ராமனுக்கும், ரஹீமுக்கும் என்ன சம்மந்தம் – இதோ விளக்கம்

Raman-1

ஜனங்களில் பலர் பொதுவாக “ராமனுக்கும், ரஹீமுக்கும்” என்ன தொடர்பு இருக்கிறது எனக் கேட்பார்கள். ஆனால் அதில் ஒரு சூட்சமமான தொடர்பு இருக்கிறது. எப்படியென்றால் அந்த “அயோத்தி சக்ரவத்தியான” ராமன் தனது சிறு வயதில், தனது இரவு உணவை சந்திர தரிசனத்தை கண்ட பிறகே உண்பார். எனவே தான் அவர் ராமச்சந்திரன் என அழைக்கப்பட்டார். அதுபோலவே ரஹீமும் சந்திரனின் “மூன்றாம் பிறை” தரிசனத்தை கண்ட பிறகே தனது “ரமலான் மாத நோன்பை முடித்து உணவை உண்பார். இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கிடையில் இருக்கும் இந்த சூட்சமமான ஒற்றுமை நிஜத்திலும் ஓரிடத்தில் நடக்கிறது. அந்த இடம் விருத்தாசலம் அருகில் “ஸ்ரீமுஷ்ணம்” என்ற ஊரில் அமைந்திருக்கும் “பூவராக சுவாமி திருக்கோவில்” இருக்கும் பகுதியாகும்.

Raman

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் “ஹஜ்ரத் சாஹிப் ஷுத்தாரி வலியுல்லாஹ்” என்ற இஸ்லாமிய இறைஞானி வாழ்ந்து வந்தார். அப்போது இப்பகுதியை ஆண்டு வந்த “ராணி மங்கம்மாளின்” நோய் பாதிப்பை தன் மாந்திரீக சக்தியால் நீக்கினார். அதற்கு ராணி மங்கம்மாள் பிரதி உபகாரம் செய்ய முற்பட்ட போது அதை வலியுல்லாஹ் ஏற்க மறுத்துவிட்டார். மேலும் இப்பகுதிக்கருகில் ஆட்சி புரிந்த “ஆற்காடு நவாபின்” ஒரு பிரச்சனையை தீர்த்து வைத்தார் வலியுல்லாஹ். அதற்கு காணிக்கையாக 365 ஏக்கர் நிலப்பரப்பை அவருக்கு காணிக்கையாக தந்தார் நவாப். இந்த நிலப்பகுதிலேயே வலியுல்லாஹ் அடக்கம் செய்யப்பட்டார். இந்த நிலப்பரப்பின் வழியாகத் தான் ஒவ்வொரு வருடமும் ஸ்ரீமுஷ்ண பூவராக சுவாமி மாசி மகத்தன்று தீர்த்தவாரிக்கு செல்கிறார்.

அப்போது கோவில் சார்பில் சீர்வரிசைப் பொருட்கள் வலியுல்லாவிற்க்கு மரியாதையாக இந்த தர்கா ஊழியர்களிடம் அளிப்பார்கள். அதை அந்த தர்காவிற்குள் கொண்டு சென்று பதில் மரியாதையாக அந்த தர்கா சார்பில் வேறு சீர்வரிசை பொருட்களை பூவராக சுவாமிக்கு அந்த இஸ்லாமியர்கள் வழங்குவார்கள். பல ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும் இந்த நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்களும், ஹிந்துக்களும் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள். மதங்களின் பெயரால் உலகெங்கிலும் சண்டையிடும் மனிதர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.