ரேஷன் அரிசியில் இப்படி ஒருமுறை சாதம் வடித்து பாருங்கள். கடையில் வாங்கிய 50 ரூபாய் அரிசி போலவே, ரேஷன் அரிசியில் வடித்த சாதம் எந்த ஒரு வாசமும் இல்லாமல், வெள்ளையாக கிடைக்கும்.

rice9
- Advertisement -

இன்றும் நிறைய பேர் பசியை ஆற்றக்கூடிய வேலையை இந்த ரேஷன் அரிசி தான் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் நம்மில் நிறைய பேர் இந்த ரேஷன் அரிசியை வாங்கி பயன்படுத்துவதே கிடையாது. பாலிஷ் போட்டு கடையில் வாங்க கூடிய அரிசியைவிட, பாலிஷ் போடாமல் பட்டை தீட்டாமல் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியில் இருக்கக்கூடிய சத்து நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்று. ஆனால் ரேஷன் அரிசியில் சாதம் வடித்தால், சாதம் வெள்ளையாக இருக்காது. அது மட்டுமல்லாமல் ரேஷன் அரிசியல் சாதம் வடிக்கும் போது லேசாக ஒரு வாடை வீசும். அந்த வாசம் நிறைய பேருக்கு பிடிக்காது.

ரேஷன் அரிசியை பின் சொல்லக்கூடிய முறையில் கழுவி பின், சொல்லக்கூடிய முறையில் சாதம் வடித்துப் பாருங்கள். கடையில் வாங்கிய அரிசி போலவே ரேஷன் அரிசியில் சாதம் வடிக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நேரத்தைக் கடத்தாமல் அந்த குறிப்பை பார்த்து விடுவோம்.

- Advertisement -

ரேஷன் அரிசியில் கருப்பு அரிசி, வண்டு, தூசு, அதிகமாக இருக்கும். ரேஷன் அரிசியை வாங்கியதும் முறத்தில் போட்டு புடைத்து எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு தேவையான அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அரிசியில் சுடுதண்ணீரை ஊற்றி ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டு, நன்றாக உரசி கழுவ வேண்டும். கொதிக்கின்ற தண்ணீரை ஊற்றி கையை விட வேண்டாம். ஒரு கரண்டியை விட்டு நன்றாக அரிசியை களைந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள்.

இரண்டாவது முறை அந்த ஈர அரிசியில் கொஞ்சமாக கல்லுப்பு போட்டு உங்கள் கையை கொண்டு முதலில் நன்றாக உரசி விட்டு, அதன் பின்பு சுடு தண்ணீரை ஊற்றி கழுவி இரண்டாவது முறை இந்த தண்ணீரையும் கீழே ஊற்றி விடுங்கள். அதன் பின்பு இரண்டிலிருந்து மூன்று முறை சுடு தண்ணீர் ஊற்றியும் கழுவலாம். அல்லது பச்சை தண்ணீர் ஊற்றியும் கழுவிக் கொள்ளலாம். மொத்தமாக ரேஷன் அரிசி ஆக இருந்தால் ஐந்து முறை கழுவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (கழுவிய தண்ணீர் தெளிந்த தண்ணீராக வர வேண்டும்.)

- Advertisement -

இப்போது ரேஷன் அரிசியை கழுவி விட்டோம். ரேஷன் அரிசி பழுப்பு நிறத்திலிருந்து கொஞ்சம் வெள்ளை நிறத்திற்கு மாறி இருக்கும். அதை நீங்களே பார்க்கலாம். அடுப்பில் உலை வைத்து விடுங்கள். தண்ணீர் கொதி வந்ததும் ரேஷன் அரிசியை போட்டு நன்றாக வேக வையுங்கள். (பக்கத்து அடுப்பில் இன்னொரு சொம்பில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அதையும் கொதிக்க வையுங்கள், தேவைப்படும்.) ரேசன் அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் அந்த சாப்பாட்டு பானையில் இருக்கும் தண்ணீரை கீழே வடித்து விடுங்கள்.

இப்போது முக்கால் பாகம் வெந்த இந்த ரேஷன் அரிசியில் மீண்டும் சுடு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். (பக்கத்து அடுப்பில் சுடுதண்ணீர் வைக்கச் சொன்னது இதற்காகத்தான்.) இதே போலவே இன்னொரு முறையும் சாதத்தில் கொதிக்கின்ற தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, மீண்டும் சுடு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, ரேஷன் அரிசியை வேக வைத்து சாதம் வடித்தால், இது ரேஷன் அரிசியில் வடித்த சாதம் என்று நிச்சயமாக யாரும் நம்ப மாட்டாங்க. (இரண்டு முறை அரிசியை கொதி விட்டு அந்த தண்ணீரை வடிக்கும்போது ரேஷன் அரிசியில் இருக்கும் வாடை எல்லாம் சுத்தமாக நீங்கி விடும். அதற்காகத்தான் இரண்டு முறை சாதம் வேகும்போது தண்ணீரை மாற்றுகிறோம்.)

முதலில் நீங்க வடித்த கஞ்சி தண்ணீருக்கும், இரண்டாவதாக நீங்கள் ஊற்றி எடுத்த கஞ்சித்தண்ணீருக்கும் நல்ல வித்தியாசம் தெரியும். இன்னும் கொஞ்சம் உங்களுக்கு சாதம் வெள்ளையாக வரவேண்டும் என்றால் மூன்று முறை கூட இப்படி தண்ணீரை மாற்றி வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய சவுகர்யம் தான். இவ்வளவு வேலையோடு ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் எல்லோருக்கும் வரும்.

ஆனால் ரேஷன் அரிசியை சாப்பிட கூடிய சாதாரண ஏழை மக்களுக்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக அமையட்டும். ரேஷன் அரிசியில் அவர்கள் நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்பதற்காக பகிரப்பட்டு உள்ள குறிப்பு தான் இது. நீங்கள் ரேஷன் அரிசி சாப்பிடுபவர்களாக இருந்தால் இந்த குறிப்பை படித்து பலன் பெறலாம். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்தவர்கள் ரேஷன் அரிசியை வாங்கி பயன்படுத்தினால் அவர்களுக்கு இந்த குறிப்பை நீங்கள் சொல்லிக் கொடுங்கள்.

- Advertisement -