ரேஷன் பருப்பிலும், சூப்பரான சாம்பார் வைக்கலாம். அதற்கு முக்கியமான இந்த 3 பொருட்கள் தேவை.

- Advertisement -

பொதுவாகவே, ரேஷன் கடையில் இருந்து வாங்கிய பொருட்களை வைத்து சமைத்தால், சாப்பாடு சுவையாக இருக்காது என்பதுதான் நம் எல்லோரது கருத்தும். ஆனால், ரேஷன் கடைகளில் கொடுக்கக்கூடிய பொருட்களும், நல்ல தரமான பொருட்கள் தான். அதாவது, மெறுகேற்றபடாத, பாலிஷ் போடப்படாத பொருட்கள் என்று சொல்லலாம். செயற்கையான எந்த கலப்படமும் இல்லாத பொருட்கள். அதனால்தான், அதில் எளிதில் பூச்சு வருகிறது. செயற்கையான பொருட்கள் கலக்கப்பட்டு, பூச்சி வராமல் இருக்க பாலிஷ் போடப்பட்ட பொருட்களில் தான், சீக்கிரம் வண்டு பிடிக்காது. ஆனால், அது ஆரோக்கியத்திற்கு கேடு என்பது நமக்குப் புரிவதில்லை. பூச்சி வராத பொருள் தான், நல்ல பொருள் என்று மனசுல பதிஞ்சிடுச்சு! சரி. ரேஷன் பருப்பில் சுவையாக சாப்பாட்டு சாம்பார் எப்படி வைப்பது என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாமா?

thuvaram-paruppu

முதலில் ரேஷன் பருப்பை 100 கிராம் அளவு எடுத்து குக்கரில் போட்டு, கொஞ்சம் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி இரண்டிலிருந்து மூன்று முறை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பாக, 1 கப் அளவு பருப்பு சேர்த்தால், 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து, அந்த பருப்புடன் உரித்த 6 பல் பூண்டு, சீரகத்தூள் – 1 ஸ்பூன், வெந்தயம் 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து பருப்பை வேகவைத்துக் கொள்ளுங்கள்.(இந்த மூன்று பொருட்களை சேர்த்து, வேகவைப்பதால் பருப்பு சுவையாக மாறிவிடும்.) மஞ்சள் தூள் போட மறந்து விடாதீர்கள். குக்கரை மூடி, மிதமான தீயில் 3 விசில் வைத்தால் போதும். இந்த பருப்பு உங்களுக்கு நன்றாக வேக வில்லை என்றால், இதனுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். பருப்பை கொழகொழவென்று குழைய விடக்கூடாது. பருப்பு கையில் எடுத்தால் மசியும் அளவிற்கு வெந்திருக்க வேண்டும்.

- Advertisement -

பிரஷர் அடங்கி குக்கரில், இப்போது வெந்த பருப்பு வாசனையாக தயாராகிவிட்டது. அதில், உரித்த சின்ன வெங்காயம் 6, நறுக்கிய பெரிய பழுத்த தக்காளி 1,   பெருங்காயம் 1/4 ஸ்பூன்,  கருவேப்பிலை ஒரு கொத்து, ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சேர்த்துக் கொள்ளலாம். (உங்களிடம் சாம்பார் பொடி இருந்தால் அதைக் கூட தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.) இறுதியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவேண்டும். கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், அது அவரவர்களுடைய இஷ்டம். எந்த காய் போட்டு வேணும் என்றாலும் சாம்பார் வைத்துக் கொள்ளலாம் அல்லவா?

Sambar

இப்போது, இந்த குக்கரை அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சாம்பார் நன்றாக கொதி வந்த பின்பு, புளிக் கரைசலை ஊற்றி, குக்கர் மூடியைப் போட்டு, விசில் கூட விட வேண்டாம். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, ஏழு நிமிடங்கள் சாம்பாரை கொதிக்க வைத்தால், சூப்பரான சுவையான வாசனையான, சாம்பார் தயார் ஆகிவிடும். காய்கறிகளை ரொம்பவும் குழைய விட்டீர்கள். ஏனென்றால், காய்கறிகள் குழைந்தால், சாம்பாரின் சுவை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. காய்கறிகள் சரியான அளவில் பதமாகத்தான் வேக வேண்டும்.

- Advertisement -

இறுதியாக ஒரு தாளிப்பு போட்டு விடுங்கள். ஒரு சிறிய கடாயில், ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் 2, வரமிளகாய் சேர்த்து, வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை கைப்பிடி அளவு போட்டு, சிவக்க வறுத்து தாளிப்பு போட்டீர்கள் என்றால், கமகம சாம்பார், இன்னும் தூக்கல் ஆகிவிடும். கொத்தமல்லி தழையை தூவி பரிமாறுங்கள்.

sambar 2

பின் குறிப்பு: இதே முறையில், காய்கறிக்கு பதிலாக, மொச்சைக் கொட்டையையும், மாங்காயையும் சேர்த்து இந்த சாம்பாரை வைத்தால், மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (மொச்சைக் கொட்டையை முந்தைய நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். மொச்சையை, குக்கரில் 3 விசில் வைத்து, தனியாக வேக வைத்து எடுத்து சாம்பாரில் சேர்க்க வேண்டியது தான். மாங்காய் சேர்க்கும்போது, மொச்சைக் கொட்டையையும், வேகவைத்த தண்ணீரோடு, சாம்பாரில் ஊற்றி விட வேண்டும் அவ்வளவுதான்.) மாங்காய் சேர்த்தால், புளி கரைசலை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால், நாளைக்கு உங்கள் வீட்டிலும் ரேஷன் பருப்பில் இந்த சாம்பாரை வைத்து தான் பாருங்களேன்!

இதையும் படிக்கலாமே
ரோட்டுக்கடை பானி பூரியை, நம் வீட்டிலேயே செய்ய முடியுமா? அதுவும், இவ்வளவு சுலபமாக!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -