ராமானுஜர் சிபாரிசுக்காக நேரில் தோன்றிய திருப்பதி பெருமாள்

Perumall-compressed
- Advertisement -

நம் பாரத நாட்டின் பூர்வீக மதமான “இந்து மதம்” உலகின் மிகப்பழமையான மதங்களில் ஒன்றாகும். பல்லாயிரம் வருடங்களாக இந்த நாட்டின் மக்கள் பின்பற்றிவரும் இந்து மதத்திற்கு இடையில் சில காலம் வேற்று மத ஆக்கிரமிப்பாளர்களால் சிறிது தொய்வு ஏற்பட்டது. அப்படிப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் பிறந்து, பாரதமெங்கும் பயணித்து, ஷீணமடைந்திருந்த “வைணவ மதத்தை” தனது “விஷிஷ்டாத்வைத” தத்துவத்தை கொடுத்து மீட்டெடுத்தவர் “யதிராஜர்” என்று வைணவர்களால் அழைக்கப்படும் “ஆன்மிகப் புரட்சியாளர்” “ஸ்ரீ ராமானுஜர்”. அவரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு காண்போம்.

ramanujar

ஒரு முறை “ஸ்ரீ ராமானுஜர்” “திருப்பதியில்” தனது சீடர்களுடன் தன் மடத்தில் தங்கியிருந்தார். அப்போது கெண்டி எனும் மோர் விற்கும் பெண் அவரது ஆசிரமத்திற்கு வந்தாள். அது மிகவும் கோடை காலம் என்பதால் ஸ்ரீ ராமானுஜரும் அவரது சீடர்களும் அவளிடம் மோர் வாங்கி குடித்தனர். எல்லாம் குடித்த பின்பு தாங்கள் குடித்த மோருக்கான விலையென்ன எனக் கேட்டார் ராமானுஜர். அப்போது கெண்டி தனக்கு பணம் ஏதும் வேண்டாம் என்றும், ஸ்ரீ ராமானுஜர் தனக்கு வைகுண்டம் செல்லும் அருளாசியை வழங்க வேண்டும் எனக் கேட்டாள். அந்த எளிமையான மோர் விற்கும் பெண்ணாண கெண்டியின் உன்னதமான எண்ணத்தை கண்டு மகிழ்ந்தார் ஸ்ரீ ராமானுஜர்.

- Advertisement -

பிறகு ராமானுஜர் கெண்டியிடம், தனக்கு அத்தகைய சக்தி கிடையாதென்றும் “திருமலையில்” நின்றிருக்கும் அந்த “ஸ்ரீநிவாசனுக்கே” அத்தகைய ஆற்றல் இருப்பதாக கூறினார். மேலும் தான் அந்த திருமலை ஆண்டவனிடம் கெண்டிக்கு “வைகுண்டம் பிராப்தி” தருமாறு கூறி ஒரு சிபாரிசு ஓலை தருவதாகவும், அதை அந்த பெருமாளிடம் தந்தால் அவர் உனக்கு வைகுண்ட பதவி அளிப்பார், என்று கூறி ஒரு சிபாரிசு ஓலை எழுதி கெண்டியிடம் கொடுத்தார் ராமானுஜர். இக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ ராமாநுஜரின் சீடர்கள், தங்கள் குருநாதர் அந்த கல்வியறிவில்லாத பெண்ணிடம் வேடிக்கை செய்கிறார் என நினைத்துக் கொண்டனர்.

Lord Perumal

அதைப் பெற்றுக்கொண்ட கெண்டி நேரே திருமலைக்குச் சென்று “வராக மூர்த்தியின்” திருக்குளத்தில் நீராடி, அவரை வணங்கி பின்பு ஏழுமலையானின் தரிசனத்திற்கு அவரது சந்நிதிக்கு சென்றாள். அப்போது ஆரத்தி காட்டிய அர்ச்சகர்களிடம், ஸ்ரீ ராமானுஜர் தனக்கு தந்த சிபாரிசு ஓலையை அந்த வெங்கடேஸ்வரரிடம் வைக்குமாறு கூறி அந்த ஓலையை அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். ராமானுஜர் ஏதோ ஒரு ஆச்சர்யத்தை செய்யப் போகிறார் என்று நினைத்து அந்த அர்ச்சகர்கள், கெண்டியிடமிருந்து அந்த ஓலையை வாங்கி பெருமாளிடம் வைக்கச் சென்ற போது, அந்த சிபாரிசு ஓலையை அந்த “திருமலைவாசன்” தனது கைநீட்டி பெற்று கொண்டு “ஸ்ரீ ராமானுஜர் கூறியபடி உனக்கு வைகுண்ட பதவி அளித்தேன்” எனக்கூறிய பெருமாள் மிகுந்த ஒளி கொண்ட தனது “கருட வாகனத்தை” தோன்றச் செய்தார். அதில் கெண்டி ஏறி அமர்ந்து கொண்டு அங்கிருக்கும் அனைவரும் காண வைகுண்டம் சென்றாள். இக்காட்சியைக் கண்ட அங்கிருந்த மக்களும் இந்நிகழ்வை கேள்விப்பட்ட ஸ்ரீ ராமானுஜரின் சீடர்களும் அந்த ஏழுமலையாண்டவனின் அருளாற்றலையும், ஸ்ரீ ராமானுஜரின் “ஆன்மீக யோகசக்தியையும்” உணர்ந்து அவர் தங்களோடு இருப்பதே மிகப் பெரும் பாக்கியம் என எண்ணி மெய்சிலிர்த்தனர்

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
புல்லட்டிற்கு கோவில் கட்டி வழிபடும் கிராமம் பற்றி தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், சுவாரஸ்யங்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -