவுகளோடு சேர்ந்து வாழ்வதையே விரும்புவார்கள். எந்த காலத்திலும் தங்கள் உறவினர்களை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார்கள். வாழ்வில் அனைத்து சுகங்களையும் அனுபவித்து வாழ வேண்டும் என நினைப்பார்கள். தங்களின் சிறந்த பேச்சாற்றல் மூலம் தங்களுக்கு வேண்டிய காரியங்கள் அனைத்தையும் சாதித்துக் கொள்வார்கள். சுயகவுரவம் மிக்கவர்கள். தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டால் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். திடமான மன உறுதி இருந்தாலும் அவ்வப்போது எதையாவது நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். தங்களின் குழந்தைகளை மிகவும் நேசிப்பார்கள். அவர்களுக்கு சிறந்த வாழ்வை கொடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். முன்கோப குணம் அதிகமிருக்கும். சமயங்களில் அந்த முன்கோபத்தால் பிறரை மனம் வருந்த செய்துவிட்டு பின்பு அதற்காக மிகவும் வருந்துவார்கள். பிறருக்கு தாங்கள் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்க வேண்டும் என்பதில் அக்கறை கொள்வார்கள். அதற்காக சிறந்த ஒப்பனை செய்து கொள்வார்கள்.

பூசம் நட்சத்திரத்தில் செய்ய கூடிய காரியங்கள்

மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், குழந்தைக்கு பெயர் சூட்டுதல், முடி இறக்குதல், காது குத்துதல், புதிய ஆடை, ஆபரணம், வாகனம் வாங்குதல், புதிய வீடு, மனை வாங்குதல், புதிய வீடு கட்டும் வேலை ஆரம்பித்தல், மனை கோலுதல், வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு தொடங்குதல், விவசாயத்தில் விதை விதைத்தல், உயர்ந்த பதவிகளில் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளல், விருந்துண்ணல், புதிய வேலையில் சேர்தல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் – பெண் நட்சத்திரக்காரர்களை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

பூசம் நட்சத்திர பரிகாரங்கள்

பூசம் நட்சத்திரகாரர்கள் தங்கள் நட்சத்திர அதிபதியான சனி பகவானை சனிக்கிழமைகளில் கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, சனி பகவான் மந்திரங்கள் துதித்து வழிபட்டு வர வேண்டும். வருடத்திற்கொருமுறை திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு சென்று, சனி ப்ரீத்தி பூஜை செய்து வழிபட வேண்டும். சனி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும் பூஜித்து வர வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும். தினமும் நீங்கள் காலை உணவை சாப்பிடும் முன்பு உணவிலிருந்து கொஞ்சத்தை எடுத்து காகங்களுக்கும், சாப்பிட்டு முடித்த பின்பு உணவின் மீதத்தை தெரு நாய்களுக்கு வைப்பது சனி தோஷத்தை போக்கும்.

crow feeding

சனிக்கிழமைகளில் துறவிகள், யாசகர்களுக்கு உங்கள் சக்திக்கேற்ப அன்னதானம் மற்றும் பொருள் தானம் செய்யலாம். உங்கள் வீடுகளில் நறுமணமுள்ள மலர்கள் பூக்கும் செடிகளை வளர்ப்பதால் இறையாற்றல் உங்கள் வீடுகளில் நிறையும். கடின உழைப்பிற்கு பெயர் பெற்ற விலங்குகளான கழுதைகளுக்கு உணவளிப்பதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கி, செல்வச்செழிப்பு உண்டாகும்.

பூச நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய கோயில்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் இருக்கின்ற அருள்மிகு திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டும்.

Sani Bagavan

புதுச்சேரி மாவட்டத்தில் இருக்கும் திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்று சிவபெருமானையும், சனீஸ்வர பகவானையும் பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்

பூச நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட தெய்வமாக தட்சிணாமூர்த்தி இருக்கிறார். இவரை தினந்தோறும் வழிபடுவதால் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும்.

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை:

அதிர்ஷ்டக் கிழமைகள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட விருட்சம் : அரச மரம்
அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள் : 8
அதிர்ஷ்ட ரத்தினம் : முத்து
அதிர்ஷ்ட உலோகம்: இரும்பு
அதிர்ஷ்ட பறவை : கடற் காகம்
அதிர்ஷ்ட ஆங்கில எழுத்துகள் : H,D

Guru Dhatchinamurthy

ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, சுவாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை அடுத்த இதழில் காண்போம்.

மற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இது போன்ற மேலும் பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -